Sunday, November 15, 2009

துணிச்சலின் சிகரமாய் மேஜர் பசீலன்.


நல்லையா அமிர்தலிங்கம்
முல்லைத்தீவு
வீரமரணம் 11-8-1987


சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வாக்குகளை அள்ளி வழங்கினார்கள்.

சிங்களப் பேரினவாத அரசு மாநில சுயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள்.

ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படுவதையும் சொந்தக்கிராமங்களிலிருந்து கட்டிய துணியுடன் அடித்து விரட்டப்பட்டு, உணவின்றி, தங்க இடமின்றி அநாதைகளாக்கப்டுவதையும் காரணமின்றி ࠯க்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தமிழ் இளைய சமுதாயம்.

சிறீலங்கா அரசு மக்களை இம்சிப்பதையும் வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் கைதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்களைச் சிங்களக் கைதிகளும், சிங்கள இராணுவமும் இணைந்து, திட்டமிட்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்ததையும் கண்டு ஈழ விடுதலையே இறுதித் தீர்வு என்ற உறுதியான முடிவிற்கு வந்தான் முள்ளியவளையைச் சேர்ந்த ஓர் இளைஞன்.

உறுதியான கொள்கையையும், தளம்பாத தலைமையையும், தமிழீழ விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் கெரில்லாப் படையையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே இது சாத்தியம் என்பதை உணர்ந்து அவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட அமிர்தலிங்கம் என்ற இளைஞன்தான் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பசிலன்.



தமிழர்க்கெதிரான இன அழிப்பில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் சிறீலங்கா கூலிப்படை மீது பசிலன் மேற்கொண்ட தாக்குதல்கள் எண்ணிலடங்காதவை. வன்னியின் சண்டைக்காரர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை. எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை.

இராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்தலையில் குட்டிவிடுவதில் வல்லவன். வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில் புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள் நீந்தி விளையாடினார்கள்.

மேஜர் பசீலன் அண்ணனின் அணியில் தளபதி பால்ராஜ் ஒரு போராளியாக இருந்த அக்காலம். முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித்தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது.

இடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்கு படுத்தப்பட்டது. மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது.

எதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார்.

போராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர் திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார்.

எதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும் அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில் போராளிகள் நிலையெடுக்க வேண்டும். ஒரு திகிலூட்டும் திட்டத்தை மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார்.

கிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை.
ஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார்.

கிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள் கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி நிலையெடுப்பர் அந்தப் பகுதியை தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது.

எதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது. கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம்.

துணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு.அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும் அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும் இராணுவ ஆற்றலும் வேண்டும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார் அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி பால்ராஜ்.

தாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை தளபதி பால்ராஜ் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன்.



இன்னொரு முறை , முந்திரிகைக்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொண்டு பன்னிரு கூலிப்படையினரைக் கொன்றதுடன் தமிழினத்தை அழிக்க பயன்படும் 12 துப்பாக்கிகளை எடுத்ததன் மூலம் மக்களுக்கு ஓர் நம்பிக்கையை தோற்றுவித்தான் வவுனியா மாவட்ட தாக்குதற் பிரிவின் தலைவன் மேஜர் பசிலன்.

கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலின் போது காயமடைந்த பசிலன் கிளிநொச்சியைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இனப் படுகொலைகளை நிறுத்த விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் போரிலும் முக்கிய பங்கு வகித்தான்.

ஒரு கெரில்லா போராளியின் திறமைகளைத் தன்னகத்தே முழுமையாகக் கொண்டிருந்த பசிலன் ஒரு சிறந்த விகடகவியும், நடிகனுமாவான். தமிழீழத்தின் மரபு நாடகங்கள் இவன் நடிப்பினால் மெருகூட்டப்பட்டது என்பது மிகையாகாது. தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால் களைப்புற்ற சக தோழர்களைச் சிரிக்க வைத்துவிடுபவன் இவன். மக்களுக்குப் போராட்ட உத்வேகத்தைத் தூண்டிவிடும் நாடகங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையாக நடிக்கும் பசிலன் தன்னுடைய கலகலப்பான சுபாவத்தால் மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஓர் போராளியாவான்.

தமிழீழமெங்கும் சிறீலங்கா அரசானது தமிழீழ மக்கள் மீது ஓர் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தைக் கட்டவிழ்த்து இன வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கையில், அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஆயுதப் போர் ஓர் புதிய சகாப்பத்தைப் படைத்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில், தமது சொந்த நலன்களுக்காக, அந்நிய நாட்டிலிருந்து மனித விரோதிகளை அமைதிப்படை என்ற பெயரில் அழைத்து வந்து மக்களைப் பலி கொள்ளும் தேச விரோதிகளின் செயல் கண்டு குமுறினான் பசிலன்.


கோப்பாய்யில் இந்திய அழிவுப் படையை எதிர்த்து தரைப் படை டாங்கிகள் ஐந்தை நிர்மூலமாக்கி, விடுதலைப் புலி கெரில்லாக்கள் பற்றி இந்திய இராணுவத்திற்கு ஓர் பீதியைத் தோற்றுவித்த பசிலன் முல்லைத்தீவில் நேரடி மோதலின் போது இந்தியப்படையின் எறிகணைத் தாக்குதலால் 08.11.87 அன்று வீரமரணத்தைத் தழுவிக்கொண்டான்.

தமிழீழ மண்ணிலிருந்து மறைந்தாலும் ஈழ விடுதலை வரலாற்றில் ஒரு நிலையான இடத்தில்..... மேஜர் பசிலன் அண்ணன் .

நன்றி : எரிமலை

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP