Wednesday, July 22, 2009

பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது : அருட்தந்தை ஜெகத்கச்பர்(பாகம் 1)



இந்தியாவின் கை இரத்தப் பழியைச் சுமப்பதாகத் குற்றம் சாட்டியுள்ள அருட்தந்தை ஜெகத் கஸ்பார், ஈழத் தமிழ் இனத்திற்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

'நக்கீரன்' குழுமத்தின் 'இனிய உதயம்' காலாண்டு இதழுக்காக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:
'நக்கீரன்' இதழில் தற்போது நீங்கள் எழுதிவரும் 'மறக்க முடியுமா?' கட்டுரைத் தொடரானது, ஈழ விடுதலைப் போர் குறித்த பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக இருக்கிறது. பிரபாகரன் ஒரு போர் விரும்பி, ஈழ மக்கள் மீது போரைத் திணித்தவர் என்றெல்லாம் இந்திய ஊடகங்கள் சித்தரித்துக் காட்டிய பிம்பத்துக்கும், 'இதயத்தில் உண்மையுள்ளவன், எல்லை இல்லா நன்றி உள்ளவன்' என்று நீங்கள் தரும் சித்திரத்துக்குமான வேறுபாடு ஆச்சரியமூட்டக்கூடியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட பிரபாகரனை நீங்கள் முதன்முதலாகச் சந்தித்த தருணம் பற்றிக் கூறுங்கள். உண்மையில் புலிகளின் இத்தனை பெரிய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ் வரலாற்றில் மகத்தான ஒரு விடுதலைப் போராட்டம் என்றால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம் தான்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்த அளவுக்குக் கட்டி எழுப்ப முடிந்தது என்றால், அதற்கு பிரபாகரன் என்ற மாபெரும் ஆளுமைதான் காரணம். தண்ணீரால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பில், மிக மிகச் சிறிய ஒரு இனத்தில் இருந்து, அண்டை நாடான இந்தியா எப்படியும் இவர்களை அழித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை எப்போதும் காட்டிக் கொண்டிருக்க-

உலகத்தில் எந்தவொரு நாட்டின் உதவியும் இல்லாமல், மரபுவழி இராணுவம் என்று நாம் சொல்கிற தரைப்படை, பீரங்கிப்படை, கடற்படை செறிந்த ஒரு புலனாய்வுப் பிரிவு, அனைத்துலக அளவிலான ஒரு கொள்வனவுப் பிரிவு, தேர்ந்த உளவுப்பிரிவு, இவற்றை எல்லாம் தாங்கி நடத்துவதற்காக ஒரு நிதிவள ஏற்பாடு, இன்னும் தன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு ஒரு நிர்வாகத்தைக் கொடுக்கிற மேலாண்மைப் பிரிவு என இத்தனையையும் கட்டி எழுப்பிய மனிதன் ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியாது. அபூர்வ ஆற்றல்கள் அமையப்பெற்ற ஒரு மனிதனால் மட்டுமே இது சாத்தியமாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்களுக்கு போர்க்குணம் இருந்தது என்று புறநானூற்றுக் காலத்தை நாம் சொன்னாலும், கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் நாம் போர்க்குணம் மிக்க மக்களாக இருந்தோம் என்பதற்கு எம்மால் எந்தவித ஆதாரங்களையும் சொல்ல முடியவில்லை. பெரிய அளவில் தொழில் முனைதல் இல்லாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட, எதையும் விதியே விதியே என்று ஏற்றுக் கொள்கிற ஒரு மக்கள் இனத்தின் மனவெளிகளுக்குள் புகுந்து புரட்சி செய்து, தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கின்ற தலைமுறையையே உருவாக்கிக் காட்டிய மனிதன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது.
பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது.

தமிழ் இனம் பிரபாகரனால் தாழ்ந்ததா, உயர்ந்ததா என்று கேட்டால், உயர்ந்தது என்று உறுதியாகச் சொல்லுவேன். பிரபாகரனின் ஆளுமைக்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு வரலாற்றுச் சூழமைவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தின.
முதலில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் காலம் அப்படியே நீடித்திருக்குமானால் எப்போதோ ஈழம் கிடைத்திருக்கும். ரஷ்ய வல்லரசு உடைந்து போனதால் பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டது. இந்த காலகட்டத்தில் தான் ஈழப் போராட்டம் வளர்ச்சி கண்டிருந்தது. பனிப்போர் முடிந்தபிறகு உலகம் ஒற்றைத்திசையில் பயணப்பட தொடங்கியது. நமக்கான ஆதரவு சக்திகள் இல்லாமல் போனார்கள்.
ஈழத்துக்குச் சென்ற இந்திய அமைதிப் படை, 15 ஆயிரம் அப்பாவித் தமிழர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது. அதன் பின்னணியில் ராஜீவ் காந்தி படுகொலை எனும் துயர நிகழ்வு. ஆனால் 15 ஆயிரம் மக்களைச் சாகடித்த பழியும் குற்றமும் யாராலும் பேசப்படவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை மட்டும்தான் பேசப்பட்டது. அதற்காக நான் ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தவில்லை. அது நடந்திருக்கக்கூடாது. ராஜீவ் மரணத்திற்காக அழுதவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் அந்தவொரு நிகழ்வை வைத்துக்கொண்டு பழிவாங்கித் தீர்க்க வேண்டும் என்ற பழி உணர்ச்சியை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறது, வருகிறது. இதையும் சந்தித்தபடி புலிகள் ஓர் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக முன்னேறி வெற்றிகளைக் குவித்து வந்த நேரத்தில்தான், ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதம் என்பது ஓர் எதிர் அரசியலாக மாறுகிறது. இதன் எதிர்விளைவுகளை எல்லாம் புலிகள் இயக்கமும் சந்திக்க வேண்டிய கட்டாயம்.
உலக அளவில் புலிகளின் கட்டமைப்புக்கள், நிதிவளங்கள் எல்லாம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி, பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக முடங்கிப்போய் பெரும் இன்னல்களைச் சந்தித்தார்கள். களத்தில் அவர்கள் பெரும் வெற்றியைக் குவித்தாலும்கூட, விடுதலையை முன்நகர்த்திச் செல்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனையிறவு வரைக்கும் வென்று ஏறக்குறைய தமிழ் ஈழத்தை சாதித்துவிட்ட நிலையில்தான்-
ஒருவகையில் அவர்கள் ஏமாற்றப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வரப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களது இயக்கத்துக்குள் பிளவை உண்டாக்கி, உளவு அமைப்புக்கள் ஊடுருவி புலிகளைப் பலவீனப்படுத்தினார்கள்.
இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால் புலிகள் சமாதானம் பேசிய காலகட்டத்தில்தான் அவர்களைப் பயங்கரவாதிகளாக உலக நாடுகள் மத்தியில் சித்தரித்துக் காட்டிய ஈன இராஜதந்திரத்தை சிங்கள அரசு கையாண்டது.
பிராந்திய அளவில், உலக அளவில் பகைவர்களாக இருக்கிற நாடுகள் எல்லாம் இந்த விடயத்தில் சேர்ந்து நின்றார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நின்று சிறிலங்காவுக்கு கைகொடுத்தார்கள் என்பதைவிட, அள்ளிக் கொடுத்தார்கள் என்பது சரியாக இருக்கும்.

அதேபோல இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உதவினார்கள். அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து உதவினார்கள். ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உதவின. அவ்வளவு ஏன்- உலகமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து உதவி, தமிழ் இனத்தின் விடுதலை உணர்ச்சியைத் தகர்த்து எறிந்திருக்கிறார்கள்.
இத்தனை சக்திகளை மீறியும் புலிகள் தாக்குப்பிடித்து நின்றிருக்கிறார்கள் என்பது ஒரு மகத்தான வரலாறு. அதனை நீங்கள் மறுக்கவே முடியாது. புலிகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் அவற்றை எல்லாம் மீறி அவர்கள் தார்மீகப் போராட்ட நேர்மை கொண்டவர்களாக நடந்து கொண்டார்கள்.
கடைசிக்கட்டப் போரில் அவர்கள் நினைத்திருந்தால் கொழும்பு நகரில் 50 ஆயிரம் பேரையாவது கொன்று குவித்திருக்க முடியும். அந்த அளவுக்கு இரசாயன ஆயுதங்களை அவர்கள் நிச்சயமாக வைத்திருந்தார்கள். ஆனால் செய்யவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் பார்த்தோமேயானால் சிங்களப் பேரினவாதம் எத்தனை அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்தார்கள், புலிகள் எத்தனை சிங்களவர்களைக் கொலை செய்தார்கள் என்று கணக்கெடுத்தால், புலிகள் உயிரின் மதிப்பை உணர்ந்தவர்களாகப் போராடியிருக்கிறார்கள். கடந்த பத்து மாதத்தில் மட்டும் சிங்களப் பேரினவாதம் 60 ஆயிரம் பேரைக் கொன்று அழித்திருக்கிறது.
புலிகள் 600 பேரைக்கூட கொலை செய்யவில்லை. குறிப்பாக அப்பாவி மக்களைக் கொலை செய்யவே இல்லை. கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தியபோது பயணிகளில் ஒரு உயிர் கூட போய்விடக்கூடாது என்று கவனத்தோடு தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் நடத்திய நாளன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் வானூர்தி தரை இறங்கியிருக்கிறது. பயணிகள் அனைவரும் வெளியே வந்தபிறகே தாக்குதலை தொடங்கினார்கள்.
புலிகள் இது குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல் 1:30 நிமிடத்துக்கே தாக்குதல் தொடங்கி இருப்பார்கள் என்றால், சிறிலங்கா வான்படையை அன்றே நிர்மூலம் ஆக்கியிருப்பார்கள். ஆனால் என்ன செய்வது? ஊடக பலம் இல்லை. உலகத்தில் எல்லோரும் அவர்களை அழித்துவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள்.
சந்திரிகா அம்மையார் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய பொருளாதாரத் தடையை அங்கு விதித்திருந்தார். கடுகைக்கூட தமிழ் ஈழத்துக்குள் நுழைய விடாமல் பார்த்துக்கொண்டார். அப்படி இருந்தும் புலிகள் தம் மக்களைப் பட்டினிச்சாவில் விட்டுவிடவில்லை. விவசாயத்தைத் திட்டமிட்டு அவர்கள் நடத்தினார்கள். ஏழு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு அரிசி வேண்டும், எவ்வளவு தேங்காய் வேண்டும் என்பதைக் கணக்கிட்டு விவசாயத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

இவை எல்லாம் உலகத்துக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்தன. எல்லா இயக்கங்களையும் போல இவர்களும் பல தவறுகள் செய்திருக்கிறார்கள். ஆனாலும் எல்லா தவறுகளையும் மீறி ஒரு மகத்தான மக்கள் இயக்கமாக இருந்திருக்கிறார்கள்.
2002 ஆம் ஆண்டில் நான் பிரபாகரனைச் சந்தித்தேன். நான் சந்திக்கும் இடத்திற்குள் அவர் உள்ளே நுழைந்தபோது, அவருக்கு யாரும் சல்யூட் அடிக்கவில்லை. தனக்கான இருக்கையைத் தானே எடுத்துப் போட்டுக்கொண்டார். சின்ன போராளிகள் கூட அவருக்கு வணக்கம் சொல்லவில்லை. பணிவுடன் கடந்து சென்றார்கள், அவ்வளவுதான்.
தனக்கு தாகம் எடுத்தபோதுகூட தானே போய் தண்ணீர் எடுத்து அருந்தினார். ஒரு தன்முனைப்பு இல்லாத மனிதர். எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, இலட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தெளிவாக, பிசிறில்லாமல் அவரால் பதில் சொல்ல முடிந்தது. மிக முக்கியமாக தான் ஒரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்களின் மரணம் குறித்து இந்தியா கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளாததும் ஈழத்தமிழர்களை அழிக்க ஆயுதம், பயிற்சி கொடுத்த துரோகமும் இந்திய தேசியம் என்ற ஒருமை, ஒரு மாயை என்று இங்குள்ள பெரும்பான்மை தமிழர்களை எண்ண வைத்திருக்கிறது. இந்தப் பழியில் இருந்து இந்தியா விடுபட முடியுமா?
இந்தியாவின் கை இரத்தப் பழியை சுமக்கிறது. இதை ஒரு போதும் அது கழுவிக்கொள்ள முடியாது. என்றேனும் ஒருநாள், தமிழ் இனத்துக்கு அது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். கடைசிக்கட்டத்தில், மூன்று லட்சம் மக்கள் ஒரு சிறிய நிலப்பரப்பில் முற்றுகையிடப்பட்டு தொடர்ச்சியான எறிகணை வீச்சு, பொஸ்பரஸ் குண்டுகள், கிளஸ்டர் குண்டுகள் என்று உயிர்கள் பொசுக்கப்பட்டபோது கூட, அப்போதைய வெளியுறவு அமைச்சர் முற்றுகையிடப்பட்ட இடத்தில் 80 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என்றார்.
ஆனால் போர் முடிந்தபிறகு மூன்று லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள் இல்லையா? அப்படியானால் மூன்று லட்சம் பேரில் இரண்டேகால் லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டால்கூட பறவாயில்லை என்ற நிலையைத்தான் இந்தியா எடுத்திருக்கிறது. இவை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத துரோகம்.
அதேபோல கடைசி மூன்று நாட்களில் படுகாயம் அடைந்த 10 ஆயிரம் மக்களை புல்டோசர் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். மே 18 ஆம் நாள் சண்டையில் மட்டும் 20 ஆயிரம் மக்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள். இவை எல்லாம் தெரியாதவை அல்ல. லண்டனில் இருந்து வெளிவருகின்ற 'ரைம்ஸ்', 'கார்டியன்' பத்திரிகைகள், பாரிசில் இருந்து வெளிவருகிற 'லெமோண்ட்' போன்ற உலக அளவில் மதிக்கப்படும் பத்திரிகைகள் இவற்றை எல்லாம் பதிவு செய்திருக்கின்றன.
இருந்தும்கூட மனித உரிமை ஆணையத்தில் சிறிலங்காவை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்கிறது. இந்த இனப்பழியில் இருந்து சிறிலங்காவின் பின்நின்ற பாவத்தில் இருந்து இந்தியா தப்பித்துக்கொள்ள முடியாது. வரலாற்றின்- மனச்சாட்சியின் முன்னால் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும்.
பிரபாகரன் மரணம் குறித்து இருவேறு கருத்துகள் இருந்துவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழம் அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஈழத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் தற்போது என்ன செய்வது என்று குழம்பிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழைய சலித்துப் போன உண்மையைத்தான் நானும் இப்போது சொல்ல விரும்புகிறேன். உலகம் முழுவதும் தமிழர்கள் ஒரு கருத்தில் பிளவுபடாமல் இணைந்து நின்றார்கள் என்றால், உலகம் நமது கோரிக்கையைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்- இது ஒன்று.
நாம் இனி இரண்டு திசைகளில் பயணப்படவேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை ஆயுதப் போராட்டம் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்குத் துணையாக அரசியல் பின்னால் நின்றது. இப்போது அரசியல் போராட்டம் முதன்மை பெறும். ஆயுதப் போராட்டம் முடியவில்லை. அது கட்டாயம் தொடர்ந்து நடக்கும். நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒரு கெரில்லாப் போர் மையம் கொள்ளும்.
இந்தப் போரினால் பாதிக்கப்படாத உங்களுக்கும் எனக்குமே இவ்வளவு வேகம் இருக்கும் என்றால், நேரடியான பாதிப்பைச் சந்தித்த அந்த மக்களுக்கு எத்தனை கோபம் இருக்கும். எனவே கெரில்லாப் போர் நிச்சயம் நடக்கும். ஆனால் அதனைவிட மேலாக உலக அளவில் ஒரு அரசியலைக் கட்டி எழுப்ப வேண்டும். தமிழகத்தில் ஈழ ஆதரவு அரசியல் என்பது, அனைத்து இந்திய மக்களுக்கும் உண்மைகளை எடுத்துச் சொல்வது, ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் ஈழம் பற்றி கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்.
முல்லைத்தீவில் நடந்த அந்த உச்சபட்சக் கொடுமைதான் தமிழீழத்துக்கான தார்மீக நியாயப்பாடாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து. தொடர்ந்து நாம் பணியாற்றினால் 2020 ஆம் ஆண்டுக்குள் தமிழ் ஈழம் வரும் என்பது எனது நம்பிக்கை.

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP