Saturday, November 28, 2009

ஒவ்வொரு தமிழனின் மனதுக்குள்ளும்...



வ்விதழ் உங்கள் கரங்களைச் சேரும் நாள் தமிழீழ தேசியத் தலைவர் என தமிழுலகம் கொண்டாடும் திருவேங்கடம் வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள். இந்நாளில் தமிழீழச் சிந்தனையாளர்களில் முக்கியமானவரும், அரசியல் எழுத்தாளருமான தி.வழுதி அவர்கள் கடந்த ஜூன் 10-ந் தேதி புதினம் இணையதளத்திற்கு எழுதிய மறக்க முடியாததோர் கட்டுரையின் சில பகுதிகளை இங்கு மறுபதிவு செய்கிறேன்.

""தமிழீழ தேசியத் தலைவரும், தமிழீழத்தின் தலைமைப் போர்த் தள கர்த்தருமான மேன்மைமிகு திரு வேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்- தமிழர் சரித்திரத்தின் மகுடமாக எங்கள் மனங் களிலும் அறிவிலும் வாழ்கிறார்.

விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றி களின் பெருமை பாலா அண்ணை யைச் சாரும். விடு தலைப் போராட்டம் பெற்ற ராணுவ வெற்றிகளின் பெருமை பால்ராஜ், தீபன், சூசை, பொட்டு, பானு, ராஜு, கே.பி. என இன்னும் சிலரைச் சாரும். விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்த சனத்திலிருந்து வந்த எம் போர்வீரர்களையும் சாரும். ஆனால் சதிகளும், துரோகங்களும், விலைபோதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடுமுரடான பாதை வழியே மனம் தளராமல் விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்''.

மே 16, 17 நாட்களில் முள்ளிவாய்க்கால் காட்சிகள் காண பிரபாகரனின் மனதில் என்ன உணர்வுகள் எழுந்திருக்கக்கூடும் என்பதையும் ஆத்மார்த்தமான ஓர் அக உரையாடலாக வழுதி அக்கட்டுரையில் படம்பிடிக்க முயன்றிருந்தார். ""தமிழர் போராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?... அல்லது நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை. வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்'' என்று பாலா அண்ணை சொல்லும் ஆலோசனைகளை கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?...

அல்லது உறுதியான ஓர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால்- தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால்- இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொறுங்கும்போது தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொறுங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?...


அல்லது- கடந்த காலங்களில் செய்யப்பட்ட சிலவற்றை செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சிலவற்றை செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?... அல்லது- தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி- எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?... எதுவும் நமக்குத் தெரியாது.

ஆனால், நெருக்கடியான நேரத்திலும் கூட அவர் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார் என்பதை மட்டும் நம்மால் உணர முடிகிறது.

முப்பது வருட காலமாகப் போராடி- சிறிது சிறிதாக அவர் பார்த்துப் பார்த்து கட்டி வளர்ந்த தமிழ் சாம்ராச்சியம்- அவரது கண்களுக்கு முன்னாலேயே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது. ஆனால் இந்த முப்பது வருட காலப் போராட்டத்தில் பிரபாகரன் சாதித்தது உண்மையில் அவர் இந்த மண்ணுக்கு மேலே கட்டி வளர்த்த அந்தத் தமிழ் சாம்ராச்சியம் அல்ல. ஏனெனில் மண்ணுக்கு மேலே கட்டப்படும் சாம் ராச்சியங்கள் எழு வதும்- வீழ்வதுமே வரலாறு.

பிரபாகரன் படைத்த உண்மையான சாதனை என்பது- ஒவ்வொரு தமிழனின் மனங்களுக்கு உள்ளும் அவர் கட்டியெழுப்பிய தமிழ் சாம்ராச்சியம்தான். அது நிமிர்ந்து எழுந்து கம்பீரமாக நிற்கின்றது. அது வீழ்ச்சி அற்றது.

"தமிழ் ஈழம்' என்ற விதையை எம் ஒவ்வொருவரது ஆத்மாவிற்குள்ளும் அறி விற்குள்ளும் அவர் ஆழப் புதைத்து விட்டிருக்கிறார். விடுதலை பெற்ற மனிதர் களாக- மதிப்புடனும் பெருமையுடனும்- இந்த உலகில் நாம் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற வெறியையும், வாழமுடியும் என்ற நம்பிக்கையையும் எமக்குள் அவர் ஊட்டி யிருக்கிறார்.

தமிழ்த் தேசியத்தை திடப்படுத்தி, தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தி, தமிழர் தன்னாட்சி உரிமைக் கோரிக்கையைப் பலப்படுத்தி- ஈழத் தமிழ் இனத்தின் சின்ன மாக, எங்களின் அரசியல் அடையாளமாக, எங்கள் தேசியத்தின் குறியீடாக, எங்கள் கோபத்தினதும், சோகத்தினதும், மகிழ்ச்சி யினதும் வெளிப்பாடாக நித்தியத்திற்கும் நின்று வாழும் ஒரு கொடியை தமிழுக்கு அவர் தந்திருக்கிறார்.

இன்று உலகமும், சிங்களமும் அச்சப்படும் விடயம் பிரபாகரன் எங்கள் மனங்களுக்குள் கட்டி எழுப்பியிருக்கும் அந்த வீழ்த்த முடியாத சாம்ராச்சியம், அவர் எமக்கு ஊட்டிய உறுதியும், துணிவும் வீரமும்தான்.

பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் வீரம்- துணிவு- உறுதி என்பவை பற்றியெல்லாம் தமிழர்கள் புத்தகங்களில் படித்து திரைப் படங்களில் பார்த்ததோடு சரி. ஆயுதப் போராட்டமே ஒரே வழி எனத் துணிந்து வந்தவர்கள் கூட இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு விட்டுக்கொடுத்து தமிழர்களின் உரிமைகளைக் கைவிடும் நிலைக்குள் தள்ளப்பட்டனர். ஆனால் சரியோ தவறோ பிரபாகரன் மட்டுமே தொடர்ந்து நடந்தார். அந்த மனிதர் மட்டுமே எங்கள் ஆத்ம தாகத்தின் முகமாக இந்த உலகிலே திகழ்ந்தார். அந்த மனிதர் மட்டுமே- எங்களாலும் முடியும் என்று எங்களையே நம்ப வைத்தார். தம்மைத் தாமே ஆளும் வகையான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாடு இந்த உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆகுவதற்கு அந்த மனிதர் மட்டுமே காரணம். சரிகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் அந்த மனிதர் ஓர் புனிதமான கனவோடு வாழ்ந்தார். நாம் எல்லோருமே சுமந்த அந்தக் கனவை நிறைவு செய்வதற்குச் சிறந்த வழி என தனக்குப்பட்ட ஒரு வழியில் எந்தச் சலசலப்பும் இன்றி அவர் நடந்தார்.

அந்தப் பயணத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்பந்தித்துவிட்டது. தவறுகளாகப் பார்க்கப்படும் இன்னும் சில நிகழ்வுகள் உண்மையிலேயே தவறுகள்தானா என்பதை அந்த வரலாறே நாளை தீர்மானிக்கட்டும். தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை என்ற அதியுயர் இலக்கு நோக்கிய ஒரு மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நகர்த்திச் செல்லும்போது- அந்த இலக்கு மட்டுமே அவரது கண்களுக்குத் தெரிந்ததால், ஏனைய சில விடயங்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார் என்பது உண்மைதான்.

ஆனால் அவரைப் பொறுத்தவரையில் - தமிழ் மக்களை தலைநிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பதுதான் அவர் வரித்துக் கொண்ட லட்சியம். அந்த லட்சியத்தில் களங்கமற்றவராகவே அவர் எப்போதும் இருந்தார்''.

இவ்வாண்டில் நான் படித்த மறக்க முடியாத மிகச் சிறந்த கட்டுரை தி.வழுதி அவர்கள் புதினம் இணையதளத்திற்கு எழுதிய மேலே பதிவு செய்யப்பட்ட ஆக்கமே. வழுதி அவர்கள் தன் ஆக்கத்தை இவ்வாறு நிறைவு செய்திருந்தார்: ""பிறந் திருக்கும் புதிய சூழலில், புதிய சிந்தனையுடன், புதிய வழிமுறைகளில் இந்து, இசுலாமிய, கிறித்தவர் என்று பிரிந்திருக்காம லும், அமைப்புகள்- இயக்கங்கள்- கட்சிகள் என்று சிதறியிருக்காமலும் திறந்த மனதுடன்- ""தமிழர்கள்'' என்ற ஒரே உணர் விலும், அடையாளத் திலும் அணிதிரள் வோம்''.

வழுதி அவர்கள் எழுதிய அதே உணர்வோடுதான் உடைந்து நொறுங்கிச் சிதறுண்டு கிடக்கின்ற இக்காலத்தின் முன் நின்று "ஈழம் மலரும், ஈழம் சாத்தியமே' என்று கடந்த இதழில் நாம் வாதிடத் தொடங்கினோம். அதற்கு நடக்க வேண்டியவை என்ன என்பதில் எஞ்சியிருக்கும் மக்களைக் காப்பது, தமிழர் தாயக நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுப்பதன் மூலம் தமிழீழ தாயகம் என்ற நில அலகினைப் பாதுகாப்பது என்ற இரண்டு காரியங்களையும் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம்.

மூன்றாவதாக தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது அனைத்துலக அளவில் கவிந்துவிட்ட ""பயங்கரவாதம்'' என்ற நச்சுப் போர்வையை பக்குவமாய் நீக்கி ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியற் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை உலகம் ஏற்றுக் கொள்ள வைப்பது. இது நடந்துவிட்டதென்றால் தமிழீழ விடுதலையானது சாத்தியப்பாட்டு வட்டத்திற்குள் வந்துவிட்டதென நாம் கொள்ளலாம்.

நடந்துவிட்ட பெரும் பின்னடைவு களுக்கு உலகம் நம் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அரசியல் தார்மீகங் களைப் புறந்தள்ளி "பயங்கரவாதம்' என கொள்கைரீதியாக ஏற்றமையும், அதனையொட்டி எடுத்த நடவடிக்கை களும் முக்கிய காரணங்கள். அதிலிருந்து போராட்ட நியாயங்களை மீட்டெடுத்து உலகம் தமிழரின் அரசியற் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கச் செய்யும் பெரும் பொறுப்பு புலம்பெயர் தமிழரிடமே சுமத்தப்படுகிறது. அது அவர்களால் முடியும். ஆனால் சவாலானதும் கூட.

(நினைவுகள் சுழலும்)

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP