Friday, September 25, 2009

பிரபாகரனின் புதிய போர் முழக்கம்! - ஜெகத் கஸ்பர்



முல்லைத்தீவு கடற்புறத்தே நின்றுகொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாரிய பின்னடைவுக்கு முதற்காரணமாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறிப்பிட்டது.

"2001-ம் ஆண்டு தன்னிச்சையான சண்டை நிறுத்தம் அறிவித்து அனைத்துலக வழிநடத்துதலில் 2002-ம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டமை யினைத்தான். சமாதானப் பேச்சுவார்த்தைகள் துரோகத் தனம் போர்த்த அரசியல்-ராணுவப்பொறி என்பதை கணித்தறிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தவறியதெப்படி என்ற கேள்வி இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது.

நான் மிகவும் மதிக்கும் உலகத் தமிழர்களில் ஒருவர் தங்கவேலு. அப்பழுக்கில்லா தமிழ் ஈழ ஆர்வலர். கனடா நாட்டு டொராண்டோ நகரில் இப்போது வாழ்ந்து வரும் இவர் கூர்த்த மதியுடையவர், அடர்த்தியான எழுத்தாளர். நக்கீரன் என்ற புனைப்பெயரில் நீண்ட காலமாய் எழுதி வருகிறார். இரண்டாம் சுற்றுப் பேச்சு வார்த்தைகள் "ஓஸ்லோ' நகரில் நிறைவுற்ற நாளில் மின் அஞ்சல் கட்டுரையூடாக இவர் குறிப்பிட்டிருந்தார். ""முப்பது ஆண்டுகளாய் வேலுப்பிள்ளை பிரபாகரனும், அவரது போராளிகளும் சாதித்த யாவும் இரண்டே மாதத்தில் பேச்சுவார்த்தைகளூடாய் இழக்கப்பட்டு விட்டன'' என்று. மறக்க முடியாத இந்த வரிகள் அவரது வலி மட்டுமல்ல, பலரது மனக்குமுறலாயும் இருந்தது.

அதே காலகட்டத்தில் சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் வன்முறையற்ற வழியில் சிக்கலான தேசிய-இனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்த கருத்தமர் வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், எரித்ரேயா, ருவாண்டா போன்ற நாடுகளிலிருந்து கருத்துரையாளர்கள் வந்திருந்தார்கள். நானும் பங்கேற்றுக் கலந்து கொண்டேன். இரவு உணவுக்குப்பின் ஓர் தனித்த உரையாடலின் போது எரித்ரேயா நாட்டிலிருந்து வந்திருந்தவர் -பெயர் மறந்து விட்டேன், அவர் சொன்னார்: ""என்ன காரணங்களுக்காக விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டார் களென்று தெரியவில்லை. பலமான நிலையில் நின்று கொண்டு தேடப்படும் சமாதானம் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் இன்றைய உலக ஒழுங்கு அதற்குச் சாதகமானதாயில்லை. பேச்சுவார்த்தையூடாக அவர்கள் வீழ்த்தப் படுவார்களென்றே நான் நினைக்கிறேன், அஞ்சுகிறேன்'' என்றார்.




அந்த எரித்ரேய நாட்டுக்காரர் இன்னொன்றையும் அன்று குறிப்பிட்டார். அன்று அவர் கூறியபோது அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நடந்து விட்டவற்றை மீளாய்வு செய்கையில் தமிழர்களாகிய நமது ஆய்ந்தறியும் குறைபாடுகள் நிறையவே புலப்படுகின்றன. அந்த மனிதர் சொன்னார்: ""மரபு ரீதியான போர் அணிகளை விடுதலைப்புலிகள் உருவாக்கியிருக்கிறார்கள். அது மிகப்பெரிய சாதனைதான். இந்த போர் அணிகள்தான் அவர்களது இப்போதைய பெருவெற்றிகளை சாத்தியப்படுத்தியுள்ளன. ஆனால் உலகம் அதிநவீன போர்க்கருவிகளை இலங்கை அரசுக்கு வழங்க முன்வரும் பட்சத்தில் இதே மரபுப் போரணிகள் விடுதலைப்புலிகளுக்கு சுமையாக மாறும்.

ஆதலால் என்னைப் பொறுத்தவரை அவர்கள் ஓர் திறமான கொரில்லா சக்தியாகவே தொடர வேண்டும். சமாதான காலத்திலும் கூட அவர்கள் கொரில்லா வாழ்க்கையே வாழ வேண்டும். குறைந்தபட்சம் மரபுப் போரணி கள் மிகக்குறுகிய கால அளவில் மீண்டும் கொரில்லா அணிகளாக மாறுவதெப்படியென்ற உத்திகளையேனும் அவர்கள் திட்டமிட்டு, பயிற்றுவித்து எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் உலகம் சதி செய்யும் நாளில் அவர்கள் பேரழிவை சந்திப்பார்கள்'' என்றார்.

எத்தியோப்பியாவுடன் நீண்ட போர் நடத்தி விடுதலை பெற்ற நாடு எரித்ரேயா. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு இணையாக பிறிதொன்றை ஒப்பீடு செய்ய முடியுமென்றால் அது எரித்ரேய விடுதலைப் போராட்டம்தான். இன்றும் ஐ.நா. அவையில் தமிழீழ மக்களுக்கான குரல்களில் ஒன்றாக தம்மை எப்போதும் முன்வந்து அளிக்கும் இந்த நாட்டின் மக்கள் மகத்தானவர்கள். ஆயுத பலத்தை மானுட உணர்வுகளின் ஆற்றல் முறியடிக்குமென்பதை தமிழீழ மக்களுக்கு முன்னதாகவே நிரூபித்தவர்கள். அந்த நாட்டின் மனிதர் அக்கறையுடன் கூறிய மேலே நான் சொன்ன கருத்து அப்போது எனக்கு உரைக்கவில்லை. ஆனால் அவரது கூற்று அச்சொட்டான தீர்க்கதரிசனம் என்பதை நடந்துவிட்ட யாவும் நமக்குக் காட்டி நிற்கின்றன. கிளிநொச்சி விழுவதற்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் பேராயுதங்களை தாரை வார்த்துவிட்டு கொரில்லா அணிகளாய் வன்னிக் காடுகளுக்குள் பரவியிருந்தால் போராட்டம் பாதுகாக்கப்பட்டிருக்குமே என்றெல்லாம் இன்று எண்ணம் அங்கலாய்த்துக் களைப்புறுகிறது.

போராட்டப் பின்னடைவுக்கு இரண்டாவது காரணமாக பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டது தளபதி பால்ராஜ் அவர்களின் இழப்பு. தமிழீழ வரலாற்றின் மகத்தான இம்மாவீரனை மனம் சிலிர்த்து முன்பேயே நான் பதிவு செய்துவிட்டதை வாசகர்கள் அறிவீர்கள். ""பாக்ஸ் சண்டை'' என அறியப்படும் எதிரியின் அணிகளை ஊடறுத்து அவர்களுக்குப் பின்புறமாய் நின்று கொண்டு சண்டையிடும் வித்தகத்தில் பால்ராஜ் கில்லாடி. ""பால்ராஜ் இருந்திருந்தால் அன்று தாளையடி-செம்பியன்பற்று கடற்கரையில் தரையிறங்கி வதிரையனில் நின்று பாக்ஸ் சண்டை பிடித்து ஆனையிறவை வீழ்த்த வழி செய்ததுபோல் இப்போது ஆழ்கடல் வழியாக "சாலை' கரையில் தரையிறங்கி வள்ளிபுனம் ஆற்றங்கரையோரமாய் ஊடறுத்து புதுக் குடியிருப்பு இரனைப்பாலை பகுதிகளில் நின்றிருந்த பத்தாயிரத்திற்கும் மேலான ராணுவத்தினரின் கதையை முடித்திருப்பான். பால்ராஜை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆமிக்காரன் ஓடியிருப்பான்'' என்று பிரபாகரன் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. களத்தின் இறுக்கமான தருணத்தில் கூட தன்னிலும் மேலானதோர் தளபதி இருந்தான் -அவன் பால்ராஜ் -அவன் இருந்திருந் தால் முல்லைத்தீவு பேரழிவு நடக்காதபடி சண்டை யிட்டிருப்பான்'' என்று சொல்ல முடிந்தமை பால்ராஜின் தனித்துவத்தையும் அதனிலும் மேலாய் பிரபாகரனின் உயர்வையும் வெளிப்படுத்தியதாகவே பதிவு செய்ய வேண்டியுள்ளது.

விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவுக்கு மூன் றாவது காரணமாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் உரைத்தது கருணம்மானின் துரோகம். கருணம்மானின் துரோகம் இரு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. ஒன்று போர் நடத்தும் ஆளணிகள் விடுதலைப் புலிகளுக்கு வெகுவாகக் குறைந்தது, இரண்டு இயக்கம், அதன் போர் உத்திகள், முக்கிய நபர்கள், தொடர்பான முக்கிய தகவல்களை இலங்கை ராணுவத்திற்குக் கொடுத்து உதவியதால் விடுதலைப்புலிகளை களத்தில் எதிர்கொள்வது இலங்கை ராணுவத்திற்கு மிகவும் எளிதாயிற்று. பதினெட்டு ஆண்டுகளாய் அடி வாங்கி மட்டுமே பழகி திருப்பித் தாக்குதல் நடத்த தடுமாறிக் கொண்டிருந்த இலங்கை ராணுவத்திற்கு விடுதலைப் போராட்டத்தை திருப்பிடியத்துத் தாக்கியழிக்கும் முக்கியமான உள்ளீடுகளைத் தந்ததும், காடுகள் வழி புலிகளின் பகுதிகளை ஊடுருவிச் செல்லும் உத்திகளை, ஆளணிகளைத் தந்ததும் கருணம் மான்தான்.

உண்மையில் கருணம்மானை எப்படியேனும் சரி செய்து போராட்டத்திற்காய் வைத்திருக்க வேண்டு மென்றே இறுதிவரை பிரபாகரன் விரும்பியிருக் கிறார். தன்னுடன் வந்து வன்னியில் நிற்கும்படி பலமுறை அழைத்திருக்கிறார். ""என்னோட நின்டா சரியாயிடுவான். எதென்டாலும் கதைத்து சரியாக்கிடலாம்'' என்று தான் மூத்த தளபதிகளிடம் கருணாவுக்காய் பேசியிருக்கிறார். ஆனால் பிரபாகரன் கருணாவை நம்பிய அளவுக்கு கருணா தன்னை வளர்த்து உயர்த்திய தலைவனை நம்பவில்லை. தமிழர்கள் வரலாற்றில் ஒருபோதும் வீரமின்மையால் வீழ்ந்ததில்லை- துரோகத்தால்தான் வீழ்ந்து வருகிறார்களென்பதற்கு கருணா மீண்டுமொரு உதாரண மானான். அதேவேளை கருணம்மான் தலைவனோடு களத்தில் நின்றிருந்தால் தமிழீழ விடுதலை வரலாறு வேறு மாதிரியாய் இருந்திருக்கும்.

விடுதலைப் போராட் டத்திற்கு பின்னடைவு தந்ததாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறிப் பிட்டது 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் கரையோரப் பகுதிகளை ஊழித் தாண்டவமாடித் தாக்கிய சுனாமி. விடுதலைப்புலிகளது போர்க்கள ஆற்றலின் முது கெலும்பாக நின்றது கடற்புலிகள் பிரிவு. கடற்புலிகளின் வளங்கள் பெருவாரியாக கடற்கரை சார்ந்தே நிறுத்தப்பட்டிருந்தன.

நீண்ட காலமாய் சிறுகச் சிறுக கடற்புலிகள் கட்டியெழுப்பிய வளங்கள், பணிமனைகள், ஆய்வுக்கூடங்கள் என கணிசமானவை சுனாமியால் விழுங்கப்பட்டன. சுனாமி விளைத்த இழப்புகளின் விபரம் அப்போது புலிகளால் வெளியிடப்படவில்லை. ஆனால் போராட்ட வலு குறைந்ததில் சுனாமிக்கு உள்ள பங்கை போரின் உச்ச நாட்களில் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.

ஐந்தாவதாக பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டது எல்லோரும் மிகப்பெரும் வசதியென்றும் துணையென்றும் கருதிய "அலைபேசி', "கை பேசி' -மொபைல் தொலைபேசிக் கலாச்சாரம். கடந்த பத்து ஆண்டுகளில் கை பேசி அடிமைகளாய் களத்தில் நின்ற பலரும் ஆகிவிட்டிருந்தனர். அதன் எதிர்விளைவுகளை எவரும் சரிவர மதிப்பீடு செய்யவில்லை. 2002-ம் ஆண்டுக்குப் பின், குறிப்பாக இந்தியாவும் உலகநாடுகளும் இலங்கை ராணுவத்திற்கு உயர் தொழில்நுட்ப உள்ளீடுகள் வழங்கத் தொடங்கியபின் புலிகள் -அவர் தம் தளபதிகள் -ஆயுதக் கொள்வனவுகள்- கொழும்பு உள்ளிட்ட பிற பகுதிகளிலுள்ள அவர்களது வளங்கள் -போர்க்களத் திட்டங்கள் என அனைத்து தகவல்களையும் இலங்கை ராணுவத்தால் புலிகளின் கைபேசிகளை இடைமறித்துச் சேகரிக்க முடிந்தது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பதிவு செய்த மேலும் இரண்டு காரணங்களை இப்போதைக்கு இங்கு நான் மறு பதிவு செய்ய விரும்பவில்லை. காலம் வருகையில் அவற்றை நிச்சயம் வரலாற்றிற்காய் எழுதுவேன். இவையெல்லாம் பேசி முடித்தபின் நிறைவாக அவர் கூறியது புதியதோர் போர் முழக்கம். பண்டார வன்னியனின் வாளை தமிழரின் விடுதலைக் குறியீடாக்கி அவர் நிகழ்த்திய மறக்க முடியாத -மறக்கக் கூடாத அந்த பேருரை.

(நினைவுகள் சுழலும்)

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP