Sunday, June 7, 2009

நிகழ்வுகளும் சில நிஜங்களும்

அகிலத்தின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்களினால் நிகழ்த்தப்பட்டதென்பது ஊரறிந்த உண்மை. அத்தோடு தமிழர்களின் சுதந்திர தாயகத்திற்க்கான ஆயுதப்போராட்டத்தை அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தங்கள் ஊடகங்களில் மே மாதம் 18 ஆம் நாள் அறிவித்தது.
இந்தப் பேரவலத்திறக்கும், மனித உரிமைமீறல்கள் நிகழ்ந்தற்கும் பல சான்றுகள் இருக்கின்றது. உலகத்தின் உத்தமர்களெல்லாம் கூடும் ஐ நா சபையில் அகிலத்தையாளும் ஐயாக்கள் சிலர் இதுபற்றி ஆளுக்காள் அனுங்கினர். ஆனாலும் சிலரதை அண்டப்புளுகுகளால் அடக்கியதும், சிலரதை மணவறைச்சிரிப்புடன் மௌனங்காத்து மழுப்ப முயன்றதும் நீங்களெல்லோரும் அறிந்ததே. இது உலகறிந்த உண்மையும் கூட.
பயங்கரவாதமென்று பச்சைச்சாயம் பூசி, பாரெல்லாம் சென்று, தங்கள் பக்தாசலங்களிடம் படைவலுத்திரட்டி ஒரு தேசிய இனத்தையே பாழ்படுத்தி அழித்தொழித்த பெருமை இந்த அண்டப் பெருவெளியில் சிறிலங்கா அரசாங்கத்தைத் தவிர வேறொருவருக்குமில்லை.
தம் தாய்நிலத்தினை விழுங்கும் இராட்சத பூதத்திடமிருந்து தாயகத்தை விடுவிக்க அதன் விடுதலைக்காக, பெரும்பான்மையினரால் அடிமைப்படுத்தப்படும் ஒரு இனத்தின் சுதந்திரத்திற்க்காக, அவர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்க்காக ஆயுதமேந்திப் போராடியவர்களை அழிக்க அகிலத்தைத் திரட்டியது. அதில் வெற்றி பெற்றதாக இப்போ இறுமாப்பும் கொள்கிறது.
சிறிலங்கா அரசின் இந்தப் போர்க் கச்சேரிக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா என்பன ஆயுதங்களை வழங்கிய பக்கவாத்திய கர்த்தாக்கள். அத்தோடு அணிசேர் கலைஞர்களாக (தமிழக முதலமைச்சர் கலைஞர் உட்பட), ஜப்பான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், வியட்நாம், முன்னாள் சோவியத்யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் ஆசிய நாடுகள் என்பனவும் பங்கேற்றுக்கொண்டன. இவர்களுடன் மேற்குலகம் உட்பட ஏனைய நாடுகளும் மறைமுகமாகச் சுருதிசேர்த்து ஆதரவாக ஆலவர்ணம் பாடின.
இதற்க்கெல்லாம் ஆதாரமாக பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையான த ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா சுமார் 13.6 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான இயந்திர துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட இராணுவ தளவாடங்களை சிறிலங்காவுக்கு விற்பனை செய்துள்ளது. ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும், பல்கேரியா 1.75 ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளன என்று டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களுக்கெதிரான யுத்தத்தை சிறிலங்கா அரசு முன்னெடுக்க, அகிலமே திரண்டு நின்று சிறிலங்கா அரசுக்கு மிண்டுகொடுத்து உதவுகின்றது என்பதை, தமிழீழ விடுதலைப் புலிகளுகளும் அறிந்திருந்தனர். அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட போது அவர்களதைப் பூரணமாகப் புரிந்து கொண்டனர்.
அத்தோடு தங்களுக்கெதிராக குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாட்டையும், இந்தியாவின் செயற்பாடுகளையும் புலிகள் துல்லியமாகக் கணிப்பிட்டிருந்தனர். சிறிலங்கா அரசுக்கு இந்தியாவின் ஆயுத ஆளணி வழங்கல் சேவைகளை உலகுக்கு வெளிக்குணரவும் வயப்பட்டனர். அதன் வெளிப்பாடே 2007ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வவுனியா வான்படை கட்டுப்பாட்டுத் தளத்தின் மீது வான்புலிகளும், கரும்புலிகளும் இணைந்து தாக்குதல் நடாத்தி, அங்கிருந்த கண்காணிப்பு ராடர் கருவிகளை அழித்தனர். அத்தாக்குதலில் இந்திய இராணுவப் பொறியிலாளர்கள் இருவர் காயமடைந்தனர். இந்தச் செய்திகள் மெல்லமெல்ல வெளியே கசிந்தது.
இந்தக் காலத்தில் சிறிலங்கா அதியுத்தம அரசதலைவர் மகிந்த ராஜபக்ச விடுத்த அறிக்கையொன்றில் “இந்தியா தந்த ராடர் கருவி, தாக்குதலுக்கு வந்த புலிகளின் வானூர்தியை கண்டறியத் தவறிவிட்டது” எனறு குறிப்பிட்டிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தியா சிறிலங்காவுக்குக் கொடுத்தது (2 Dimension) ராடர் கருவி. இந்தியத் தயாரிப்பான இந்த (2 Dimension) ராடர் கருவி புலிகளின் வானூர்தியை கண்டறியத் தவறிவிட்டது என்பதால், (3 Dimension) ராடர் கருவியை இந்தியா, இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்து சிறிலங்காவுக்குக் கொடுத்ததும் நீங்களறிந்ததே.
இப்படியான சர்வதேசத்து சக்திகளின் உற்றதுணையோடு சிறிலங்கா அரசு உந்தும் யுத்த முன்னெடுப்பை விடுதலைப் புலிகளும் முழுமையாக உணர்ந்திருந்தனர். அதற்கேற்ப அவர்களும் தங்கள் யுத்த வியூகங்களை மாற்றியமைத்துக் கொண்டார்களென்று படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலப்பரப்பினைப் பாதுகாப்பதை விட சிறிலங்காப் படையினருக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்துவதிலேயே அவர்கள் கவனஞ் செலுத்தியிருந்தனர் என்றும் கூறுகின்றனர்.
கிளிநொச்சி்யில் இடம்பெற்ற மறிப்புச் சமர்களைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 200 வரையான புலிகளைப் பயன்படுத்தியிருந்த போதிலும், சிறிலங்காப் படையினருக்கு அதிகளவில் இழப்புகளைக் கொடுத்தனர். அத்தோடு ஆசிய சக்திகள், அகிலத்தின் அணுசரணையோடு தம்மோடு மோதுவதை தனியவே ஆயுத சக்தியால் மட்டும் எதிர்கொள்ள முனையவில்லை. இதனை அரசியல், இராஜதந்திர முறையில் அனுக, அதற்கழுத்தங்களை கொடுக்கும் பொறுப்பை புலம்பெயர் தமிழரிடம் விட்டிருந்தனரென்றும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்நாள் வரையிலும் எழுபதினாயிரத்திற்க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களும் அடங்கல். இந்த எண்ணிக்கைக் கணக்கிலும் கூட ஐ.நாவிலுள்ள ஐயாக்கள் சிலரும், கண்டம் தாண்டியுள்ள சில காரியவான்களும் சிறிலங்காவிற்குச் சார்பாயிருந்து கணக்குவிடத்தான் பார்க்கிறார்கள்.
பாதுகாப்பு வலயமென சிறிலங்காப் படையினர் விரித்த வலை பிணக்குவியலாலும், அடுத்தகணமே அங்கவீனர்களாகும் மனிதர்களாலும் தான் நிரப்பியது. எறிகணை வீச்சில், படுகொலை செய்யப்படும் தமிழரிகளின் சடலங்களை புதைப்பதற்கு கூட எவருமில்லை. பட்டினியால் சாகும் அப்பாவிகளுக்கு உணவளிக்கச் சொல்லவும் முடியல்லை. மாறாக அதைத் தாங்களே கொண்டுவந்து கொடுக்கவும் இந்த ஐ நா சபையினருக்குச் சக்தியிருக்கவில்லை. பதுங்கு குழிகளுக்குள் இருந்த அப்பாவி மக்களின், அடிப்படை மனித உரிமை குறித்து பேச முடியாவிட்டாலும் குறைந்தது அவர்களின் உயிர்களை அவர்களோடு இருக்கவாவது இந்த இளகிய இரும்பு மனம்கொண்ட ஐ நா சபை அனுமதிக்கவில்லையே!
பாதுகாப்பு வலயமென்று சிறிலங்காப் படையினர் விரித்த வலையினுக்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் இறுதியான மூன்று நாட்களும் முக்கியமானவை. மே மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமை தொடக்கம் மே மாதம் 18ஆம் நாள் திங்கட்கிழமை வரையிலும் பல சம்பவங்கள் மிகவும் சிறிய காலவெல்லைக்குள் நடைபெற்றிருந்தன என்பது இப்போ அறியவருகின்றன. அதிகளவான மக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான விழுப்புண்ணடைந்த அப்பாவி மக்களையும், போராளிகளையும் பாதுகாப்பாக ஒரு மூன்றாம் தரப்பினுடாக சரணடையவைக்கும் முயற்சிகளும் புலிகளால் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றன.
காயப்பட்ட போரளிகளை பாதுகாப்பாக நகர்த்தும் பொறுப்புகள் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனிடமும், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடமும், ஒப்படைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றன. ஏனைய போராளிகளும் பெருமளவான தளபதிகளும் 17 ஆம் நாள் இரவு வரையிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதல்களில் வெளியேறியிருந்தனர் என படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சரணடைவதற்கு தமிழக, இந்திய, சர்வதேச அதிகாரிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மூத்த ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரிடமும் உதவிகள் கேட்கப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லையென்பது நீங்களறிந்த நிதர்சனம். இதற்கு "த ரைம்ஸ்' இதழின் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என்பவர் சாட்சியாகவுள்ளார். அவர் தன் கட்டுரையிலும் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வாதங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்தது. அதற்கு ஏதுவாக இலங்கை மீதான விவாதம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 26 ஆம் நாள் சில மேற்குலக மேதாவிகள் ஐ.நாவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்த போதும், 13 ஆசிய நாடுகளினதும், 13 ஆபிரிக்க நாடுகளினதும், கியூபா போன்ற நாடுகளினதும் ஆதரவுடன் மொத்தமாக 29 வாக்களிக்குகளால் அதை முறியடித்து சிறிலங்கா வெற்றிபெற்றுது.
குறிப்பாக இதற்கெல்லாம் சூத்தரதாரி எம் பக்கத்து நாடான தமிழினத் துரோக பாரத நாடு தான். இந்த வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு எதிராக 12 நாடுகள் வாக்களித்தனர். எதிர்த்தோ, ஆதரவாக வாக்களிக்காமல் 06 நாடுகள் மௌனம் சாதித்தனர். சிறிலங்காவுக்கு ஆதரவாகவும், மேற்குலக மேதாவிகளுக்கு எதிராகவும் ஆசிய, ஆபிரிக்கா, கியூபா போன்ற நாடுகளினதும் பல ஒருங்கிணைந்து குரல் கொடுத்தமை, தற்போது நிகழும் இந்து சமுத்திரப் பிராந்திய ஆதிக்கக் கயிறு இழுப்பில் மேற்குலக மேதாவிகளுக்கேற்பட்ட தோல்வியேதான். அதாவது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தப் போரானது தமிழ் மக்களை விட மேற்குலக மேதாவிகளுக்கே அதிக தோல்வியைக் கொடுத்துள்ளது என்பது தான் படைத்துறை ஆய்வாளர்களின் ஆய்வுகளின் முடிவு.
இதனிடையே விடுதலைப் புலிகளின் தலைமை தொடர்பாக அடுத்தடுத்து முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. சிறிலங்கா இராணுத்தரப்பும் 17, 18, 19ஆம் நாட்களில் தங்கள் தகவல்களுக்கே முரண்பட்ட வகையிலே தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டன. விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து வெளிவந்த இரண்டு அறிக்கைகளிலும் பல இராஜதந்திர நகர்வுகளின் தாக்கங்கள் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் ஆரூடம் கூறுகின்றனர்.
அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், சர்வதேச புலனாய்வுகளுக்கான பொறுப்பாளர் அறிவரசன் ஆகிய இவ்விருவரும் விடுதலைப்புலிகளின் அமைப்பின் முக்கிய மூத்த உறுப்பினர்கள் என்பது விடுதலைப் புலிகளையும், விடுதலைப் போராட்டம் பற்றியும் பூரணமாய் அறிந்தவர்கள் அறிவார்கள். இதில் பெரும்பான்மைத் தமிழருக்கு ஒரு ஐயம். எந்த தகவல் சரியானது, எது தவறானது என்பதானதொரு குழப்பம். இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையும், அரசியல் முதிர்ச்சியும் தேவை.
விடுதலைப்புலிகளின் தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவிலான இராஜதந்திர நகர்வுகள் பொதிந்துள்ளன. அதன் பின்னால் ஓர் அனைத்துலக வலைப்பின்னலை விடுவிக்கும் நடவடிக்கைகளும் உள்ளன. அவர்கள் உலகிற்கு ஒரு தகவலை சொல்ல முற்பட்டுள்ளனரென்றும் அதே சமயம் தமிழ் மக்களுக்கும் அதனூடாக பிறிதொரு தகவலை கூற முற்பட்டுள்ளனரென்றும் அவதானிக்க முடிகிறது. பல அழுத்தங்களும் அதன் மூலம் தேவையான பல அனுகூலங்களும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன என்பதே இந்த இரு தகவல்களினதும் பொருளென்பது ஆய்வாளர்கள் முடிவு.
இந்த இரு தகவல்களையும் உள்வாங்கிக்கொண்டு அரசியல் நகர்வுகளின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டிய பாரிய கடமை ஒன்று அனைத்துத்தமிழ் மக்களுக்குள்ளது என்பது மட்டுமே உண்மையின் உண்மை. போரியல் வரலாற்றில் சில தகவல்கள் நடைபெற்ற சம்பவங்களால் நிகழ்த்தப்பட்டன. ஆனால் சில தகவல்கள் ஒரு சம்பவத்தை உருவாக்குவதற்காக நிகழ்த்தப்படுகின்றன.
தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற தகவல்கள் வெளிவருவது இது முதல் தடவையல்ல என்பது தாங்களறியாததல்ல. 1984-09-05 ஆம் நாள் அதிர்ச்சியான செய்தி ஒன்று சிறிலங்கா பத்திரிகைகளிலும், இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியானது. சிறிலங்கா இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக அச்செய்திகள் விபரித்தன.
தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும், உலகெங்கிலும் பரந்து வாழ்ந்த தமிழர்களிடையே பெரும் பரபரப்பும் பதைப்பும் ஏற்பட்டன. ஆனால் மறுநாள் காலை தமிழகத்தில் மதுரையில் உள்ள தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர் வீட்டிற்கு தலைவர் பிரபாகரன் சிரித்த முகத்துடன் பிரசன்னமானாராம். புன்னகையுடன் உள்ளே சென்ற தலைவர் பிரபாகரன் அந்த ஆதரவாளரின் சிறுமியாயிருந்த மகளை தூக்கி வாரி அணைத்துக்கொண்டு "மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல" என நகைச்சுவையாகச் சொன்னாராம் அன்று.
25-07-1989 அன்று பரபரப்பான செய்தி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத் துணைத் தலைவர் மாத்தையா என்ற மகேந்திரராசாவுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் வன்னியிலிலுள்ள ஆனந்தப் பெரியகுளத்தருகே இருந்ததாகவும், இப்போது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் சிறிலங்கா, இந்திய, தமிழக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன.
அன்றைய நாளில் வட-கிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள், இந்தச் செய்தியை அன்று உறுதி செய்தார். அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவரென்பதும், யாரால் இந்த முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டாரென்பது ஆனால் இரண்டு நாட்களில் இச்செய்தியில் கொஞ்சம் கூட உண்மையில்லை, தலைவர் பிரபாகரன் உயிரோடு நலமோடு இருக்கிறார் என்பதை நாங்களனைவரும் தெரிந்து கொண்டோம்.
பின்னர் 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நடந்த வைபவமொன்றில் எங்கள் முன் தோன்றினார் தலைவர்.
26-12-2004 அன்று அடித்த சுனாமியின்போது தலைவர் பிரபாகரனும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானும் சுனாமி பேரலைகளால் அடித்துச்செல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லையென்றும் ஒரு பரபரப்பான வதந்திச் செய்தி வெளியிடப்பட்டது. தலைவர் பிரபாகரனுக்காக விலைஉயர்ந்த சவப்பெட்டி ஒன்று வன்னிப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வதந்திகள் பரவின.
அந்தச்செய்தியை சிறிலங்காக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி, பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுனாமி அலைகளில் கொல்லப்பட்டார்கள் என்று உறுதிசெய்தார். சில நாளிதழ்களும் இச்செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்தன. ஆனால் விடுதலைப் புலிகளின் சார்பில் வெளியிடப்பட்ட மறுப்பு செய்தியை பிரசுரிக்கவே இல்லை.ஆனால் பத்து நாட்களின் பின்னர் நோர்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன் கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கும் படத்தை இந்த நாளிதழ்களும் வெளியிட்டன. ஆயினும் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறியதற்கு ஒரு வருத்தம்கூட தெரிவிக்கும் நாணயம் இந்த நாளிதழ்களுக்கு என்றுமே இருந்ததில்லை.
15-12-2007 அன்று சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் தலைவர் பிரபாகரன் படுகாயமடைந்து இருப்பதாகவும் அவர் இரகசியமான ஒரு இடத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிழைப்பது இயலாத ஒன்று என்றும் பரபரப்பான செய்தியை சிறிலங்கா பாதுகாப்புத்துறை வெளியிட்டது.
இப்படியெல்லாம் பிரபாகரன் இறந்துவிட்டதாக வக்கிர செய்திகளை பரப்புவதில் சிறிலங்கா அரசும் இந்திய உளவுத்துறையான (RAW) ரோவும் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கின்றன. ஆனால் இச்செய்திகள் சிறிது காலத்திலேயே பொய்த்துவிட்டன. தலைவர் பிரபாகரனை கொலை செய்ய பலதிட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனாலும் எல்லாவற்றிலிருந்தும் அவர் தப்பியுள்ளார், அவ்வாறே அவர் இப்போதும் மீண்டுள்ளார் என்பது இன்றைய உண்மை நிலை.
நான்காம் கட்ட ஈழப்போரை பொறுத்த வரையில் அதன் இறுதிக்கட்டம் கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் நாள் கிளிநொச்சி நகரம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பமாகியிருந்தது. ஆனால் அதன் நகர்வுப் பாதை இன்றும் புரியாத புதிராகவே பலருக்கும் தோன்றியிருக்கின்றதென படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வசிப்பிடங்கள் தொடர்பான தெளிவான சான்றுகள் பலவற்றை விடுதலைப்புலிகள் தமது தளங்களில் விட்டும் சென்றிருந்தனர். அதை முன்னேறிய சிறிலங்காப் படையினர் கைப்பற்றியதாகவும், சிறிலங்காப் படைத்தரப்பு தகவல்களை வெளியிட்டன.
அதாவது கடந்த பெப்ரவரி மாதம் விசுவமடு பகுதியை படையினர் கைப்பற்றிய போது நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த வீடொன்றில் தேசிய தலைவர் பயன்படுத்தும் உடைகளையும், சில மருந்துப் பொருட்களையும், கோல்ட் கொமாண்டோ ரக துப்பாக்கியையும் விட்டுவிட்டு சென்றிருந்தனர். அதன் பின்னர் தேசிய தலைவர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் பல பிரத்தியேக ஆவணங்களை விட்டு சென்றிருந்தனர்.
மகன் சாள்ஸ் அன்ரனியினதும், மகள் துவாரகாவினதும் பரீட்சைக்குத் தோற்றிய பெறுபேற்றுத் தாள்களையும், அவர்கள் முன்னர் பாவித்ததாகக் கூறி சில விளையாட்டுப் பொருட்களையும், நெருங்கிய உறவினர்களுடன் மற்றும் தளபதிகளுடன் தலைவரது குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், சிறிலங்காப் படைத்தரப்பு கைப்பற்றியதாக தங்கள் ஊடகங்களில் அதனை வெளியிட்டனர். இதன் மூலம் சிறிலங்கா இராணுவமும், சிறிலங்கா அரசாங்கமும் தலைவர் பிரபாகரன் தமது முற்றுகைக்குள் இருப்பதாக அவர்கள் கருதியிருந்தனர்.
ஆகவே அவர்களின் முழுப் படைப் பலமும், கவனமும் இங்கு திருப்பப்பட்டிருந்தது. இதற்க்காக சிறிலங்காவின் எல்லாப் படைபலத்தையும் ஒருங்கமைத்து இவ்விடங்களில் மையப்படுத்தினர் என்பது அப்பட்டமான உண்மை. தலைவர் நிச்சயமாக இங்கேதான் இருந்தவரென்றால் இப்படியான பொருட்களையும், எச்சங்களையும் ஏன் விட்டுவிட்டு செல்லவேண்டும் என்ற தர்க்க ரீதியான வாதங்களும் எழாமலில்லை.
விடுதலைப் புலிகள் பின்நகரும் போது எனறுமே தங்கள் ஆயுதங்களை, தங்கள் ஆவணங்களை விட்டுச் செல்வதில்லை. கிளிநொச்சி நகரம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சில வாரங்களின் பின் அங்கு சென்ற சர்வதேச ஊடகவியலாளர்களும் இதனை அப்போது தெரிவித்திருந்தனர்.
அதாவது, கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகங்களிலும், மற்றய இடங்களிலுள்ள கட்டங்களிலும் கதவுகளில் திறப்பு மட்டுமே இருந்ததாகவும், வேறெந்தப் பொருட்களும் அங்கு இருந்திருக்கவில்லையென, அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் அன்றைய நாட்களில் குறிப்பிட்டிருந்தனர்.
பாரிய ஆட்லறி உந்துகணைச் செலுத்திகளையும், கனரக ஆயுதங்களையும் மற்றும் படைத்தளவாடங்களை எடுத்து செல்பவர்களுக்கு ஒரு கோல் கொமோண்டோ துப்பாக்கியை கொண்டு செல்வது கடினமானது அல்ல என்கின்றனர் பிரபல படைத்துறை ஆய்வாளர்கள்.
இறுதி நேரத்தில் சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்த பின்புதான் தலைவர் தப்ப முயற்சித்தார் என்பது முரணான வாதம். ஏனெனில் அப்படிப்பட்ட முட்டாள் தனமான முன்னெடுப்புக்களை விடுதலைப் புலிகள் என்றுமே முன்னெடுத்ததில்லை. ஆக சில நிகழ்வுகள் அங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
இறுதி நாளான திங்கட்கிழமை காலை பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் வெளியுலகுடன் தொடர்பு கொண்டது நீங்களனைவரும் அறிந்ததே. அவர் பேசும் போது, பின்புலத்தில் அவருக்கருகில் கேட்கப்பட்ட வெடியோசைகளையும், குண்டுச்சத்தங்களையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அப்போதைய அவரின் குரலிலிருந்து அவர் தன் இறுதி நேரத்தை நெருங்கி விட்டாரென்பதையும் நீங்களறிந்திருப்பீர்கள்.
அந்த அபத்த நிலையிலும், அவரின் இறுதி நேரத்திலும், ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்ற போதும் ஒரேயொரு கேள்வி தான் அவரிடம் கேட்கப்பட்டது. (எங்களின்) உங்களின், உலகத்தமிழினத்தின் ஏன் தமிழ்ச்சாதியின் ஒட்டுமொத்தக் குரலாய், வேண்டுகையாய் அவரிடம் கேட்கப்பட்டது அந்த ஒரேயொரு கேள்வி தான் அது தலைவர் எங்கே?
அந்தப்பதில் தெளிவாகவும், எம்மீது நிலைகொண்டு, நீண்டிருந்த சோகத்திலும் எமக்குச் சற்றுத் தெம்பாகவுமிருந்தது. தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதுதான்.
தமிழினத்தின் கற்பனைக்கெட்டாத கர்மவீரனாக, காவிய நாயகனாக, தமிழினத்தின் வியத்தகு வீரனாக, இனத்தின் விடுதலை ஆன்மாவாக, தமிழினத்தின் மீட்பராகத் தலைவர் பிரபாகரனும், தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியமைக்கும் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது அடிமனதில் உறைந்து விட்டனர் என்பது அகிலமறிந்த உண்மை.
இதை எவராலும் எக்காலத்திலும் மறுத்துரைக்க முடியாது.
அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை
திருக்குறள்- தாயகத்திலிருந்து, கவே.கரிகாலன்.

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP