எமது மக்களை போக விடு! - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
மறக்க முடியுமா' நக்கீரனில் நான் எழுதத் தொடங்கி இது ஐம்பதாம் பதிவு. இரண்டு இதழ்களுக்கெனத் தொடங் கிய எழுத்து, காலம் தமிழ் வரலாற்றை சிலுவையிலறைந்த வலியின் கதறலாய் தொடர்கிறது. இப்போதும் நிறைவு செய்திடவே விருப்பம். எனினும் அரசியல் வெளி உண்மை அறுபட்டும், மானுடவெளி உணர்வு சலித்தும் கிடக்கின்ற ஒரு காலகட்டத்தில் இருள் கவிந்த பாலைவனத்தின் தூரத்துக் கூக்குரலாய் இன்னும் சில வாரங்கள் தொடரும். வீழ்ந்த தமிழினம் மீண்டும் எழும், மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையின் தளிர்களாய் ஆங்காங்கு இயங்கிவரும் உணர்வு கொண்ட இளையர்களுக்கு இவ்விதழ் பதிவினை சமர்ப்பிக்கிறேன்.
""எமது மக்களை போகவிடு'' (Let Our People Go) என்ற முழக்கத்தை செப்டம்பர் மாதத்திற்காய் "நாம்' (We) என்ற அமைப்பின் இளையர்கள் முன் வைக்கிறார்கள். முட்கம்பி வேலிகளுக்குள் சிறை யிடப்பட்டிருக்கும் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்கள் அவர்தம் ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் உரிமையைக் கொடுங்கள் என்ற கோரிக்கையோடு வருகிறார்கள் இந்த இளையர்கள். தமிழர்களாய், மனிதர்களாய் இவர்களோடு இணைவோம்.
ஊர் என்றதுமே புதுவை இரத்தினதுரையின் மறக்க முடியா கவிதையொன்று மனதில் விரிந்தது. தேடிக்கண்டெடுக்க இரண்டு நாட்கள் ஆயின.
நேற்றெம் ஊரிருந்த காற்றில்
இதமான குளிரும்
நேர்த்தியான சுகமுமிருந்தது
சாணிமெழுகிய தலை வாசலில்
சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது.
வாசலிறங்கக் கோலமிருந்தது.
வயலில் நம்பிக்கை விளைந்தது.
வெளியே அறியப்படாத எத்தனையோ
உள்ளே வெளிச்சம் நல்கின.
அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும்
குறுக்காகக் கட்டிய மாராப்பிலும்
நிறையும் மனமிருந்தது.
மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில்
இருளெனும் எழிலிருந்தது.
அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க
சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது.
ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில்
தேவ நிலை சித்தித்தது.
ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும்,
கூத்துப் பாட்டும்,
நாதஸ்வர மங்கலமும்
தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு
எங்கே துரத்திப் பிடியென்பதாய் போயின.
சாவுக்கும் சடங்குக்கும் உருகியொழுக
பக்கத்திற் சுற்றமிருந்தது.
சனியானாற் பிடித்திழுத்து எண்ணை முழுக்காட்ட
அத்தைமார் இருந்தனர்.
புது வருடத்தன்று புளியமரக்கிளையேறி
அன்னவூஞ்சல் கட்டி ஆட்ட
அம்மான்மார் இருந்தனர்.
சின்னத் திரளிப் பொடியும்
வெள்ளி முரலும்
கூனி இறாலும் போட்டுக் குழம்பு வைக்க
குஞ்சாச்சிமா இருந்தனர்.
நிழல் விழுத்தும் முற்றத்துப் பூவரசின் கீழே
பல்லாங்குழியாட அம்மான்மகள்மார் இருந்தனர்.
தில்லையம்பலப் பிள்ளையார் கோயிலுக்குப் போய்வர
திருக்கல் வண்டிகள் இருந்தன.
என்ன இல்லையென்பதாய் எல்லாமுமிருந்தன.
தையெனிற் பொங்கல்.
சித்திரையிற் கஞ்சி.
ஆடியிற் கூழென
வாய்க்குக்கூட வரையறையிருந்தது.
அப்பனுக்கு மூத்தவன்
ஆத்தாளுக்கு இளையவனென
சாவுக்குப் பின்னுமொரு சங்கையிருந்தது.
ஆகக்கூடிய தொலைவுப் பயணமெனக் கதிர்காமத்துக்கு
அதுவும் கால்நடையாகப் போகும்
வடிவிலியங்கிய வாழ்வொன்றிருந்தது காலடியில்.
மாதமொரு கூத்திருந்தது கோயில் வெட்டையில்.
அதுவே போதுமெனத் தூங்கியெழுந்தன ஊர்கள்.
சூடடித்துக் குவித்த நெல்லும்
கிழித்துலர்த்திய ஒடியலும்
நிறைந்த நெஞ்சில் நித்திரையிருந்தது.
தழுவிப் போனது காற்று.
உருகி உள்ளேறியது உறவு.
கமல்ஹாசனும் சிம்ரனும் சொல்லித்தர முன்னரும்
இலந்தைமரக் காட்டு வெளியிடையும்,
புல்லாந்தியும் நாயுருவியும் சணைத்த
ஒற்றையடிப் பாதையிலும்,
வயல் வரப்பிலும்
வாய்க்காற் கரையிலும்
தோட்டவெளி ஆடுகாற் பூவரசின் கீழும்
இணைந்ததும் பிணைந்ததுமென
இருந்தது எம்மூர்களிலும் காதல்.
இன்று எல்லாம் தொலைத்து
இடருருவிக் கிடக்கிறது வனப்பு.
துக்கித்திருக்கிறது சோபிதம்.
முற்றத்து முருங்கை நிறைகாய்
சுமைதாங்காது கிளை முறிய
மரமும் பாறிச் சரிகிறது -
உருவிச் சப்ப ஒருவரில்லை.
கிணற்றடி வாழை குலை முற்றிக் கிடக்கிறது
ஒருவரில்லை உரித்துத் தின்ன.
இருந்ததை எண்ணி மகிழ்ந்ததுவாய்
இழந்ததை எண்ணி குமைந்ததுவாய்
உழவை எதிர்பார்த்துக் கிடக்கிறது ஊர்!
ஆம், உலகிடம் நம் மக்கள் இன்று வேண்டி நிற்பது ஒன்றுதான்! நாங்கள் ஊர் போய் சேர வழி செய்யுங்கள். ஊருக்குப் போனால் மீண்டும் போராட் டம் தொடங்குவார்களோ என்ற அச்சத்தில் இனத்தை யே வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்திடும் திட்டம்தான் திறந்தவெளி வதை முகாம்கள். அக் டோபர் வந்துவிட்டால் அவை மரண முகாம்களாகும். ஆதலினால் அனைவரும் முழங்குவோம்: ""எமது மக்களை போகவிடு. Let Our People Go''
போராட்டம் என்னவாகும்? தமிழருக்கு அரசியல் தீர்வொன்று கிட்டுமா? எதிர்காலம் எவ்வாறிருக்கும்? பலரும் கேட்கிற கேள்விகள் இவை. இதோ பதில்:
மே-04. முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தத்தின் உக்கிரம் ஏறிக் கொண்டிருந்த நாட்கள். இயக்கத்தின் இரண்டாம் நிலை எதிர்காலத் தலைவர்களை அழைத்திருக்கிறார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இரவுப் பொழுது. பங்கருக்குள் சந்திப்பு. அவரது கண்களில் ஞானத்தீட்சை பெற்றவர் போன்றதொரு ஒளி. ஒவ்வொரு சொல்லிலும் நம்பிக்கையின் உயிர்த் துடிப்பு. பிரபாகரன் பேசி யிருக்கிறார்: ""தினையான் குருவியை பார்த்திருக்கி றீர்களா? வேலிகளில், பூச்செடிகளில், வயல்வெளி களில், வாலை வினாடிக்கு இருமுறை சிலிர்ப்பிக் கொண்டு தினைகள் சேகரிக்குமே தினையான் குருவி... குருவி இனங்களிலேயே மிகச் சிறிய குருவி இந்த தினையான் குருவிதான்... ஆனால் வெயில், மழை, புயல், குளிர், பாம்பு-எலி போன்ற எதிரிகள் எல்லாவற்றிடமிருந்தும் தன்னை பாது காத்துக் கொள்கிற ஏற்பாடுகளை சிறுகச் சிறுக ஆனால் கச்சிதமாகவும், பிசிரின்றி யும், தன்னம்பிக்கையோடும் செய்யும். நீங்களும் தினையான் குருவிகளைப் போல் இருங்கள். போராட்டம் இன்று மிகவும் பின்னடைவு கண்டிருப்பது உண்மைதான். ஆனால் தினையான் குருவிகளைப் போல எமது போராட்டத்தையும், எமது மக்களுக்கான வாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்புவோம்.
எதற்கும் அஞ்சாதீர்கள். நாம் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதும் நமது தளராத மன உறுதிதான் நமது போராட்டத்தை பெரிதாக வளர்த்தது. பாரதியாரின் பாடலை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள்.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை
வைத்தேன்
வெந்து தணிந்தது காடு: -தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்
உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
இரண்டு முறை இப்பாடலை பாடிய பிரபாகரன் அவர்கள் தொடர்ந்திருக்கிறார். பாரதியின் அக்னிக் குஞ்சுகள் போலும் இருங்கள். நமது வளங்கள் அழிந்து குறுகி விட்டோமே என்று மனம் தளராதீர்கள். முக்கியமாக அஞ்சாதீர்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். கொடூரத்தின் உச்சத்தில் நின்று கோரத்தாண்டவம் புரியும் சிங்களப் பேரினவாதக் காட்டை அழிக்க பொந்திடை வைக்கும் சிறு நெருப்பு போதும். ஏனென்றால் உண்மையும், நீதியும், வரலாறும் என் றானாலும் நமது பக்க மாய்த்தான் இருக்க முடியும். எனவே அஞ்சா தீர்கள்.
போராட்டத்தின் அக்னிக் குஞ்சுகள் நீங்கள். சிறு நெருப்பாய் இருங்கள். உங்களிலிருந்து பெரு நெருப்பு உருவாகும்.
பிரபாகரன் மேலும் பேசுவார்.
(நினைவுகள் சுழலும்)
0 comments:
Post a Comment