யுத்த க்ளைமாக்ஸ்! பிரபாகரனை நேரில் கண்ட எழுத்தாளரின் பேட்டி!
ஈழத்து எழுத்தாள ரான திருநாவுக்கரசு, நக்கீரன் வாசகர்களுக்குப் புதியவர் அல்ல. நன்கு அறி முகமானவர்தான். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிவரும் சுற்றும்- முற்றும் தொடரில் திருநாவுக்கரசுவின் படைப்பாற்றல் குறித்து பதிவு செய்திருக்கிறார். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப் போர்வரை அங்கிருந்துவிட்டு, தற்போது தமிழகத்திற்கு தப்பித்து வந்திருக்கிறார் திருநாவுக்கரசு. அவரை சந்தித்தபோது, இறுதிநாள் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சு முழுக்க ஈழத்தமிழர்களின் பாஷையிலேயே இருந்தது.
தடுப்பு முகாம்களைச் சுற்றி இலங்கை ராணுவத்தின் கடுமையான பாதுகாப்பும் ஏக கெடுபிடிகளும் இருக்கும் சூழலில் எப்படி தப்பித்து வந்தீர்கள்?
பணம்.. பணம்.. பணம்... எல்லாம் பணம்தான். இலங்கை பணத்தில் 2 லட்ச ரூபாய் தந்துவிட்டுத்தான் தப்பித்து வந்தோம். நள்ளிரவில் போட்டில் ஏற்றிக்கொண்டு வந்த சிங்களவன் விடியற்காலையில் ஒரு திட்டில் இறக்கிவிட்டுட்டு போய்விட்டான். பிஸ்கட் மட்டும் இருந்தது. குடிக்கிற தண்ணீரும் தீர்ந்துபோச்சு. திக்கு தெரியாத திட்டில் பசியோடு எப்படி தமிழகத்திற்கு போவது என்று தெரியாமல் விழித்தோம். இந்த திட்டில் சிக்கித் தவிக்கிறோம் என்று அறிந்துகொண்ட முதல்வர் கலைஞர், காவல் துறையினரை அனுப்பி எங்களை காப்பாத்தச் சொல்லி யிருக்கிறார். காவல் துறையினரும் கடலில் இருந்த ஒவ்வொரு திட்டு திட்டாகத் தேடித்தேடி களைத்துப் போனார்கள். ஒரு வழியாக மறுநாள் மாலை 5 மணி சுமாருக்கு எங்களை கண்டுபிடித்து அழைத்து வந்தனர் தமிழக போலீஸார்.
தடுப்பு முகாம்களில் தமிழர் களின் நிலைமை எப்படி இருக்கிறது?
நினைச்சாலே திகிலடிச்ச மாதிரி இருக்கு. முள் வேலிகள் சூழப்பட்டிருக் கிறது தடுப்பு முகாம்கள். கூண்டுக்குள் அடைத்த விலங்குகள்போல மக்கள். பெரிய பெரிய பள்ளங்களும் காடுகளுமாக இருந்த பகுதியை சமப்படுத்தி, சின்னச் சின்ன டெண்ட் அமைத்திருக்கிறார்கள். ஒவ் வொரு டெண்டிலும் 18 பேர் தங்கியிருக் கோம். படுக்க முடியாது. உட்கார்ந்து கொள்ளத்தான் இடமிருக்கும். இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்த நிதி உதவிகளையெல்லாம் மந்திரிகளும் ராணு வமும் கொள்ளை அடித்துக்கொண்டது. முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்துதரப்படவில்லை. உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள், கழிப்பிட வசதிகள் என எதுவுமே சரிவர இல்லை. கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் கொண்டு வந்து கொடுக் கிற சாப்பாட்டில்தான் பருப்பு இருக்கும், உப்பு இருக்கும். காய்கறிகள் கொஞ்சமேனும் இருக்கும்.
இந்த சாப்பாட்டு பொட்டலங் களை வாங்குவதற்கு மக்கள் தவியாய் தவிப்பார்கள். ரெண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு இங்க கொடுங்க... இங்க கொடுங்க.. என்று கெஞ்சுவதை பார்த் தால் நம் நெஞ்சு வெடித்துவிடும். போதிய கழிப்பிட வசதிகள் இல்லாத தால் கழிவறைகள் எல்லாம் நிரம்பி வழியும். வெளிநாடுகளில் இருந்து வந்த துணிகள் எதுவும் பயன்படுத்தமுடியவில்லை. எல்லாமே "அன்-சைஸ்'களாக இருந்தன.
குழந்தைகளுக்குரிய ஆடைகள் தொளதொளவென இருந்தன. அதேபோல ஆண்களுக்கு வந்த ஆடைகளும் பெண்களுக்கான சுடிதார், சல்வார் கம்மீஸ்களும் பெரிய சைஸ்களில் இருந்ததால் யாருமே பயன்படுத்தமுடியவில்லை. சேலைகள் வந்திருந்தால் ஒரு வேளை பயன்பட்டிருக்கும். முகாமில் நான் இருந்த போது "சிக்கன் பாக்ஸ்' நோய் தாக்கி 200 குழந்தைகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். போதிய மருந்துகள், சிகிச்சைகள் இல்லாததால் 60 குழந்தைகள் இறந்து போனார்கள். நம்மை காப்பாத்த யாரும் இல்லை என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட் டார்கள். கடவுளைக் கூட அவர்கள் நம்ப தயாரில்லை. அந்தளவுக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். ஜனங்களிடம் சாவு பயம் அதிகரித்து கிடக்கிறது. தாங்கள் செத்துவிடுவோம்ங்கிற பயத்தைக் காட்டிலும் தங்கள் உறவுகளைத் தேடிச் சென்றவர்கள் திரும்பி வராது போனால்... அவர்களை பற்றிய பயம்தான் அதிகம்.
இறுதிக்கட்டப் போரின்போது என்ன நடந்தது?
மே 10-ந் தேதி நடேசனை சந்தித்து யுத்தத்தின் போக்கு குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது, ""ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள், அப்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறோம். அதற்கு ஏற்பாடு செய்வதாக இந்தியாவிடமிருந்து தகவல் வந்துள்ளது'' என்று சொன்னார்.
மறுநாள் மீண்டும் அவரை நான் சந்தித்தபோது, ""இந்தியாவிடமிருந்து வந்த தகவலை தேசியத் தலைவரிடம் சொன்னேன். "சரணடைய முடியாது, இறுதிவரை யுத்தம்தான்' என்று கூறிவிட்டார். இதற்கு காரணம் அமெரிக்காவில் இயக் கத்தைச் சேர்ந்த பாபியிடமிருந்து, மனிதாபிமான அடிப்படை யில் தனது படைகளை அனுப்பி அமெரிக்கா உதவி செய்ய விருக்கிறது என்று தேசியத் தலைவருக்கு தகவல் கிடைத் ததுதான்'' என்று என்னிடம் விவரித்தார் நடேசன்.
அப்பறம் எப்படி இலங்கை ராணுவத்திடம் நடேசனும் புலித்தேவனும் சரண டையச் சென்றனர்?
தேசியத் தலைவர் பிரபாகரன் நம்பியதுபோல எதுவும் நடக்கலை. 16-ந் தேதி "உங்களின் சுய முடிவை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்' என்று அனைவ ருக்கும் இயக்கம் அறிவித்தது. அந்த சூழலில் பணயக் கைதிகளாக தங்கள் வசமிருந்த 9 சிங்கள ராணுவத்தினரை அழைத்துக்கொண்டு நடேசன், அவரது மனைவி, புலித்தேவன் ஆகியோர் ராணுவத்தினரை நோக்கிச்சென்றனர். 9 ராணுவ கைதிகளையும் விடுவித்தனர். ராணுவ கைதிகள் தங்கள் பக்கம் வந்ததும் கொஞ்சம் கூட தாமதிக்காமல் ஈவு இரக்கமின்றி மிருகத்தனமாக அவர்களை சுட்டுக்கொன்றது ராணுவம்.
பிரபாகரனைப் பற்றி?
13-ந் தேதி விடியற்காலை புதுமாத்தளை கடற்கரையோரம் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்பட 150 பேர் நின்று கொண்டி ருந்ததைப் பார்த்தேன். 13-ந்தேதி இரவு அந்த பகுதிக்கு சென்றபோது யாருமே அங்கு இல்லை. 14-ந்தேதி அதி காலையில் அதே பகுதியில் பொட்டுவை மட்டும் பார்த்தேன். அப்போது அவரிடம், "என்னாச்சு?' என்று கேட்டபோது, "ராத்திரி சிக்கல் ஆயிடுச்சு, கிளம்ப முடியலை' என்று பொட்டு சொன்னார். 15-ந்தேதி மீண்டும் நான் அங்கு போய்ப் பார்த்தபோது 200 பேருடன் தேசியத்தலைவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பொட்டு, "இன்னைக்கு நாங்கள் போய்விடுவோம்' என்று சொன்னார். அதன்பிறகு மறுநாள் மீண்டும் போய்ப் பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. கிளம்பிப் போயி ருப்பார்கள்.
அப்படியானால்.. பிரபாகர னின் உடல் என்று இலங்கை ராணுவம் காட்டியதே, அது...?
புலம் பெயர்ந்த தமிழர்களும் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களும் இதனை நம்பவில்லை.
தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவிட மிருந்து ஈழத் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது. இந்தியாவின் அனுசரிப்பில்தான் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு இருக்கிறது. இதனை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி நக்கீரன்
0 comments:
Post a Comment