நான் உங்களோடுதான் இருக்கிறேன்'' பேசுகிறார் பிரபாகரன்
கி.மு. 543-ஆம் ஆண்டு இந்தியாவின் மகத நாட்டு மன்னன் காட்டு குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது கஜபுல தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தீர்க்கமாகத் தெரியாமல் மரக்கலமேறும் விஜயனும் அவனது அடங்காப் பிடாரிகளும் இலங்கையின் இன்றைய புத்தளத்தை அடுத்த தம்பப்பண்ணை துறையில் கரை சேர்ந்ததாக மகாவம்சம் பதிவு செய்கிறது.
அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமிழரெனக் கருதப்படும் அந்நிலத்து முற்குலமாம் நாகர் இன இளவரசி குவேனியைக் கூடியும், வடபகுதி மாதோட்ட தமிழ் குறுநில மன்னனோடு நட்பு தேடியும், தமிழகத்து பாண்டிய மன்னர்களோடு அயலுறவு அமைத்தும் இலங்கை மன்னனாக தன்னை முடிசூட்டிக்கொண்டு முப்பதாண்டு காலம் ஆட்சி புரிந்ததாய் கதை உண்டு.
விஜயன் இலங்கைக்கு அகதியாய் வந்தபோது சிங்களம் என்றொரு இனம் அங்கிருக்கவில்லை. ஆனால் தமிழரின் மூதாதையர் இருந்தனர். உண்மையில் "சிங்களம்' என்பதே மொழி, இனம், பண்பாடு சார்ந்த சொல் அல்ல. சிங்களம் என்றால் தமிழில் கறுவாப்பட்டை. அக் காலத்தில் கடலோடி வாணிபம் செய்தோர் அத் தீவுப் பகுதியை அதிகம் தேடிப் போனது இக் கறுவாப்பட்டைக் காகத்தான். கறு வாப்பட்டை அதிகம் கிடைத்த தால் அந் நிலப்பரப்பு சிங்களத் துவீபமெனப் பட்டது.
விஜயனுக்குப் பின் பன்னிரண் டாம் அரசனாய் அசேலன் ஆண்ட காலத்தில், கி.மு.205-வாக்கில் தமிழகம் தொண்டை நாட்டினின்று ஏலேலன் என்ற இளவரசன் பெரும் படையுடன் திரிகோண மலையிறங்கி, அனுராதபுரம் சென்று அசேலனை வென்று மொத்த இலங்கைக்கும் தன்னை அரசனாய் அறிவித்தான். நடுநிலை தவறா நீதி, பொறை, அருள், ஆண்மை, அறிவுடன் இலங்கைத் தீவு முழுமைக்கும் நல்லாட்சி தந்த ஏலேலன்தான் எல்லாளன் என்று பொதுவாக அறியப்படுகிறவன்.
உண்மையில் முல்லைத்தீவு கடற்புறத்தே நின்றுகொண்டு இளைய தளபதியர்களிடம் போராட்டத்தை ஒப்படைத்த வேலுப்பிள்ளை பிரபாகரன் போராட்ட அடையாளமாய் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்மன்னன் ஏலேலனை நிறுத்தவில்லை யென்பதும், மாறாக வெள்ளையராட்சிக்கெதிராய் கலகம் செய்து, துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு, வீரமரணம் தழுவிய வன்னி நில மன்னன் பண்டாரக வன்னியனை போராட்ட ஒளி விளக்காய் காட்டினார் என்பதும் மிக முக்கியமான குறியீடுகள்.
ஏலேலன் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்ப் பேரரசன். பண்டாரக வன்னியனோ பாரம்பரியமாய் தன் மூதாதையர்கள் வாழ்ந்த சிறு நிலப்பரப்பில் தன்மதிப்போடும், சுய அதிகாரத்தோடும் வாழ விரும்பிய மனிதன். பிரபாகரன் ஒருபோதும் சிங்கள மக்களை அடிமை கொள்ள வேண்டுமென்றோ இலங்கையை ஆள வேண்டுமென்றோ ஆசித்தவரல்ல. ஆண்டாண்டு காலமாய் தமிழர் வாழ்ந்த அந்நிலப்பரப்பில் தானும் தன் மக்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, உண்டு களித்து இன்புற்று தமிழ் பேசி வாழ வேண்டுமென்று துடித்த ஓர் நீதிமான். பேராசைகள், அகண்ட கனவுகள் இல்லாதிருந்த மாமனிதர்.
வரலாறுதான் மனிதர்களை விடுவிக்கும். ஒருநாள் வரும். "எங்கள் நாட்டின் ஒன்றுபட்ட தன்மையை காத்த மாமனிதனே' என்று பிரபாகரனை சிங்கள வரலாறு கொண்டாடும். ஏனென்றால் என் மக்கள், என் நிலம், என் மொழி என நின்று போராடினானேயன்றி அவன் சிங்கள இனத்தையும் அவர்தம் நிலத்தையும் வீழ்த்த நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா என ஏதேனும் ஓர் உலக சக்தியிடம் சரண டைந்து பக்குவமாய் இலங்கையை துண்டாடியிருக்கலாம். குறைந்தபட்சம் ஈவிரக்கமின்றி பல்லாயிரம் தமிழ் மக்களை கொன்றழித்த ராஜபக்சே கொடியவர்களைப் போல் இவரும் சிங்கள மக்களை கொன்றிருக்கலாம். அவ்வாறு பிரபாகரன் செய்யவில்லை. ஏனென்றால் அவர் நீதிமான். ஆதலால்தான் மீண்டும் சொல்கிறேன், இலங்கையின் ஒன்றுபட்ட தன்மையினையும், இறையாண்மையினையும் பாதுகாத்தது வேலுப்பிள்ளை பிரபாகரன்தானேயன்றி சந்திரிகாக்களும், ராஜபக்சேக்களுமல்ல. தனது மக்களுக்கான சுயநிர்ணய உரிமைப் போரில் சிங்கள மக்களை வேறெந்த உலக சக்தியிடமும் விற்பனை செய்ய பிரபாகரன் நினைக்க வில்லை, விரும்பவில்லை. எத்துணை பெரிய மனிதன். பண்டாரக வன்னியனும் அப்படியான ஒரு மனிதன்தான்.
அவனது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரக வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.
வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ""ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக் கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை'' என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டாரக வன்னியன்.
முல்லைத்தீவில் நின்று பிரபாகரன் பண்டாரகவன்னியனின் வரலாற்றுத் தோளுரசி யதில் மேலும் ஓர் முக்கிய செய்தியுண்டு. ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கெதிராய் பண்டாரகவன்னியன் நடத்திய கலகத்தின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர் களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் அது. அதே முல்லைத்தீவில் முப்பதாண்டு கால போராட்டம் சாதித்த தமிழருக்கான ராணுவ வளங்கள் யாவும் தகர்ந்துபோய்க் கிடந்த ஓர் தருணத்தில் பண்டாரக வன்னியனின் வீரத்தை சமகாலத் தோழமைக்கு குறியீடாய் நிறுத்த நிச்சயம் காரணம் இல்லாமல் இருந்திருக்காது. என்னைப் பொறுத்தவரை இதுதான் அந்தச் செய்தி:
""போராளிகளே, தமிழ் மக்களே! எல்லாம் முடிந்துவிட்டதுபோல் இன்று தோன்றலாம். ஆனால் காலம் நிற்பதில்லை. வரலாறு மீண்டு வரும். இதே முல்லைத்தீவு புதிய சமர்களைக் காணும். தமிழன், பண்டாரகவன்னியனைப்போல மீண்டும் இந்நிலத்தில் பழி தீர்த்து நீதி பெறுவான்.''
உண்மையில் களத்தின் கடைசி கட்ட உண்மைகளை வெளிநாடொன்றில் நின்று கொண்டு தொலைபேசி வழிக்கூறிய அப் போராளிகளிடம் நான் விடவிரும்பா நம்பிக்கையுடன் கேட்டேன்.
""உங்களைப்போல் ஆங்காங்கு உயிர் தப்பியிருக்கும் போராளிகளால் மீண்டும் முல்லைத்தீவைக் கைப்பற்ற முடியுமா?'' என்று. அதற்கு அப்போராளி சொன்ன பதில் வியப்பாயிருந்தது. ஒரு முறையல்ல, பலமுறை படபடவெனச் சொன்னார். ""முல்லைத்தீவிலிருந்து சிங்கள ஆமிக்காரனை அடித்து விரட்டுவது சின்ன விஷயம் ஃபாதர். ஆகிலும் சின்ன விஷயம் ஃபாதர். அடுத்த மாசமே வேண்டுமென்டாலும் நடத்தலாம். ஆனால் அதற்கு இந்தியாவின்ற உதவி வேண்டும். இந்தியாவின்ற உதவியின்றி அது சாத்தியமில்லை. சரியான கஷ்டம்.'' இந்தியா ஒரு நாள் மாறும், இந்தியாவின் மாற்றத்தை தமிழகம் ஒருநாள் நடத்திக்காட்டும் என்ற நம்பிக்கையோடுதான் உணர்வாளர் களாகிய நாம் எல்லோரும் இயங் கிக்கொண்டிருக்கின்றோம். அதே உணர்வோடுதான் பிரபாகரன் இளைய தளபதியர்களுக்கு கூறிய தாய் சொல்லப்படுவதையும் பதிவு செய்கிறேன்.
இதோ பிரபாகரன் பேசுகிறார்...
""இப்ப இங்கெ நிற்கிற நீங்களென்டல்ல... இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என்ற சொந்த பிள்ளையாத்தான் வளர்த் தேன். பல்லாயிரம் போராளிகளை இந்த விடுதலைக்கு நாம் ஈகம் செய்தோம். அதைவிட பெரிய நம் மக்கள் செய்த தியாகங்கள்... எதையும் நாம் மறக்க முடியாது. அந்த சகலபேரது நினைவுகளின்ட புனிதச் சுமையை உங்கட தோளிலதான் நான் நம்பிக்கையோட வைக்கிறேன். உயிரைக் கொடுக்க அச்சமில்லை என்ற நம் தியாகமும் உறுதியும்தான் போராட்டத்தை வளர்த்தது. அதே உறுதியோடு முன் செல்லுங்கள். வரலாறு நமக்காக மீண்டும் வரும்.
இருநூறு வருஷங்களுக்கு முன்னம் பண்டாரகவன்னியன் இதே வன்னி நிலத்தில் விடுதலைப்போர் புரிந்தார். இதே முல்லைத்தீவில் வெள்ளைக்காரன்ட கோட்டையை தகர்த்தார். ஆனால் துரோகி காக்கை வன்னியனால் காட்டிக் கொடுக் கப்பட்டு கற்சிலைமடு வில் காவியமானார். அன்று தரையில் விழுந்த பண்டாரகவன்னியனின் வாள் மண்மூடி, கூர் மழுங்கி, துருப்பிடித்து இனிமேல் பயன்படுத்த முடியாது எனுமளவிற்கு ஆகிக்கிடந்தது. தமிழருக் கான அந்த வாளை இருநூறு ஆண்டுகளாய் ஒருவரும் தொடவுமில்லை. ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை.
துருப்பிடித்து கூர்மழுங்கிக் கிடந்த பண்டாரக வன்னியனின் வாளை இருநூறு ஆண்டுகளுக்குப் பின்- முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் துணிவுடன் கையிலெடுத்தது. இலட்சிய உறுதி, இடைவிடா பயிற்சி, அர்ப்பணம், நினைத்துப் பார்க்க முடியாத ஈகங்களால் அந்த வாளை பட்டை தீட்டி, மேலும் மேலும் கூர்செய்து பளபளக்கும் போர்வாளாக நமது இயக்கம் அதை உயர்த்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே அந்தப் போர்வாள். உறையில் கிடக்கவில்லை, தரையில் விழவுமில்லை. தமிழருக்கான அந்த வாளை, உயரே தூக்கிப் பிடித்தபடிதான் இன்றும் நாம் களமாடுகிறோம். இன்றல்ல, என்றென்றும், உலகம் முடியும்வரை உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்குமான போர்வாளாக இதனை நான் தருகிறேன். இந்த வாள் இனி தரையில் விழக்கூடாது. கூர் மழுங்கித் துருப்பிடித்துவிடக்கூடாது. அந்தப் புனித கடமையை உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன்.
இதே முல்லைத்தீவில் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களின் கோட்டையை முற்றுகையிட்டுத் தகர்த்த பண்டாரகவன்னியனின் வரலாறு, நாம் இதே மண்ணில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடத்திய வரலாறு மீண்டும் வரும். தினையாண் குருவிகளைப்போல் அமைதியான உழைப்பும், அக்னிக் குஞ்சுகளைப்போல் அகத்தே நெருப்பும் சுமந்து தணிந்து போகாத விடுதலை தாகத்துடன் இயங்கினீர்களென்றால் புலிகளின் படை மீண்டும் முல்லைத்தீவில் தரையிறங்கும். நான் உங்களோடுதான் இருக்கிறேன். புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்.
(நினைவுகள் சுழலும்)
0 comments:
Post a Comment