அன்றே எழுந்த அச்சம்! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
முன்பெல்லாம் போரென்றால் சண்டைக்களத்தில்தான் சாவுகள் நடக்கும். பொதுமக்கள் -குறிப்பாக குழந்தைகள், பெண்களின் மரணம் என்பது அபூர்வமானது. இரண்டாம் உலகப் போர்வரை அப்படித்தான் பொதுவில் இருந்தது. மனிதகுலமாய் நாம் மிகவும் நாகரிகமடைந்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளும் இக்காலத்தில்தான் போர்கள் அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து நடக்கின்றன. தயக்கங்கள் எதுவுமின்றி அனைத்துலக ஆதரவுடன் நிராயுதபாணிகளான மக்கள் மீது நடத்தப்பட்ட முழுவீச்சிலான முதற்போர் தமிழ்ஈழ மக்கள் மீது சிங்களப்பேரினவாதம் நடத்திய இன அழித்தல் போர்தான்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின், உள்ளபடியே போர்களில்லா உலகினை உருவாக்க வேண்டுமென்ற உளமார்ந்த அக்கறை உலகின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலருக்கும் இருந்தது. ஐக்கியநாடுகள் அவை மலர்ந்தது போர்களில்லா உலகுகாணும் இத்தகையோரது கனவிலும், உறுதியிலும், உழைப்பிலும்தான். போரின் கொடுமை அதனூடே வாழ்ந்து அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அவ் வகையில் ஐ.நா. அவை தொடங் கப்பட்டபோது அதனை நிரப்பிய தலைவர்களும் அதிகாரிகளும் மானுடத்தை நேசித்தவர்களாய் இருந்தார்கள். உலக அமைதியின் ஆர்வலர் களாய் இருந்தார் கள்.
இன்று அவ் வாறில்லை. மிகப்பெரு வாரியாக ஐ.நா. அமைப்புகளை நிரப்பியிருப்பவர்கள் உறுப்பு நாடுகளின் அரசுகளால் அனுப்பப்படு கிறவர்களென்பதைவிட உறுப்பு நாடுகளது உளவுத் துறைகளால் தெரிவு செய்யப்படுகிறவர்கள். ஐ.நா. அவையை இன்று உண்மையில் இயக்குவது உலக நாடுகளின் அரசியற் தலைமைகளென்பதைவிட உளவு அமைப்புகளென்பதே உண்மை.
எனவேதான் உறுதியான அரசியல் ஏற் பாடுகளுக்கான உத்தரவாதம் ஏதுமின்றி நார்வே நாடு கொடுத்த வாய்ச்சொல் நம்பிக்கையின் அடிப்படை யில் மட்டுமே விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றபோது மிகவும் அச்சமாக இருந்தது. ஏற்கனவே பாலஸ்தீன மக்களின் போராட்டப் பின்னடைவுக்கு நார்வே நாட்டின் இடைப்பாட்டில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளும் ஒரு காரணம் என்ற கருத்தும் எனக்கிருந்தது. சிங்கம்போல் ஒரு காலத்தில் நிமிர்ந்து நடந்த யாசர் அராபத் டேய்டன் நீண்ட பேச்சு வார்த்தைகள் தோற்றபோது கழுத்துச் சுருக்கிடப்பட்ட பரிதாபமான நாய்க்குட்டிபோல் ஆகியிருந்தார். அந்நிலை தமிழீழ விடுதலைப் போராட் டத்திற்கும் நடந்துவிடுமோ என்ற நிஜமான அங்கலாய்ப்பு இருந்தது.
போரைப்போல் கொடுமையும் குற்றமும் பாவமும் வேறொன்றில்லை. ஆயினும் யதார்த்தம் என்ன வென்றால் "வலுநிலைச் சமநிலை'தான் இன்று உலகில் பல பெரும் யுத்தங்களை தவிர்த்து வருகிறது. ரஷ்யாவிடமும் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பெரும் அழிவாயுதங்கள் இருப்பதால்தான் அமெரிக்கா அந்நாட்டுடன் நேரடியான போருக்குப் போகவில்லை, போகாது. சீனா விஷ யத்திலும் இதுதான் உண்மை.
மிதவாதத் தலைவர்களை கொன்ற ழித்தது, சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொண்டது என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு தவறுகள், குறைகளுக்கும் அப்பால் அவர்களை நாம் ஏற்றுக்கொண்டமைக்குக் காரணம் அவர்களது ராணுவ பலம் மட்டுமே ஈவிரக்கமில்லா சிங்களப் பேரின வாத அரசியலுக் கெதிரான தமி ழரின் அரசியற் பாதுகாப்பு அரண் என்ற கருத்து நிலைப்பாடே. அந்த சாதக நிலையை, உண்மையில் தமிழருக்கான ஒரே பாதுகாப்பு மிச்சமிருப்பை பேச்சு வார்த்தைகளினூடாக விடுதலைப்புலிகள் இழந்துவிடுவார் களோவென்ற அச்சம் நிஜமானதாயிருந்தது. பகிரங்கக் கடிதமெழுதத் தலைப்பட இதுவே முக்கிய காரணம்.
இன்னொன்று உலக அரங்கில் சட்ட பூர்வமான ஓர் அரசுக்கு இருக்கக்கூடிய அரசியற்பலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்குதானும் ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்களுக்கு இல்லை. அமெரிக்கா -ரஷ்யா -இந்தியா போன்ற ஏதேனும் பெரிய நாடுகள் புரவலராய் அவர்களை சுவீகரித்துக்கொண்டாலொழிய, அப்படியான வசந்தநிலை விடுதலைப்புலிகளுக்கோ, தமி ழருக்கோ இருக்கவில்லை. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி அழிக்க வேண்டுமென்பதில் இந்திய வெளியுறவு- பாதுகாப்புக்கொள்கை தெளிவாயிருந்தது. இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் தனது மேலாண்மை திட்டங்களின்படி அமெரிக்காவும் புலிகளை பலவீனப்படுத்தவேண்டுமென்பதை கொள்கை யாகக் கொண்டிருந்தது. 2002-வாக்கில் புலிகளின் அபார ராணுவ வெற்றிகளை மதிப்பீடு செய்து, ""புலிகளையும் உள்ளடக்கிய தீர்வொன்று காணவேண்டும்'' என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா பரிசீலிக்கத் தொடங்கியது. ஆயினும் புலிகளை அரசியல்-ராணுவ ரீதியாக பலவீனப்படுத்தவேண்டுமென்ற கொள்கையில் பெரிய மாற்றம் நிகழவில்லை. நார்வே கள மிறக்கப்பட்டது இந்நிலைப்பாட்டின் பின்னணி யில்தான்.
ஆதலால்தான் அனைத்துலக கண்காணிப் பாளர்களை புலிகள் தமது ஆளுகைப் பரப்பில் அனுமதித்தபோது மிகவும் அச்சமாக இருந்தது. முப்பது ஆண்டுகள் இலங்கை நேரடி யுத்தமும், இந்தியா-அமெரிக்க நாடுகள் மறைமுக யுத்தமும் நடத்தி சாதிக்க முடியாத ராணுவ அனுகூலங்களை பேச்சு வார்த்தை காலத்தில் "கத்தி யின்றி-ரத்தமின்றி'ப் பெற் றுக்கொள்வார்கள் என கடந்த இதழ் கட்டுரை யில் குறிப்பிட்டிருந்தது இதனையொட்டிதான். இரண்டு விஷயங்கள் இத்திசையில் நடக்குமென அஞ்சி னோம்.
அதிநவீன உளவுக் கண்காணிப்பு ஏற்பாடுகளை உலக சக்திகள் புலிகளின் நிலப்பரப்பில் எளிதாக விதைக்குமென்ற அச்சம் முதலானது -அதுபோல இயக்கத்திற்குள் பிளவுகளையும் ஏற்படுத்துவார்கள் என்ற அச்சம் இரண்டாவது. இதனையே எனது பகிரங்கக் கடிதத்திலும் எழுதினேன்.
இதனைச் செய்தது நிச்சயம் போரை விரும்பியும், பேச்சுவார்த்தைகளை நிராகரித்துமல்ல. தமிழ் இனத்தை நேசிக்கும் ஓர் அரசியல் விஞ்ஞான மாணவனாய் மட்டுமே எழுதினேன். யார்தான் போரையும் அதன் ஈவிரக்கமில்லா கொடுமைகளையும் விரும்ப முடியும்?
தொடர்ந்தும் எழுதினேன் :
* போர்க்களத்தில் நிற்கும்வரை சிறு சிறு சச்சரவுகளும், தனிநபர் ஈகோ மோதல்களும் பெரிதாக வராது. ஆனால் சண்டையில்லா காலத் தில், உரிய அரசியற் கல்வி இல்லையென்றால் இவையெல்லாம் பெரிதாக மாறும்.
* போருக்கு முகம் கொடுத்து வாழப் பழகிவிட்ட மக்களுக்கு சண்டை நிறுத்தம் மிகப் பெரிய ஆறுதலே. அதேவேளை மீண்டுமொரு யுத்தத்திற்கு மக்களை ஆயத்தம் செய்வது சவால் நிறைந்ததாயிருக்கும்.
* இயக்க உறுப்பினர்கள் சண்டை நிறுத்த காலத்தில் தங்கள் குடும்ப உறவுகளை இயல்பாகவே புதுப்பிப்பார்கள். மீண்டும் யுத்தம் வருமேயானால் முந்தைய கால அர்ப்பண அளவினை இது குறைக்க வாய்ப்புண்டு. மூத்த தளபதிகள் தங்கள் குடும்பம், பிள்ளைகள் என்று உணர்வுரீதியாக நெருக்கமாவார்கள்.
* ஒருவரையொருவர் குறை கூறி வசைபாடி வாழும் பண்பினை மரபணுவில் கொண்ட இனம் தமிழ் இனம். வெளிநாடுகளில் விடுதலைப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒருவரையொருவர் குறைகள் கூற வருவார்கள். அவை சார்ந்து நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் கட்டுக்கோப்பை குலைக்கும் -காட்டிக்கொடுக்கும் வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
* சண்டை நிறுத்த காலத்தில் வெளி நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தேசம் காண வருவார்கள். ரேபான் கண்ணாடி, பெர்முடாஸ், சாக்லேட் பைகள், விஸ்கி போத்தல்களென மேற்குலகின் மினுக்கங்களோடு வருவார்கள். அதேகாலத்தில் தன் உறவுகளைக் காண ஊருக்குப் போகும் போராளியின் வீட்டில் அதே வறுமையும் இயலாமைகளும்தான் தொடர்ச்சி யாய் இருக்கும். அவனது மனதிற்குள் என் னென்ன உணர்வுகள் எழுமென்பது யூகிக்க முடியாததல்ல.
* எந்த மேற்குலக நாடும் இந்தியாவைக் கடந்து ஓர் அளவுக்கு மேல் தமிழர் பிரச்சனையில் இயங்காது. இது யதார்த்த உண்மை. பேச்சு வார்த்தை விருப்பங்களை யும், வியூகங்களையும் நார்வே வந்து சொல் வதற்குப் பதில் விடுதலைப் புலிகள் இயக்கமே இந்தியாவுக்கு இரண் டாம் வழிகள் மூலம் சொல்லி நல்லுறவு தேடியிருக்கலாம்.
* பேச்சுவார்த்தை களுக்குப் போயிருக்கக்கூடாது. போன பின்பு அதனை செவ்வனே கையாண்டிருக்க வேண்டும். உலகத் தமிழரிடையே அளவின்றிக் கிடக்கும் அரசியல், சட்ட, ராஜதந்திர வளங்களை ஒருமுகப்படுத்தி இலங்கையை- உலகை எதிர் கொண்டிருக்க வேண்டும். அது நடக்க வில்லையென்பதும், உணர்ச்சிவசப்படும் இளவயதுக் காரர்களைப்போல் பேச்சுவார்த்தைகளை அணுகியதும் மிகப்பெரிய தவறாகும். உலகின் நல்லெண்ணெத்தை வீணடித்துவிட்டதாகவே தெரிகிறது.
இவற்றோடு இன்னும் சிலவற்றை அக்கடிதத்தில் எழுதியிருந்தேன். இத்தருணத் தில் இதனை எழுதக்காரணம் இரண்டு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின் னடைவுக்குக் காரணங்களென வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவில் நின்றுகொண்டு கூறியதாகச் சொல்லப்படுவனவற்றில் முத லாவது -""பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டு களத்தின் ராணுவச் சாதக நிலையை இழந்தது. ஏனைய நான்கு காரணங்கள் என்ன?
(நினைவுகள் சுழலும்)
0 comments:
Post a Comment