எப்படி தப்பினார் மதிவதனி?--பிரபாகரன் போட்ட உருக்கமான கட்டளை...
இந்திய 'ரா' உளவு அமைப்பினர், லேட்டஸ்டாக வேறொரு தகவலையும் டீல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
'சுற்றி வளைக்கப்பட்டோம். நடப்பது இறுதித் தாக்குதல்...' என்று பிரபாகரன் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அவருடைய மனைவி மதிவதனி எவ்வாறு திட்டமிட்டபடி கொல்கத்தா வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதே அவர்களுக்குக் கிடைத்த அந்தத்தகவல். இந்தியாவின் உள்துறை உளவு அமைப்பான ஐ.பி-யில் பணியாற்றி, தற்போது 'ரா'வின் தெற்காசிய விவகாரங்களை கவனிக்கும் முக்கிய அதிகாரி ஒருவரிடம் இதுபற்றிப் பேசினோம்.
நம்முடைய நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு மெள்ள வாய் திறந்தார் அவர்.
''நமது 'ரா' அமைப்பின் உலகளாவிய ரகசிய பிரதிநிதிகள் கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவிலுள்ள சில முக்கிய புலித் தலைகளின் ஆதரவாளர்களையும், நிதி சேகரிப்பாளர்களையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 'பிரபாகரனின் மனைவி மதிவதனி, பிள்ளைகள் துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோர் பத்திரமாக இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார்கள்' என்ற தகவல், இந்தோனேஷியாவிலுள்ள ஒரு நபர் மூலமாக 'ரா'-வுக்குக் கிடைத்தது.
துவாரகாவும், பாலச்சந்திரனும் இறுதிக் கட்டப் போருக்கு முன்பாக, கடந்த 2008 அக்டோபர் மாத இறுதியிலேயே கடல் வழியாக இந்தோனேஷியா சென்றிருக்கிறார்கள். பின்பு அங்கிருந்து அயர்லாந்துக்கு சென்று விட்டார் கள். மனைவி மதிவதனியையும் அவர்களுக்குத் துணையாக அயர்லாந்துக்கு செல்லும்படி பிரபாகரன் கட்டளை யிட்டும் மதிவதனி, பிரபாகரனை விட்டுப் பிரிய மறுத்திருக்கிறார். ஆனால், 'ஈழப் போராட்டத்துக்கு வீட்டுக்கு ஒருவரை அனுப்ப வேண்டும் என்பது நான் வகுத்த விதி. நமது குடும்பத்திலோ நான், நமது மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி என ஒருவருக்கு இருவராகக் களத்தில் இருக்கிறோம். அதனால் மற்ற இரு குழந்தைகளின் நலனுக்காக வன்னியை விட்டு நீ வெளியேறத்தான் வேண்டும்!' என மதிவதனியை நிர்ப்பந்தப்படுத்தினாராம் பிரபாகரன். மதிவதனி ஒரு வழியாக இதற்கு சம்மதித்தபோது... கடல் பகுதியில் பாதுகாப்பை இறுக்கிவிட்டது இலங்கை ராணுவம். அந்தக் கட்டுக்காவலையும் மீறித்தான் மதிவதனியை இந்தியா வழியாகத் தப்ப வைத்திருக்கிறார் பிரபாகரன்!'' என்றார் அந்த அதிகாரி.
''கடந்த ஜனவரி மாத இறுதியில் மதிவதனியின் புகைப் படத்தை ஒட்டி வசந்தி, க/பெ. மாரிமுத்து, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம் என்ற பெயரில் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு பாஸ்போர்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய மூன்று ஆவணங்களை இணைத்து, திருச்சியிலுள்ள ஒரு புரோக்கர்தான் அதற்கு விண்ணப்பித்திருக்கிறார். இதை ஓ.எஸ்.ஆர். (originel, scene, return) முறையில் செக் செய்து பாஸ்போர்ட் அதிகாரி 'அக்செப்டட்' என சீல் குத்தியிருக்கிறார். ஜனவரி இறுதியில் தயாரான இந்த பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டுதான் மதிவதனி இந்தியா வழியாகத் தப்பி யிருக்கிறார்.
போர் இறுதிக் கட்டத்தை எட்டிய மே முதல் வாரம், வேதாரண்யம் வழியாக இந்தியா வந்திருக்கிறார் மதிவதனி. தமிழகம் முழுவதும் தேர்தல் டென்ஷனில் மூழ்கியிருந்த அந்த சமயத்தில், போலீஸாரின் கண்களிலிருந்து தப்பி கொல்கத்தாவுக்குப் போயிருக்கிறார். அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் மூலமாக கடந்த மே 10-ம் தேதி ஹாங்காங் சென்றிருக்கிறார் மதிவதனி. ஹாங்காங்கிலிருந்து கனடா சென்று, பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினியின் ஏற்பாட்டில் மிகப் பாதுகாப்பான ஓரிடத்தில் இருக்கிறார்.
இதற்கிடையில் வசந்தி என்ற பெயரில் எடுக்கப்பட்ட பாஸ் போர்ட் தவிர, ஜானகி என்ற பெயரிலும் ஒரு பாஸ்போர்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. அது யாருக்காக எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை!
இதெல்லாம் எங்கள் கவனத்துக்கு வந்ததுமே, கடந்த வாரம் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் சென்று, சம்பந்தப்பட்ட அந்த இரு பாஸ்போர்ட் ஃபைல்களையும் கைப்பற்றி விட்டோம். ஆன்லைனில் இருந்த அந்த பாஸ்போர்ட் தொடர்பான விவரங்களையும் முடக்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரி களை எங்களின் டெல்லி அலுவலகத்துக்கே அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறோம். மேலும், இதே பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து ரவி மற்றும் பாஸ்கர் ஆகிய இலங்கைத் தமிழர்களுக்கும் 'தத்கல்' முறையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காகக் கொடுக்கப்பட்ட அத்தனை ஆவணங்களும் போலி என தெரிய வந்திருக்கிறது. இந்த பாஸ்போர்ட் மூலமாக, புலிகள் இயக்கத்தின் வேறு முக்கிய தளபதிகள் யாரும் தப்பினார்களா என்ற விசாரணையும் நடந்து வருகிறது.
எப்படியிருந்தாலும்... உலகின் பவர்ஃபுல் உளவு அமைப்புகளில் ஒன்றான ரா-வின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மதிவதனி தப்பியிருப்பது, அதிர்ச்சிக்குரிய ஒன்றுதான். உலகம் முழுவதும் புலிகளுக்கு உள்ள சொத்து விவரங்கள் மற்றும் எதிர்காலத்தில் புலிகள் அமைப்பு செயல்பட வேண்டிய தளம், திசை குறித்த சில திட்டங்களையும் மதிவதனியிடம்தான் பிரபாகரன் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். மதிவதனியை நாங்கள் சந்திக்க முடிந்தால், பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்பிருக்கிறது!'' என்று நீளமாகப் பேசி நிறுத்தினார் அந்த அதிகாரி.
----விகடன்---
0 comments:
Post a Comment