Tuesday, July 28, 2009

"மகிந்த சிந்தனை"யில் மாயமான பொன்சேகா



போர் முடிவடைந்துவிட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு மாதங்களில், நாட்டின் இராணுவ இயந்திரத்தில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள அதிரடி மாற்றங்கள் படையினர் உட்பட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாற்றங்களில் மிகமுக்கியமானதாகக் கருதப்படும் முன்னாள் இராணுவதளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிப்பறிப்பு அரசுத்தலைவர் மகிந்தவின் பல்வேறு சிந்தனைகளை பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு எத்தகையது என்பது அனைவரும் அறிந்த விடயம். நடந்து முடிந்த போரில், வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலைக் களத்திலே செயற்படுத்தும் பணியையே சரத்பொன்சேகா மேற்கொண்டிருந்தார்.

அதிலும் வெளிநாட்டுப் போரியல் வல்லுனர்கள் நேரடியாகக் களத்தில் நின்று பல்வேறுவகையான நெறிப்படுத்தல்களை மேற்கொண்டு, எத்தகைய மனிதப்பேரவலம் இடம்பெறினும் இடங்ளைப் பிடித்து சாதனையை நிலைநாட்டுவது என்ற ஒற்றைக்குறிக்கோளுடன் போரை நடத்த –

சரத் பொன்சேகா சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக அங்கு நின்று தனது படைகளை வழிநடத்திக்கொண்டிருந்தார்.

இத்தகைய சரத் பொன்சேகாவை மாபெரும் யுத்த வெற்றி நாயகனாக தென்னிலங்கை மக்கள் நோக்கினர். சிங்கள ஊடகங்களும் தமக்குக் கிடைத்த இன்னொரு ‘துட்டகைமுனு’ என்று புகழாரம் சூட்டின. படைத்தரப்பினர் மத்தியிலும் பொன்சேகாவின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது.

இத்தகையதொரு நிலையில், ஏற்கனவே பொன்சேகா தொடர்பாக அடிமனதில் பலத்த ஆதங்கத்துடனிருந்த மகிந்த சகோதரர்களின் சிந்தனை வேறுமாதிரி செயற்படத் தொடங்கியது.

அதாவது, 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முழு மூச்சான போர், தொடர்ந்து நிலங்களை ஆக்கிரமித்த செய்திகளை வழங்கிக்கொண்டிருக்க –

அப்போதெல்லாம் விடுதலைப்புலிகளின் படைபலம் உட்பட பல்வேறு விடயங்களைப் பேசவல்ல அதிகாரியாக கொழும்பில் ஊடகங்களுக்குப் பதிலளித்த அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா –

இராணுவ விடயங்களுக்கு அப்பால் பல அரசியல் மற்றும் இராஜதந்திர விடயங்கள் தொடர்பாகவும் கருத்துக் கூறியிருந்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதி அல்லது வெளிவிவகார அமைச்சர் பேசவேண்டிய விடயங்களையும் - தனக்குள்ள அதிகார வரம்புகளுக்கு அப்பால் சென்று – சர்வ சாதரணைமாக ஊடகங்களுடன் பேசினார். அது மட்டுமல்லாமல் அரசியல், இராஜதந்திர சந்திப்புக்களையும் மேற்கொண்டார்.

இதேவேளை, பொன்சேகா பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களிலும் - மேடைகளில் பேசும்போது – நாட்டை எவ்வாறு வழிநடத்தவேண்டும் என்பது உட்பட சிங்கள மக்களின் மனங்களை வெல்லக்கூடிய வகையில் ஒரு மேடைப்பேச்சாளனாகவும் தன்னை இனங்காட்டிக்கொண்டார்.

இது இவ்வாறிருக்க, படைத்தரப்பில் பொன்சேகாவின் செல்வாக்கை எடுத்துநோக்கினால், அது மிக அதிகமாகக் காணப்பட்டது என்றே கூறலாம். தற்கொலைக்குண்டு தாக்குதலில் படுகாயமடைந்து மரணத்தின் எல்லைவரை சென்று குணமான பின்னர், மீண்டும் பணியில் வந்து இணைந்துகொண்ட பொன்சேகாவை படைத்தரப்பினர் அனைவரும் ஒரு நாயகனாக பார்த்தனர்.

ஆகவே, பொன்சேகாவின் இந்த ஒட்டுமொத்த பிரபலமும் செல்லவாக்கு மிக்க போக்கும் வளர்ச்சியும் மகிந்த சகோதரர்களுக்கு இயல்பாகவே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. அதாவது, பொன்சேகாவின் வளர்ச்சி தற்போது தாம் நடத்திவரும் குடும்ப அரசியலுக்கு நிச்சயம் ஓர் அச்சுறுத்தலாக அமையப்போகிறது என்ற அச்சம் மகிந்த சகோதரர்களை பிடித்தாட்ட தொடங்கியது.

நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பலம்பொருந்திய அரசியற்புள்ளியாக பொன்சேகா மாறிவிடுவாரோ என்ற அச்சமும் –

நாட்டைத் தொடர்ந்து ஆட்சி செய்யும் கனவுடன் திட்டங்களைத் தீட்டிவரும் தமக்கு பொன்சேகா வீட்டுக்குள்ளேயே வில்லானாகிவிடுவாரோ என்று பீதியும் - மகிந்த சகோதரர்களின் மனங்களில் துளிர்விடத்தொடங்கியது.



இராணுவத்தின் எண்ணிக்கையை நான்கு இலட்சமாக உயர்த்தவேண்டும் என்று அடிக்கடி எல்லா இடங்களிலும் கூறிவந்த பொன்சேகாவின் அறிவிப்பு ஏனையோருக்கு வேண்டுமானால், அது விடுதலைப்புலிகளின் எதிர்கால அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான செயன்முறையாகத் தெரியலாம், ஆனால் –

இவ்வாறு இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பது தனக்கான வாக்கு வங்கியை வளர்த்தெடுப்பதற்கு பொன்சேகா சாதுரியமாக தீட்டும் திட்டமே என்று மகிந்த சகோதரர்கள் உஷாராகினார்கள்.

இந்தப் பயங்கள் இவ்வாறிருக்க, பொன்சேகா அடுத்தடுத்த அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இரகசியமாகத் திட்டமிடுகிறார் என்று ஒரு செய்தி வேறு மகிந்தவின் காதை எட்டியிருக்கிறது.

இதற்குமேல் தாம் தூங்கினால், பொன்சேகாவின் திட்டங்கள் விழித்துக்கொள்ளும் என்று அஞ்சிய மகிந்த சகோதரர்கள், அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்கள்.

பொன்சேகாவுக்கு நோகாமல் அடித்தது போல அவரை இராணுவத் தளபதி பதவியிலிருந்து நீக்கி, எந்தவிதமான அதிகாரங்களும் இல்லாத, படைகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் படைகளின் பிரதானி எனப்படும் ஒரு புதிய பதவியை உருவாக்கி அதனை அவரது கையில் ஓப்படைத்தார்கள்.

இதேவேளை, அடுத்த இராணுவ தளபதியாக இராணுவ உயரதிகாரிகளின் மூப்பு வரிசையில் எட்டாவது இடத்திலிருந்த மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டார். இவர் முன்னர் வன்னி கட்டளைத் தளபதியாகப் பணியாற்றியவர்.

தமக்கு அடுத்த இராணுவத் தளபதி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பல மூத்த தளபதிகள் மகிந்தவின் இந்த அதிரடி மாற்றங்களினால் மனமுடைந்து தமது இராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

மொத்தத்தில் பொன்சேகாவின் வளர்ச்சி தமக்கு அரசியல் ரீதியான அச்சுறுத்தலாக வந்துவிடுமோ என்ற பீதியில் மகிந்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மட்டத்தினரைக் கொதிப்படையச் செய்துள்ளன.

ஆனால், பொன்சேகாவைப் பொறுத்தவரை தனக்கு இவ்வாறான ஒரு நிலை வரும் என்று நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார் என்பது நிச்சயம்.

ஏனெனில், கோத்தாபாய ராஜபக்ஷவின் பால்ய சிநேகிதனாகவும் மகிந்த அரசின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் கோலோச்சிக்கொண்டிருந்த பொன்சேகா –

தனது அடிமடியிலேயே அரசு கைவைக்கும் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கமாட்டார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் நாயகன் என்று வர்ணிக்கப்பட்ட பொன்சேகாவே தமக்கு ஆபத்தாக மாறிவிடுவார் என்றநிலை காணப்பட்டவுடன் மகிந்த அரசு கழற்றிவிட்டுவிட்டது என்றால் –

சில தமிழ் அமைச்சர்களும் எம்.பிக்களும் மகிந்த அரசுடன் பேரம் பேசி தமிழ்மக்களுக்கு விடிவொன்றைப் பெற்றுவிடலாம் என்ற மாதிரி இன்னும் நம்பிக்கொண்டிருப்பது நகைப்புக்கிடமானது.

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP