Wednesday, June 10, 2009

மாவீரர் நாள் உரை 2008


தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
கார்த்திகை 27, 2008.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.
தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் புனிதநாள்.
ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தைஇ ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.
எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாகஇ தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மானவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசியநாள்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.
இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன்இபாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகிறது. எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளிகொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாளச் சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.
மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம்கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சிபெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபடமுடியாது. மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டிவந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.
எனது அன்பான மக்களே!
என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்துவருகிறது. சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டுவருகிறது.
தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம். இந்த நோக்கத்தைச் செயற்படுத்திவிடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்துவருகிறது.
தனது முழுப் படைப்பலத்தையும் ஆயுதபலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்களத்தேசம் எமது மண்மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்திவருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடிவருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இனஅழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.
இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.
வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.
இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.
சிங்களத்தேசம் ஆக்கிரமித்து அடிமைகொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.
இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழவிரும்புகிறோம். ஆங்கிலேயக் காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிவருகிறோம்.
சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வௌ;வேறு காலகட்டங்களில் வௌ;வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டுவந்திருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள்.
அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்கமுனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது. சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வுசெய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.
தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம் நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை.
சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுக்களிற் பங்குபற்றிவந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்டபோதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவவழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.
பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம். போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.
இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினாலன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.
உலக அரங்கிற் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை. புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறீலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது. பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்துபோன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.
பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்களத்தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.
இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது. எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்தன் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டின்
புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்புமீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தின் சிங்கள அரசின் இனஅழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம்கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப்பணிகளைப் பெரும் குற்றவியற்செயல்களாக அடையாளப்படுத்தின் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.
இந்நாடுகளின் ஒருபக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்களத்தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.
சிங்களத்தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர்தேசத்தின்மீது போர் தொடுத்தது. சர்வதேசத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலகநாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலைகூடத் தெரிவிக்கவில்லை. மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கிவருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இனஅழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்துவருகிறது.
இன்று சிங்களத்தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவவழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது. தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ்த்; தமிழர்களை ஆட்சிபுரியவேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனாற் போர் தீவிரம்பெற்று, விரிவுபெற்று நிற்கிறது. இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போரன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழினத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இனஅழிப்புப் போர்.
இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது.
போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டுவருகிறது. பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களையும் எறிகணைவீச்சுக்களையும் நடாத்திவருகிறது. சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது.
பிறப்பிலிருந்து இறப்புவரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது. எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்துவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்துவருகிறது. பெரும் அநீதிகளை இழைத்துவருகிறது.
உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து இ எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்தச்சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.
சிறீலங்காப்படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமற்போகின்றனர்; கொல்லப்படுகின்றனர்.
சிங்களப்பகுதிகளில் தமிழர் காணாமற் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகிவிட்டது.
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இனஅழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.
கைதுகளும் சிறைவைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல்போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சுவட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.
இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.
சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சிகொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிடமுடியாது. எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள்.
அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.
பெரும் போருக்கு முகம்கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கேயன்றி வேறெதற்காகவுமன்று. உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்திவருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.
எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்தமக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.
எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்துநிற்கிறோம். எம்மைத் தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கிஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்துவருகின்ற இந்தக் காலமாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.
அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.
இனவாத சிங்கள அரசு தனது கபடநாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்குமிடையே பகைமையை வளர்த்துவிட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும் இந்தியாவை நாம் ஒருபோதும் பகைச்சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்றபோதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேநேரம் எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்துநிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
எனது அன்பான மக்களே!
சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்துவிடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய்வடிவம் எடுத்துநிற்கிறது. அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர்வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்கமுடிகிறது. போரைக் கைவிட்டு, அமைதி வழியிற் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல்கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமரமக்கள் வரை போருக்கே குரல்கொடுக்கிறார்கள்.
தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டிநின்ற எம்மக்களிடம் சிங்களத்தேசந்தான் போரைத் திணித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்கமறுத்து, அதனை ஏளனஞ்செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்களத்தேசந்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்களத்தேசந்தான்.
சிங்களத்தேசம் ஒரு பெரும் இனஅழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்திவருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றிவருகின்றன. வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கடந்துசென்ற இந்த நீண்ட காலஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.
மாறாகச் சிங்களத்தேசம் தனது படைக்கலச் சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலையவைத்திருக்கிறது. தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்கமறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்குத் தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.
புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்குத் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம்பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்கமறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?
தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது. சிங்களத்தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப்போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.
பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம்.
தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம். இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழத்தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையைத் திணித்துவிடத் துடிக்கிறது.
தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP