விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த வே.பாலகுமார், யோகி, கரிகாலன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் படுகொலை – சிறீலங்கா இணையத்தளம் தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபின்னர், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ‘சிறிலங்கா கார்டியன்’ என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
அரச வட்டாரங்களில் இருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி தென்பகுதியில் உள்ள சிறைச்சாலைககளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட இவர்கள், அங்கு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக இந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 வரையிலான முக்கிய உறுப்பினர்கள் திட்டமிட்ட முறையில் வெளியே தெரியாமல் சிறிலங்கா அரசின் ‘கொலைக் குழு’ ஒன்றினால் கொன்று அழிக்கப்பட்டிருக்கின்றார்கள் என அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டிருப்பதாகவும் ‘சிறிலங்கா கார்டியன்’ தனது செய்தியில் தெரிவித்திருக்கின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த வே.பாலகுமார் (முன்னாள் ஈரோஸ் தலைவர்), யோகரட்ணம் யோகி, கரிகாலன், புலவர் புதுவை இரத்தினதுரை ஆகியோர் இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சிலர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் இருந்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக என இவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள்.
இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகவோ அல்லது இவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையிட்டோ அரசு தொடர்ந்தும் மெளனமாகவே இருந்துவருகின்றது. தயா மாஸ்டர் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பாக மட்டுமே அரசு தகவல்களை வெளியிட்டு வருகின்றது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மற்றொருவர், இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகவோ அல்லது இவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பாகவோ அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவுக்குக்கூட அரசு தகவல் தெரிவிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
0 comments:
Post a Comment