'தெய்வீகத் துறவிகள்'
"பலவீனமான எமது இனத்தின் பலமான ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்" என்று கூறினார் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்.
இன்று கரும்புலிகள் நாள்!
தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரின் நகர்வுப் பாதையில் - இறுமாப்போடு எழுந்து நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்தவர்களுக்கான நாள்.
எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள்.
தரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ - அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்களுக்கான நாள்.
தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள்.
எமது இனத்தின் அதிசயங்கள் அவர்கள்; எமது திமிரின் அடையாளங்கள் அவர்கள்.
நியாயபூர்வமான எமது இனத்தின் அரசியல் வேட்கையினது குறியீடுகள் அவர்கள்.
அரசியல் விடுதலையை வென்றெடுப்பதில் எமது இனத்திற்கு இருக்கும் உறுதிப்பாட்டினதும், அர்ப்பண உணர்வினதும் வெளிப்பாடு அவர்கள்.
அவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல; எம்முள் எல்லாமுமாய் நிறைந்தவர்கள்.
1987 ஜூலை 5 ஆம் நாள் வீரச்சாவடைந்த
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல்
கரும்புலி கப்டன் மில்லர்
(வல்லிபுரம் வசந்தன் - கரவெட்டி துன்னாலை)
நேற்று வரை மட்டுமல்ல; இன்று முதலும், எமது விடுதலையை நாம் வென்றெடுக்கும் வரையும்… அதற்கும் அப்பாலும் அவர்களே எங்கள் நெஞ்சுரம்.
யாழ்ப்பாணம் நெல்லியடியில் 1987, ஜூலை 5 ஆம் நாள் - கரும்புலி கப்டன் மில்லர் தொடக்கி வைத்த இந்த வரலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு தனியான - தனித்துவமான - அத்தியாயமாகப் பதிவாகிவிட்டது.
அன்று முதல் - கடந்த 22 வருடங்களில் - உரிமை கோரியும் உரிமை கோராமலும், தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் - 700 வரையான கரும்புலி மாவீரர்கள் தமிழீழம் என்ற எங்கள் ஆன்ம தாகத்தின் வெளிப்பாடாக தமது உயிர்களைத் தந்தார்கள்.
தேசியத் தலைவர் அவர்கள் கூறியதனைப் போல - "அடுத்தவர்கள் இன்புற்று இருப்பதற்காக தம்மை இல்லாது அழித்த தெய்வீகத் துறவிகள் அவர்கள்."
அந்த தெய்வீகத் துறவிகளின் நினைவுடன்… அவர்கள் தந்து சென்றிருக்கும் துணிவுடன்… அவர்கள் ஊட்டிச் சென்றிருக்கும் உறுதியுடன்… - அவர்கள் செப்பனிட்டுச் சென்றிருக்கும் பாதை வழியே… - எல்லோரும் வாருங்கள்… போராட்டத் தேரை இழுத்து எங்கள் தேசத்தை விடுவிப்போம்.
கப்டன் அங்கயற்கண்ணி
(துரைசிங்கம் புஸ்பகலா - மண்கும்பான் )
0 comments:
Post a Comment