வரலாற்றுப் பதிவு! - ஜெகத் கஸ்பர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், மே-4-ம் தேதியன்று இளைய தளபதியருக்கு நிறை வாகக் கூறியவை இரண்டு விஷயங்கள். முதலாவது, ஈழ விடுதலைப் போராட்டத்தின் சமகால பின்னடைவு களுக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித் தது. இரண்டாவது, ஈழ வரலாற்றின் கடைசி மன்னன் பண்டாரவன்னியனின் வாள் பற்றியது. தமிழ் எழுச்சிக்கான முழக்கமாகவும், அறைகூவலாயும் பண்டாரவன்னியனின் வாளை வரலாற்றுக் குறியீடாக நிறுத்திய பிரபாகரன் அவர்களின் உணர்ச்சி மிகு உரை நிறைவை உங்களுக்குச் சொல்லுமுன், மறக்க முடியாத முக்கியமான கடிதம் ஒன்றை இங்கு நான் திறந்து படிக்க வேண்டும். பிரபாகரன் போராட்டப் பின்னடைவுக்கான காரணங்களாய் முள்ளிவாய்க் கால் களத்தில் நின்றுகொண்டு பட்டியல் இட்டவற்றிற்கும் அக்கடிதத்திற்கும் நிறைய தொடர்பிருப்பதால், இங்கு அதனை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
பலநூறு முறை, ஏன் பல்லாயிரம் முறை வேண்டுமா, வேண்டாமா என்று யோசித்துக் குழம்பிய பின்னரே அக்கடிதத்தின் சில பகுதிகளை இங்கு பதிவு செய்யும் முடிவினை எடுத்தேன். அக்கடிதம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு நான் எழுதிய பதினேழு பக்கக் கடிதம். 2002-ல் அவரை நேர்காணச் சென்றபோது எழுதிக் கையிலெடுத்துக் கொண்டு போனேன். நேரில் பார்க்க எப்படியிருப் பாரோ, கடிதத்தின் விஷயங்களை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்றெல்லாம் அப்போதே தயங்கினேன். ஆனால் அவரது எளிமையும் இயல்பான அணுகுமுறையும் தந்த துணிவில் கடிதம் தாங்கியிருந்த கருத்துக்களை படபடவென்று சொல்லி முடித்துக் கொண்டு கடிதத்தையும் கொடுத்தேன். இதுபற்றி முன்பொருமுறை "மறக்க முடியுமா?' கட்டுரையொன்றில் நான் குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து இத்தொடரை படித்து வரும் வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
சராசரி அரசியல்வாதிகளைப்போல் பொதுமேடை களில் வாய்ப்பந்தல், தோரணங்கள் கட்டும் பழக்கம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இல்லையே தவிர, இயல்பான நட்புச் சூழமைவில் அவர் கலகலப்பான வாயாடி என்பதை அவரை நேர்கண்ட ஒரு நாளிலேயே தெரிந்துகொள்ளக் கூடியதாயிருந்தது. எனது எல்லா கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் பதில் தந்த அவர், நான் எழுதியிருந்த அக்கடிதத்தின் கருத்துக்களுக்கு மட்டும் பதில் தரவில்லை. ஆனால் அவற்றை நான் கூறியபோது கூர்மையாகக் கேட்டார், அதனிலும் கூர்மையாக என்னைப் பார்த்தார். அவர் முகத்தில் துயரம் கவிந்ததை அக்கணத்தில் என்னால் உணர முடிந்தது.
எனது கெட்ட-நல்ல பழக்கங்களில் ஒன்று மனதில் பட்டதை கரடு முரடாகவே சொல்லிவிடுவது. பிரபாகரன் அவர்களிடம் பேசியதோடு நான் நிறுத்தவில்லை. தமிழ்ச் செல்வன் அவர்களிடமும் அக்கடிதக் கருத்துக்களை வாதிட்டேன். அவரோ வாய் திறக்கவில்லை. தனது தனி முத்திரையான புன்னகை ஆயுதத்தால் என்னை கட்டுக் குள் வைத்திருந்தார். அதற்குப் பிறகு தளபதி பால்ராஜ் அவர்களிடமும் கொட்டித் தீர்த்தேன். உள்ளத்தில் கள்ளமில்லா குழந்தையாயிருந்த பால்ராஜ் மட்டும் ""ஓம் ஃபாதர்... இதத்தான் நாங்களும் சொல்லுறம் ஃபாதர்... தலைவரும் உப்பிடித்தான் நினைக்கிறார். பேச்சுவார்த்தைக்குப் போயிட்டம். எப்படி இந்த முற்றுகைக்குள்ளிருந்து வெளியே வரப் போறமென்டுதான் சரியான குழப்பமா கிடக்கு'' என்றார்.
1995 முதல் 2002 வரை தமிழ்ஈழ மக்களுக்கான பணிகளில் முழுநேரப் பணியாளன் போல் ஈடுபட்டிருந்த நான், 2002-ல் இந்தியா வந்து அமைதியாக வேறு களங்களைத் தெரிவு செய்தது ஏன் என்ற கேள்விக்கான பதிலும் அந்தப் பதினேழு பக்கக் கடிதத்தில் இருந்தது.
வெற்றியின் நாளில் சற்றே விட்டு விலகி நிற்பதும், தோல்வியின் இடரின் பொழுதில் எதிர்கொண்டு அருகில் களம் நிற்பதும் நல் அறம் என ஆழமாய் நம்புகிறேன். எல்லா தருணங்களிலும் அதன்படி வாழ இயலாதுபோயினும் எப்போதும் அதனை உள்ளத்தில் இருத்த வேண்டுமென்பதில் இடைவிடா நினைவுபடுத்தல் செய்வதுண்டு.
துன்புறும் ஈழமக்களுக்கான பணியில் நான் தீவிரமாக உள்நுழைந்தது மிகவும் நெருக்கடியான காலத்தில். ராஜ பக்சே கொடுங்கோலர்கள் தமிழர் இன அழித்தலை ""மனிதாபி மான மீட்பு நடவடிக்கை'' என்று எப்படி மோசடி வனைந்தார் களோ அப்படி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ""சமா தானத்திற்கான யுத்தம்'' (War For Peace) என சந்திரிகா குமாரதுங்கே அம்மையார் மோசடி வனைந்த காலம். முப்படைகளும் பெரும் எடுப்பில் தமிழ் ஈழத்தின் இதயமான யாழ்ப்பாணத்தை அடிமை கொள்ள முற்றுகையிட்டு முன் நகர, பத்து லட்சம் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாகி வலிகாமம், தென்மராட்சி, வன்னிக்காடுகள் என தஞ்ச மடைந்த காலம். இன்று வவுனியா திறந்தவெளிச் சிறையில் தமிழர்கள் படும் அத்தனை இடர்களையும் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டே அம்மக்கள் பட்ட காலம். அம்மக்க ளின் மீது இடைவிடா யுத்தம். உணவு, மருந்துப் பொருட்கள் தடை என சந்திரிகா அம்மையார் "சமாதானத் திற்கான' இன அழித்தல் நடத்திய காலம்.
அக்காலத்தில் இந்தியா-தமிழகம் தவிர்த்து உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சென்றோம். துன்புறும் ஈழத் தமிழ் மானுடத்தோடு உலகத் தமிழ் உணர்வுகளை, உறவுகளை இணைத்தோம். பசி, பட்டினி யிலிருந்து அம்மக்களைக் காக்க அணிதிரண்டு உழைத்தோம். யுத்தம் அனாதைகளாக்கிய பல்லாயிரம் குழந்தைகளுக்கு புதிய குடும்பங்களில் தொட்டில் கட்டினோம். யுத்தம் சிதறடித்த பல்லாயிரம் உறவுகளை மீண்டும் இணைத்தோம்.
1996-ல் ஏழுபேர் நாங்கள் பேசுவதைக் கேட்கவந்த நகரில் 1997-ல் ஈராயிரம் பேர் வந்தார்கள். அதற்குப்பின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஒட்டிசுட்டான், கரிப்பட்ட முறிப்பு, பளை, பரந்தன், ஆனையிறவு என 2000-ம் ஆண்டில் போர்க் கள வெற்றிகளின் உச்சத்தை விடுதலைப்புலிகள் தொட, ஈராயிரம் தமிழர் கூடிய நகர்களில் இருபதாயிரம் பேர் கூடினர். ஐயங்கள், அச்சங்கள் தவிர்த்து தமிழீழ விடுதலைக்காய் கடமையாற்ற பலர் முன்வந்த காலம் அது. யாழ்குடாவின் வாயிலில் புலிகளின் படையணிகள் நின்றன. "யாழ்ப்பாணத்தை பிடித்து விட்டால் தனி நாடு அங்கீகாரம் தருகிறோம்' என உலக நாடுகள் சில ரகசிய வாக்குறுதி கொடுத்திருந்ததாய் அப்போது செய்திகள் உலவிக்கொண்டி ருந்தன. புலிகளது போர்க்கள வெற்றிகளின் உச்ச தருணத்தில்தான், தமிழீழக் கனவு வெகு அருகில் வந்து விட்டதென்ற பொழுதில்தான் பணிக் களத்தை விட்டு நான் அகன்று விலகி வந்தேன். காரணம்... என்னவென்பதை அக்கடிதம் தாங்கியிருந்தது.
பதினேழு பக்க கடிதத்தை ஒருவரிச் செய்தியாகச் சொல்ல வேண்டுமென்றால் இதுதான் : ""சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் ஒத்துக் கொண்டது மிகப்பெரும் வரலாற்றுத் தவறு. இதற்காக விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல தமிழர் வரலாறும் நிரந்தரமாய் வருத்தப்படும்'' இதோ கடிதத்தின் சில பகுதிகள்:
""தமிழ்ஈழ தேசியத் தலைவர் என ஈழத்தமிழ் மக்கள் போற்றிக் கொண்டாடும் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு, வணக்கம்.
பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன், பிழையெனின் பொறுத்தருள்க.
யுத்தக்களத்திலும் காலத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கம் எடுக்கிற முடிவுகளை தமிழ் மக்கள் கேள்விக்குள்ளாக்குவதில்லை. ஆனால், அமைதியின் காலத்தில் அவ்வாறு இருத்தலாகாதென்றும், கட்டற்ற விவாதங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டு மென்றும் கருதுகிறேன். அவ்வகையில் இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தற்போதைய சூழலில் தாங்கள் எடுத்துள்ள முடிவு தவறானதென்றும், இதற்காக தமிழீழ வரலாறு மிகவும் வருத்தப்படவேண்டி வருமென்றும் மிகுந்த பணிவுடன் சொல்லத் தலைப் படுகிறேன். எனது இந்நிலைப்பாட்டுக்கான காரணங்களையும் இங்கு சமர்ப்பிக்கத் தலைப்படுகிறேன்.
1. ""ஓயாத அலைகள்'' தொடர் வெற்றிகள் மூலம் ஆனையிறவை வீழ்த்தி, யாழ்குடா நாட்டின் வாயிலில் நின்றீர்கள். தொடர்ந்து "வாழ்வா - சாவா' என்று இலங்கை ராணுவம் முன்னெடுத்த மிகப்பெரிய "அக்னிஹேலா-தீப்பிழம்பு'' நடவடிக்கையை சின்னா பின்னமாக்கிச் சிதைத்தீர்கள். அப்பாவித் தமிழர்களின் அனுதின வாழ்வை அச்சுறுத்திய விமானப்படையை உலகமே வியக்கும் வண்ணம் கட்டுநாயகே தாக்குதல் மூலம் சிதைத்தீர்கள். நாளொன்றுக்கு சராசரி 100 ராணுவத்தினர்... இலங்கை ராணுவத்தினர் தப்பியோடிக் கொண்டிருந்தனர். தொடர் யுத்தத்தின் சுமையை தாங்க முடியாது, இலங்கை பொருளா தாரம் பாதாளம் நோக்கிச் சென்று கொண்டி ருந்தது. அரசியல்ரீதியாக தென்னிலங்கை கொந்தளிக்கத் தொடங்கியிருந் தது. ராணுவரீதியாக இலங்கையின் முப்படைகளும் தமது தன்னம்பிக்கை யை இழந்திருந்தன. மூர்க்கத்துடன் முன்னோக்கிச் சென்று, யாழ்குடாவையும் வென்று ஒட்டுமொத்த இலங்கை அரசமைப்பை மண்டியிடச் செய்வதற்கு ஏற்ற தருணம் இதைவிட வேறொன்றும் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும் என நாம் நினைக்கவில்லை. இதுவரை தமிழர்களின் உதவிக்கு வராத, நாளை தமி ழர்களுக்கான நீதிக்கு உத்தரவாதமாய் நிற்கப் போகாத உலகநாடுகளை நம்பி தாங்கள் சண்டை நிர்றுத்தத்திற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் ஒத் துக்கொண்டிருப்பது உண்மையில் செத்துக்கொண்டி ருக்கும் இலங்கையின் ராணுவ, பொருளாதார, அர சியல் அமைப்புகள் மீண்டும் மூச்சுபெற்று உயிர்பெறக் கொடுக்கும் வாய்ப்பாகும். இதற்காக நிச்சயம் தமிழர்களாகிய நாம் வருத்தப்பட வேண்டியது வரும்.
2. நானொன்றும் நிறைய படித்தவனல்ல -அனுபவ முதிர்ச்சி கொண்டவனுமல்ல. ஆயினும் அரசியல் விஞ்ஞான மாணவன் என்ற வகையில் என் சிற்றறிவு அறிந்து ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்கள் தம் இறுதி இலக்கை அடை கின்றவரை போராடிக்கொண்டிருந்தால் மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும். சண்டை நிறுத்தம் தந்திரோபாயமான சிறு இடைவெளியாக இருக்கலா மேயன்றி, இப்போது நிகழ்வதுபோல் நீண்ட இடைவெளியாக இருத்தலாகாதென்றே கருதுகிறேன்.
3. முப்பது ஆண்டுகாலம் உங்களோடு சண்டை யிட்டு சாதிக்க முடியாத ராணுவ நலன்களையும் அனுகூலங்களையும் இச்சமாதான காலத்தில் இலங்கை ராணுவம் சாதிக்க முயலும். இந்தியா-மற்றும் உலகநாடுகளின் துணை இருப்பதால் அவற்றை நிச்சயம் இலங்கை சாதித்துவிடும்.
எவ்வாறு?
(நினைவுகள் சுழலும்)
0 comments:
Post a Comment