அன்பா சொல்லி அம்மி நகராது -பேசுகிறார் பிரபாகரன்
ஸ்ரீ அரபிந்தோ அவர்களின் எழுத்துக்களில் இதனைப் படித்தேன்: ""ஏனைய தேசங்கள் போராட்டங்களாலும், யுத்தங் களாலும், வேதனைகளாலும், இரத்தக் கண்ணீராலும் வென்றவற் றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பத்திரிகையாளர் களின் பேனா மையைக் கொண்டும், கோரிக்கை மனுக்கள் எழுதத் தெரிந்தவர்களின் உதவியுடனும், மேடைப் பேச்சாளர்களின் திற மையைக் கொண்டும் சுலபமாகச் சாதிக்க அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது வேடிக்கையும் வீண் கனவும் ஆகும்''.
பிரசவ வலியின்றி பிள்ளை பிறக்குமா என்ன? சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா? சுக்கு மிளகு கூட இன்று சும்மா கிடைக்காது!
ஈழம் மலர வேறொன்றும் நடக்க வேண்டுமென கடந்த இதழில் நிறைவு செய்திருந்தோம். நீதியான தீர்வொன்று உறுதி செய்யப்படும் வரை ஆயுதம் தாங்கிய கொரில்லா போராட்ட மொன்று அங்கு தேவை. துணிவானதொரு போராட்ட இயக்கமும் நம்பகமான தலைமையும் களத்தில் இல்லாதவரை "எல்லை கடந்த தமிழீழ அரசு' என்ற யோசனையெல்லாம் கடைசியில் தலாய்லாமா அவர்களைப் போல் பயணங்கள் செய்து சொற்பொழிவுகளும் கருத் தரங்க உரைகளும் ஆற்றிக் கொண்டிருப்பதாகத்தான் முடியும்.
ஸ்ரீஅரபிந்தோ அவர்களைப் போல் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தெளிவாக இருந்தார். சற்றேறக்குறைய அரபிந்தரின் வார்த்தைகளையே வெளிப்படுத்தினார்: ""தியாகங்கள் இல்லாமல் விடுதலை வருமென்டு நினைப்பது வெறும் கனவு. மற்ற சமூகங்க ளெல்லாம் பெரும் விலை கொடுத்து பெற்ற சுதந்திரத் தை சிங்களவன் எமக்கு இலவசமாகத் தருவான் என்று நான் நம்ப வில்லை'' என்றார்.
நேர்காணலின் நடுவழியே அறையில் ஓரமாக வந்து உட்கார்ந்து கொண்ட காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் இருவரையும் ஓரக்கண்ணால் பார்த்து குறும்புப் புன்னகை உதிர்த்துக் கொண்டே தொடர்ந்தார்: ""எங்கட பழமொழிகள் உங்களுக்குத் தெரியும் தானே...? மயிலே மயிலே இறகு போடென்டா போடாது. அன்பா சொல்லி அம்மி நகராது. அப்படியே மயில் இறகு போட்டு, அம்மி நகர்ந் தாலும் கூட சிங்களவன் தமிழ் மக்க ளுக்கு தானாக முன்வந்து அரசியல் உரிமைகள் தரமாட்டான்'' என்றார்.
குறும்பு, குழந்தைத்தனம், இயல் பான நகைச்சுவை, தன்னைப் பற்றின சுய பிரக்ஞையே இல்லாத எளிமை, தெளிவு, தீர்க்கம், உறுதி இவை யாவுமானதான ஓர் அற்புத ஆளுமையாகவே அவரைக் காணமுடிந்தது. முன்பொரு முறை நான் குறிப் பிட்டது போல் தமிழ் வரலாற் றில் ஆறுபடைகளை கட்டி யெழுப்பிய இந்த அதிசய மனிதர். ""ஃபாதர்... ஏ.ஆர்.ரஹ் மானின் கண்ணாமூச்சி ஏனடா பாட்டு கேட்டினிங்களா? என்னென்டு மியூசிக் போட்டிருக்கார்... சரியான திறமைக்காரன்'' என்று கபடும் கசடுமின்றி வியக்கிற விடலைப் பிள்ளையாகவும் இருந்தார்.
மதிய உணவின் போது இசைஞானி இளையராஜா அவர்களுடன் சிம்பொனியில் திருவாசகம் செய்து கொண்டிருப்பது பற்றிக் கூறினேன். ""ஆளெ (இளைய ராஜாவை) இஞ்செ கூட்டிக்கொண்டு வாருங்களேன்... தமிழ்ச்செல்வன் எல்லா ஒழுங்குகளையும் செய்து தருவார். அவரின்டெ பாட்டுகளால்தானே ஒரு தலை முறைக்கு தமிழ்மொழி மேல் ஈர்ப்பு அதிகமாச்சுது... நீங்க எப்ப வேண்டுமென்டாலும் வரலாம். கிளிநொச்சியிலெ விஸ்தாரமான திறந்தவெளி அரங்கெல்லாம் இருக்குது. எங்கட சனமும் பெரிய இசைக்கச்சேரி பார்க்கலாம் தானே... திருவாசகம் செய்யிறதென்டா முல்லைத்தீவு அம்மன் கோயில் அருகாலெ செய்யலாம்...'' என்று பேசிக் கொண்டே இருந்தார்.
இந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் ஈழத்தமிழ் வரலாற்றின் அதி உயர் இரகசியங்கள் சிலவற்றிற்கு சாட்சியாய் இருந்திருக்கக்கூடும். ஏனென்றால் மே-15 அன்று முல்லைத்தீவு களத்தை விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது முதல்வட்ட தற்கொலைப் படையணியும் இந்த முல்லைத்தீவு அம்மன் கோயில் வழியாகத்தான் வெளியேறும் திட்டம் வைத்திருந்ததாக மிக மிக நம்பகமானதோர் தகவல் கடந்த வாரம் கிடைத்தது. அதுதொடர்பான விபரங்களை பின்னர் நிச்சயம் எழுதுவேன்.
நாம் சொல்லி மயில் இறகு போட்டு, அன்பால் அம்மி நகர்ந்தாலும் கூட சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு நீதியானதொரு தீர்வினைத் தராது என வேலுப்பிள்ளை பிரபாகரன் நேர்காணலில் கூறிய காலகட்டம் அமைதிப் பேச்சுவார்த் தைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம்: ""அப்படியென்றால் ஏன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் போனீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: ""புலிகள் யுத்த வெறியர்களென்ற பார்வை உலக நாடுகளுக்கு இருக்கிறது. நாங்களும் சமாதானத்தைத்தான் விரும்புகிறோம். இப்போது கூட பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டே இலங்கை அரசு பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றோடு ராணுவ ஒப்பந்தங்கள் செய்து எங்களை கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிர் கால ராணுவ முற்றுகைக்குள் நகர்த்திக் கொண்டி ருக்கிறது. எனினும் நாங்கள் சமாதானத்தையே விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனையைத் தீர்க்க முடியுமென்றால் அதையே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் போர் வெறியர்களல்ல என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும், சிங்களப் பேரினவாத மனோபாவம்தான் தமிழரின் அரசியல் சிக்கலுக்கு அடிப்படை காரண மென்பதை உலகம் புரிந்து கொள்கிற நிலையை உருவாக்கவும் வேண்டியே பேச்சுவார்த்தைகளில் தொடர்கிறோம்'' என்றார்.
அவரது பதில் உருவாக்கிய தருணத்தைப் பயன்படுத்தி வன்னிப் பகுதிக்கு நான் பயணித்து அவரிடம் நான் கூறவேண்டுமென்று விரும்பி, ஆனால் மனம் திறந்து சொல்லலாமா என தயங்கி, குழம்பி நின்ற ஓர் விஷயத்தை படபடவென்று சொல்லத் தொடங்கினேன். அது என்னவென்ற விபரத்தையும் பின்னர் எழுதுவேன்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தெளிவான தீர்க்கதரிசன பார்வையை வரலாறு இன்று நிரூபித்திருக்கிறது. ""சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு எதுவும் தராது'' என்ற அவரது பார்வை யை ராஜபக்சே அரசு வெள்ளிடை மலையாய் உலகிற்கு இன்று காட்டி நிற்கிறது. உலக நாடு களினது உதவியோடு புலிகளின் ராணுவ பலத்தை நிர்மூலமாக்கி இன அழித்தலையும் செய்து முடித்த பின், ""அரசியல் தீர்வா? எதற்கு..? பிரச்சனைதான் முடிந்து போயிற்றே...'' என்ற ரீதியில் பேசுகிறார் ராஜபக்சே. இந்தியா பேசி வந்த கதைக்குதவாத 13-வது சட்ட திருத்தம் பற்றிகூட இப்போது கப்சிப். ஆனால் இந்தியாவோ ராஜபக்சே கேட்காமலேயே ஐநூறு கோடி ஆயிரம் கோடி என அள்ளிக் கொ டுக்கிறது, கேள்விகள் எதுவும் கேட்காமல். இப்போது புரிகிறதா ""புலிகளின் ராணுவ பலம்தான் தமிழருக்கான அரசியல் பலம்'' என்று நம்பியவர்கள் எவ்வளவு சரியாகக் கணித்திருந்தார்களென்று?
எனவேதான் எல்லை கடந்த தமிழீழ அரசெல்லாம் அமைத்தாலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறினாலும், இலங்கை பொருளாதார ரீதியாகப் பலவீனப்பட்டாலும், உலக கருத்து தமிழீழத்திற்கு ஆதரவாக மாறினாலும் அங்கு களத்தில் உறுதியான தலைமை இல்லையென்றால் எதுவும் வராது. அந்தத் தலைமையை புலிகள்தான் தரவேண்டுமா, வேறு ஜனநாயக சக்திகள் தரக்கூடாதா என்ற நியாயமான கேள்வியை பலர் முன் வைக்கலாம். கேள்வி நியாயம்தான். ஆனால் முப்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டம் ஒன்றரை லட்ச மக்களின் உயிர்த் தியாகம், இன அழித்தல் வரை வந்த பேரழிவுகள் இவற்றிற்கெல்லாம் பிறகு... அதுவும் முல்லைத்தீவில் பெருங் கொடுமை நடந்து நூறு நாட்கள் கூட ஆக வில்லை. கேவலம் யாழ்ப்பாண மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்காய் ராஜபக்சேவிடம் மண்டியிடுகிறார்களே அங்கிருக்கும் தமிழ் கட்சிகள்- தலைவர்கள்... எச்சில் பொறுக்கித் தின்னும் தெருநாய்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? மிகக்குறைந்தபட்சம் ""கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களையும் விடுவியுங்கள், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்'' என்று சொல்கிற மிகமிகமிகமிக குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத அந்த தமிழ் அரசியல் கட்சிகளை, தலைவர்களை என்னென்று சொல்வது? எனவேதான் விதைநெல்களாய் எஞ்சியிருக்கிற தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் ஒருங்கிணை வது வரலாற்றுக் கட்டாயமாகிறது. அவர்கள் இல்லாமல் தமிழர்களுக்கு மிகக்குறைந்தபட்ச அரசியல் தீர்வுகூட கிட்டுமென்று நான் நம்பவில்லை.
அருட்தந்தை ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கலாமா என்று அன்பர்கள், அடியவர்கள் அங்கலாய்த்துக் கேட்க லாம். நான் நக்கீரனில் எழுதுவது அருட்தந்தையாய் மட்டுமல்ல... ஓர் அரசியல் மாணவனாயும், அதற்கும் மேலாய் தமிழனாயும், உண்மையில் தமிழருக்கு அறிவுரை சொல்கிற ஒழுக்க யோக்யதைகள் அனைத்தையும் இந்த உலகம் முற்றாக இழந்து நிற்கிறது. மானுடத்தின் பொது விழுமியங்கள், அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள், அனைத்துலக யுத்த விதிகள் அனைத்தும் உலக நாடுகளின் மேற்பார்வையிலேயே மீறப்பட்டும், அதே உலக நாடுகளின் ஆயுத, பொருளாதார, ராஜதந்திர உதவிகளுடனும் தமிழ் இன அழித்தல் மிகவும் கொடூரமான உன்மத்தத்தோடு நடத்தப்பட்டது.
தமிழர்களுக்கு அறிவுரை சொல்ல உலகத்திற்கு இனி என்ன தார்மீகம் இருக்கிறது? உண்மையில் பாதாளத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட தமிழர்கள் இலங்கை மீது -இந்த உலகின் மீது இதுவரை இல்லாத அளவிலானதொரு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டால்கூட -அப்படி நடக்கக்கூடாதென நான் பிரார்த்திக்கிறேன் -ஆனால் அப்படி நடந்தால்கூட அதனை கண்டிக்கிற ஒழுக்க தார் மீகத்தை இந்த உலகம் இழந்து நிற்கிறதென்பதுதான் உண்மை. முல்லைத் தீவெங்கும் உடைந்தும் கைவிடப்பட்டும் சிதறிக்கிடக்கிற புலிகளின் பழைய படைக்கருவிகள் மௌனமாய் காற்றுவெளிக்குச் சொல்கின்றன. ""புலிகளின் ராணுவ பலம்தான் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கு கடைசியான உத்தரவாதமாய் இருந்தன''.
"மீண்டும் தமிழீழ எழுச்சி சாத்தியமா?' என நீங்கள் கேட்கலாம். இன அழித்தலுக்கு நீதியும், குறைந்தபட்சம் தன்னாட்சி உரிமையென்ற அரசியல்தீர்வும் வழங்கப்படாத வரை தமிழீழத்திற்கான எழுச்சிக்கு மரணமில்லை.
(நினைவுகள் சுழலும்)
0 comments:
Post a Comment