Monday, November 23, 2009

காவிய நாயகன் லெப் கேணல் போர்க்..

கரும்புலி லெப் கேணல் போர்க்
மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம்.
ஆறுமுகத்தான் புதுக்குளம், ஓமந்தை, வவுனியா..
தாய் மடியில் 11-11-1959
தமிழீழ மண்ணில் 23-11-1990

வன்னி மண்ணில் சேமமடு என்னும் கிராமத்தைச் சேர்ந்த போர்க் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொறுப்பாளராகவும் அதன் பின்பு மாங்குளம் இராணுவ முகாம் முற்றுகைக்குப் பொறுப்பாளராகவும் பின்பு வன்னி நடமாடும் அணியின் பொறுப்பாளராகவும் இருந்தவர். இந்தியப் படைகளுக்கு எதிராகவும் சிறிலங்காப் படைகளுக்கு எதிராகவும் பல தாக்குதல்களைத் திட்டமிட்டு தலைமையேற்று வலி நடாத்தியவர். தன்னுயிரைத் தந்து மாங்குளம் படை முகாம் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்.

மாங்குளம் முகாம் மீதான இரண்டாவது தாக்குதல். தளபதிகள் போர்த் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் போர்க்கும் ஒருவன். ஒரு தாக்குதற் பிரிவுக்குத் தலைமையேற்று உள்ளே செல்லும்படி போர்க் கேக்கப்பட்டான்.

ஆனால் அதற்கு அவன் மறுத்து விட்டான் அக்கூட்டத்தில் "நான் வெடிமருந்து வண்டியை ஓட்டிச் செல்கிறேன்", என்ற அவனது வார்த்தைகள் உறுதியாக வெளிவந்தது. மற்றவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். ஆனால் அவனது கண்களில் தெரிந்த ஆழமான உறுதி அவர்களை மௌனமாக்கியது.


இறுதி மூன்று நாட்கள்.

போர்க் தன்னந்தனியே எந்தவிதமான பொறுப்புகளுமில்லாமல் சுற்றித் திரிந்தான். தான் பிறந்த வீடு தவழ்ந்த மண் பழகிய மக்கள் மரங்கள் குளம் எல்லாவற்றையுமே பார்த்தான். சேமமடு தான் அவனது கிராமம் சிங்கள எல்லை அருகில் தான். நாங்கள் ஆயுதம் தூக்கியிராவிட்டால் இப்ப இங்க சிங்களவன் தான் திரிவான் என்று அவன் அடிக்கடி சொல்லுவதுண்டு.

போர்க் ஏற்கனவே இனிமையானவன் இறுதி மூன்று நாட்களும் சக போராளிகள் மீது அன்பையும் பாசத்தையும் கொட்டினான்.அவன் என்ன செய்யப் போகிறான் என்பது எவருக்குமே தெரியாது.அவர்கள் வழமை மாதிரி போர்க்கிடம் பழகினார்கள். ஆனால் அவன் தம் மீது ஒரு பெரும் சோகச் சுமையைச் சுமத்தப் போகிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது.

வன்னி மண்ணில் போராட்ட வாழ்வின் போது தன்னை அரவணைத்து வளர்த்த கிராமத்து மக்களிடம் போர்க் சென்றான். அவன் நேசித்த மண் - மக்கள் - காடுகள் - வயல்கள் எல்லாமே அவனக்கு விடை தந்தன...
23-11-1990
திட்டமிட்டபடி மாங்குளம் முகாமைச் சுற்றியிருந்த காவலரண்கள் வீழச்சியடைந்திருந்தன. அதுவரை நேரமும் தனது போராளிகளுடன் இருந்த போர்க் புறப்படுவதற்கு தயாரானான். இறுதி நேர நிமிடங்கள். இருள், தன் போராளிகளின் முகங்களைத் தேடியபடியே போர்க் சொன்னான்.

"பெடியள் கவனம் பசிலன் செல் வெடிக்கேக்கையே சத்தம் தாங்க முடியாமலிருக்கிறது. எதுக்கும் பொடியளைத் தள்ளியே நிற்கச் சொல்லுங்கோ. "தன் தோழர்களின் மீது அவன் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகள் இவை.

போராளிகள் விலகிச் சென்றார்கள்.

"எல்லாம் சரியாக இருக்கிறதா ?" வோக்கியில் அவனது இறுதி வார்த்தை தன் தோழர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டான். அந்த வெடி மருந்து நிரப்பப்பட்ட பார வண்டி எதிரியின் வலயத்துக்குள் உறுமிக் கொண்டு நுழைந்தது. அந்த இறுதிக் கணங்களில் போர்க்கின் முகத்தில் என்ன எழுதி இருந்தது என்பது எவருக்குமே தெரியாது... ஆனால் எல்லாப் போராளிகளைப் போலவே அவனுக்கும் தெரியும் இந்த மண் நிச்சயம் மீட்சியடையும்.

அது ஒரு உன்னதமான செயல். அந்தக் கணத்தில் அவன் எடுத்த முடிவு. குறித்த இலக்கையும் தாண்டி அந்த வண்டி மேலும் பல எதிரிகளைத் தேடிச் சென்றது. முகாமின் மையப் பகுதி-

மிகப்பெரிய சத்தம் அந்தப் பிராந்தியமே அதிர்ந்து மௌனமாகியது. இருள் களைந்து விடியும் நேரம் துப்பாக்கிகள் ஓய்ந்து விட்டன. எமது போராளிகள் மாங்குளம் முகாமிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்கள் தேடிக் கொண்டிருந்தன.போர்க் அண்ணை எங்கே? போர்க் எங்கே? போர்க்கின் வெடிமருந்து வண்டி வெடித்த இடத்தில் ஆழமான குழி ஒன்று இருந்தது. ஆக்கிரமிப்பாளனின் முகாமின் கட்டிடங்கள் இடிந்து நொறுங்கிக் கிடந்தது. அந்தக் குழிக்குச் சற்றுத் தள்ளி போர்க்கின் உயிரற்ற உடல் .....

போர்க் வீரமரணத்தைச் சந்தித்துக் கொண்டான்- அவன் வரலாற்றில் ஒருவனாக வாழவில்லை.ஒரு புதிய வரலாற்றைப் படைத்தவன். அவனது வாழ்வு அர்த்தமுள்ளது உன்னதமானது தனது இனத்தின் விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்த உயர்ந்த வீரன் அவன். தனது உயிருக்கும் மேலாக தனது நாட்டின் சுதந்திரத்தை நேசித்த மாவீரன் அவன். நாளையும் காற்றாக எங்கள் உயிர் மூச்சாக வாழ்வான் அவன்.

நன்றி :வசந்தன்.
விடுதலைப் புலிகள் ஏடு - மார்கழி 1990

இந்நாளில் மாங்குளம் முகாம் அழிப்பின் பத்தொன்பதாம் ஆண்டின் நினைவில் அன்று வீரச்சாவடைந்த 65 போராளிகளையும் நெஞ்சில் நிறுத்துவோம்.. அகவணக்கம் செலுத்துவோம்..லெப் கேணல் போர்க் மரணிக்கவில்லை அவன் பாதச்சுவடு பட்ட தமிழீழதேசமெங்கும் அவன் வாழுகின்றான். போர்க்கண்ணா உங்கள் பாதையினைப் பின் தொடர்ந்து எழுவோம்... எழுவோம் தமிழீழம் கிடைக்கும் வரை......சத்திய தேவனின் சமதர்ம யுத்தத்தில் தோல்விகள் என்றுமில்லை....

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP