Wednesday, August 12, 2009

வீட்டுக்கு ஒருவராய் விடுதலைப் பண்பாடுங்கள், " உயிர்க்கும் தமிழீழம் "

முள்ளிவாய்க்காலில் மூண்டதீயிலே உயிர்கொடுத்த ஆயிரமாயிரம் உறவுகளின் உதிரத்தில் கருத்தரிக்கும் புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை.பாரம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம்.

எம் இனத்தில் குரல்கள் அடக்கப்பட்டுள்ளது.அதன் நியாயபூர்வமான கோரிக்கைகள் மறுதலிக்கப்படுகின்றது. அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த போதும் அது பற்றிய அக்கறையை காட்ட நீங்கள் யாரும் தயாராய் இல்லை என்பது வேதனையான விடயமாகும்.

ஆயுதப்போராட்டத்தில் முடிவு எம் ஈழப்போரின் முடிவு அல்ல. நாம் தொடர்ந்து நகரவேண்டும், எம் கனவுகள், எம் தேச மக்களின் சோகங்கள் எல்லாம் களைந்து எமக்கான தேசத்தை அடைய வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் தெளிவாயும் அதே நேரம் அதற்காய் அந்த இலக்கை அடைய தம்மை அர்ப்பணித்து பணியாற்ற தயராய் இருக்க வேண்டும்.

வீதிகளில் கொடிகளை கொண்டு விரைந்து வந்து நின்ற போது தமிழனின் ஒற்றுமை பற்றி பேசிய இந்த ஊடகங்கள், இன்று எம்மை பற்றி குறைந்த பட்ச செய்திகளை கூட கொண்டுவருவதில்லை. நாம் களத்தில் போராடாது போயிருந்தால் தமிழன் என்பவனின் அடையாளம் அழிக்கப்பட்டிருக்கும் ஆனால் இன்று அந்த விடுதலைப்போர் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்த வேளை நாம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக தம்மை அhப்;பணித்து மூன்று ஒரு சந்ததி போராடி அதன் இலக்கை அடையாது பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது.

முப்பதாயிரத்துக்கு அதிகமான இளைஞர்கள் யுவதிகள் தங்கள் உயிர்களை எம் மண்ணின் விடுதலைக்காய் அர்ப்பணித்துச் சென்றுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் இந்த போரின் போது தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, கோடிக்கணக்கான சொத்துக்களை நாம் இழந்துள்ளோம்.

ஊரிழந்து, சொந்த நாடிழந்து சிங்களத்தின் திட்டமிட்ட வல்வளைப்பால் நாங்கள் அகதியாக அடுத்தவன் நாடுகளின் வாழ்கின்றோம். இந்த வாழ்வு எமக்கு இனிக்கின்றது. ஆனால் சொந்த மண்ணில் அகதியாய் சிங்களவன் காவலுக்குள் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கும் லட்சக்கணக்கான மக்களை பற்றி கவலை இன்றி எம்மால் வாழமுடியுமா?

அவர்கள் எம் உறவுகள் என்றில்லை என்று சொல்லி ஒதுக்கிட முடியுமா? புலத்தில் அமிழ்த்தப்பட்ட போராட்டங்கள் மீண்டும் மீட்சி பெறவேண்டும்.

உறங்கு நிலையில் இருக்கும் இளையோர் அமைப்புக்கள் புலம் எங்கும் சிலருக்கும், சில அமைப்புக்களுக்கும் பின்னால் அணிதிரள்வதை விடுத்து எமது மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இளையோர் அமைப்பு முள்ளிவாய்க்காலின் அடுத்த நாளே செயல் இழந்து கிடப்பது வேதனை!

தலைவர் இளையோரை நம்பி ஒப்படைந்த போராட்டம் சிலரின் தவறான வழி நடத்தலால் வாடி வதங்கி கிடக்கிறது செல்நெறி தவறா சிந்தனையோடு செயல் முடிக்கும் அந்த இளைஞர்களின் உணர்வுகள் முடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இளையோரை நீங்கள் அடுத்த கட்ட தலைவர்கள், உங்களுக்குள் நிச்சயமாக பதவிச் சண்டைகள் இல்லை. சிலரின் இந்த சண்டைக்குள் நீங்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றீர்கள்!

எமது இனத்தின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே தலைவரின் சிந்தனையில் உதித்தது இளையோர் அமைப்பு!

அந்த அமைப்பு இன்று சிலரின் தலையாட்டு பொம்மையாக செயற்ப்படுவது வருந்தத்தக்கது. இந்நிலை மாற்றம் பெற்று இளையோர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், இன்னும் இதர இளையோர் சம்பந்தமான கழகங்கள் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும்.

அகதி முகாம்களுக்குள் முடங்கி கிடக்கும் உறவுகளை மனதில் வையுங்கள்! இன்னும் இன உணர்வுகளை கொச்சைப்படுத்தி சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்குள் உங்கள் உன்னத அமைப்பை அடகு வைக்காதீர்கள். பிணங்களாய் இருக்கும் அவர்களையும் உயிர்ப்பியுங்கள். நீங்களும் உயிர்த்தெழுங்கள்.

மரணித்து போன எம் ஆயுத வழி போராட்டங்களோடு நீங்களும் பிணங்களாவதை விடுத்து அடுத்த கட்டம் நோக்கிய நகர்வை இளையோர் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்

முள்ளிவாய்க்காலில் மூண்ட தீ அக்கினிக்குஞ்சுகளாய் அகிலத்தை எரிக்கட்டும்……

....................................................................................

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP