பாவி ராஜபக்சே பசி தீர்ந்ததா... - ஜெகத் கஸ்பர்
ஹிட்லரின்தற்கொலையோடு இரண்டாம் உலகப்போர் அடையாள ரீதியாக முடிவுக்கு வந்தது. நீண்ட இருளினின்று ஐரோப்பாவும் வரலாற்றுப் பேராபத்திலிருந்து உலகமும் விடுவிக்கப்பட்டது. பாசிசத்தை தோற்கடித்த நேச அணிக்குத் தலைமை நின்ற அமெரிக்காவின் அன்றைய அதிபர் ஐசனோவர் பிறப்பித்த முக்கிய உத்தரவுகளில் ஒன்று இது :
""யூத மக்கள் இன அழித்தலுக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்து வதைமுகாம்களையும் புகைப்படப் பதிவும் ஒளிப்பதிவும் செய்யுங்கள், எஞ்சியிருக்கிறவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுங்கள், அங்கிருக்கும் எலும்புக்கூடுகளையெல்லாம் அகற்ற அண்டை கிராமங்களின் ஜெர்மானியர்களையே பணியமர்த்துங்கள், இவற்றை இப்போது செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். ஏனென்றால் எதிர்காலத்தில் "யூத இன அழித்தலா? அப்படி எதுவும் உலகில் எங்கும் நடக்கவில் லையே' என்று அடித்துச் சொல்ல கூச்சமில்லா பொய்யர்களும் வேசி மகன்களும் வரமாட்டார்கள் என்று சொல்லுவதற்கில்லை''. ஐசனோவர் தீர்க்கதரிசி. அவரது உத்தரவில் பதிவான வரலாற்று ஆதாரங்களும், யூத மக்களின் "கொடுமை மறவோம், நினைவுகளுக்கான உரிமையை எவருக்கும் சரணடையோம்' என்ற பொது வைராக்கிய மும் இரண்டு காரியங்களை உறுதி செய்தன. அதற்குப்பின் யூதர்களுக்கெதிராய் இன்று வரை எங்கும் எவரும் கொடுமை செய்ய நினைக்கவில்லை, இரண்டு, ஹிட்லர் நீச்சமான கேவலப்பிறவி என்ற பிம்பத்தை யாரும் மாற்ற முடியாதபடி முடிவற்ற வரலாற்றுக்காய் பதிவாகிவிட்டது.
தமிழர்களுக்கும் இது சாத்தியப்பட வேண்டும். ராஜபக்சே சகோதரர்கள் ஹிட்லரைவிட கொடுமையானவர்கள் என்ற உண்மை உலகிற்குப் பதிவாக வேண்டும். சிவரூபனின் கடிதம் ஓர் தூரத்துத் தொடக்கம். முன்பு பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் குறுந்தகடொன்று வெளிக் கொணர்ந்தனர். அவைபோல் முறை செய்யப் பட்ட பல பதிவுகள் பல வெளிவர வேண்டும். சட்ட, ஒழுக்க தார் மீகங்களை மீறி காவல் துறை அத்தகு முயற்சிகளை தடைசெய்ய முயன்றால் அதை உடைத்தெறிந்து மீறுகிற உரிமையும் கட மையும் நமக்குண்டு. உண்மைக்கான உரிமையை அப கரிக்கும் அதிகாரம் உலகில் எவருக்கும் இல்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம். ஈழப் போரின் போக்கு எவ்வாறிருக்குமென்பது ஓரளவுக்கு யூகிக்க முடிந்த நாட்கள். சில நண்பர் கள் கவலையோடு உரையாடிக்கொண்டிருந்தோம். நான் ஒரு கட்டத்தில் கூறினேன்: ""சிங்களவன் ஜெயித்துவிடுவான் போலத்தான் தெரிகிறது. ஆனால் வரலாறும் அவன் பக்கமாய் போய்விடு மோ என்றுதான் அச்சமாக இருக்கிறது. தமிழர் படை தோல்வியுறுமானால் எல்லா துன்பங்களுக்கும் விடுதலைப்புலிகள்தான் காரணமென்பதுபோல இங்கு எல்லோரும் பேசுவார்கள். அவர்கள் செய்த தவறுகளை மட்டும் எடுத்துச் சொல்லி தமிழர்களிலேயே பலர் மேதைகளாகப் பார்ப்பார்கள்'' என்றேன். அதுதான் இன்று நடக்கிறது.
புலிகள் படையணிகளை கட்டியெழுப் புவதில் காட்டிய அக்கறையை தமிழருக்கான அரசியலை உருவாக்குவதில் காட்டவில்லை என்று பலரும் எழுதி வருகிறார்கள். அது விவாதத்திற்குரிய ஒன்றுதான். ஆனால் உண்மை என்னவென்றால் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ""பயங்கரவாதம்'' என உலகிற்குச் சித்தரிப்பதில் சிங்களப் பேரினவாதம் வெற்றி பெற்றது.
உண்மையில் வேலுப்பிள்ளை பிரபா கரன் அவர்களை நான் நேர்கண்ட நாளில் அவர் என்னிடம் வேண்டிக்கொண்ட விஷ யங்கள் மூன்று: ""ஆறுமாத காலம் இங்கு வந்து தங்கி யிருந்து எங் கட போராளி யளுக்கு சம கால உலக அரசியல் பற்றி பாடம் நடத்த ஏலுமா?'' என்றார்.
""தொடர்ந்து சண்டைக் களத்திலேயே நீண்டகாலம் நிற்க வேண்டி வந்ததால் போ ராளிகள் அர சியல் ரீதியான பயிற்சிகளில் கொஞ்சம் பின்தங்கி விட்டினும் தான். சமாதான காலத்தில் அதை சரி செய்யணும்'' என்று தொடர்ந்தார்.
பிறிதொரு காலத்தில் இரண்டாவதாக என்னை அவர் கேட்டது, ""ஐரோப்பாவி லேயே நீங்கள் இருக்கக் கூடாதா? ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் படியுங்கோ... அங்கே இருந்தா எங்கட போராட்டத்தின் அரசியல் நியாயங்களை நீங்கள் முக்கியமான பலருக்கும் எடுத்துச் சொல்லலாமே? அந்த வேலைதான் இன்டு கொஞ்சம் பலவீனமா இருக்குது'' என்றார். பின்நோக்கி நினைத்துப் பார்க்க இந்தியாவுக்குத் திரும்பி வந்து ""சிம்பொனியில் திருவாசக''ச் சூழலில் கிடந்து உழலாமல் ஐரோப்பாவில் தங்கியிருந்து தமிழீழ விடுதலைக்கான அரசியல் பணிகள் செய்திருக்கலாமோ என்ற குற்ற உணர்வாய் இருக்கிறது. இதனை நான் குறிப் பிடக் காரணம் பிரபாகரனுக்கு அரசியல் விடயங்களில் அக்கறை இருக்கவில்லை என்ற விமர்சனத்திற்குப் பதில் தர வேண்டிதான்.
மூன்றாவதாக அவர் கேட்டது ரசனையானது. ""இஞ்செ நாங்கள் கன விஷயங்களெ தமிழில் கொண்டு வந்திட்டோம். எங்கட படைகளின் அணிவகுப்புகளுக் கான ரைட், லெப்ட் விஷயங்களையும் தமிழ்ப்படுத்தியிட் டம். ஆனா மியூசிக் மட்டும் மேற்கத்திய அதே பாணியிலேயே இருக்குது. தமிழ்நாட்டிலேதான் தப்பு, உறுமி, கொம்பு இதெல்லாம் முழு வெளிப்பாடு காட்டுற கலைஞர்கள் இருக்கினும். அவையளக் கொண்டு எங்கட படைகளின் அணிவகுப்புக்கான முழக்கத்தையும் இசையையும் ஆக்கித் தருவியளா?'' என்றார்.
உண்மையில் முகமாலை பகுதியில் அவர்களின் அணிவகுப்பொன்றை பார்வையிட வாய்ப்புக் கிடைத் தது. ""வலது கால்... இடது கால்...'' என்றெல்லாம் தமி ழில் அணிவகுப் பின் பெருமுழக் கம் கேட்க சிலிர்ப் பாகவும் பெருமை யாகவும் இருந் தது.
மேதாவிகளின் பிறிதொரு விமர் சனம். ""புலிகள் மரபு ரீதியான ராணுவத்தை கட்டியெழுப்பியது பெரும் பிழை. கொரில்லா அமைப்பாகவே அவர்கள் இந்திருக்க வேண்டும்'' என்று பலரும் இன்று எழுதுகிறார்கள். பிரபாகரனின் படைகளையும், சிங்களப் படைகளையும் மோதி முடிவு காணுங்கள் என்று உலகம் தனித்து விட்டிருக்குமே யானால் சோழ மன்னர்களின் பெருமித வரலாற்றைப் புலிகள் என்றோ மீண்டும் ஈழ நிலத்தில் நிலைநாட்டி யிருப்பார்கள். சிவரூபனின் கடிதமும் இவ் உண்மையைச் சொல்லித் தொடர்கிறது. இதோ மே-17 வரை முல்லைத்தீவில் நின்ற சிவரூபன் பேசுகிறார் :
""இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள், இந்திரா ரடார், செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும், ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்து, தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?
இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவா, கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.
பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறு, கால் வேறு, உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். ""கடவுளே... ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே... வா... என்னையும் கொன்றுபோடு'' என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.
பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி... என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில், வயிற்றில், காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் "ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்...' என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்... மனிதச் சதையின் சிதறல்கள்.
வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே... உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே... கைவிட்டு விட்டீர்களே ஐயா... என்றெல்லாம் புலம்பினேன்.
எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவி, பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.
அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு ""பாவி ராஜபக்சே... புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்... பசி தீர்ந்ததாடா பாவி...'' என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.
(நினைவுகள் சுழலும்)
0 comments:
Post a Comment