Saturday, December 26, 2009

''அய்யோ... தங்கச்சி'' கதறும் ஈழ அண்ணன் !

சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு பிரபாகரனின் மகள் துவாரகா படுகொலை செய்யப்பட்டார் என்று சமீபத்தில் சில புகைப்படங்கள், பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டன. தமிழகத் தலைவர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த புகைப்படங்கள்.

ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது துவாரகா இல்லை என்று கொழும்பிலிருந்து நமக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகளுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள அந்த இளம்பெண் யார் என்பது குறித்து பல்வேறு ஸோர்ஸ்கள் மூலம் விசாரித்தோம்.

அப்போது, படுகொலை செய்யப்பட்டுள்ள அந்த இளம்பெண்ணின் பெயர் இசைப்பிரியா என்றும் விடுதலைப்புலிகளின் தமிழீழ தேசிய தொலைக் காட்சியில் செய்திப் பிரிவில் பணியாற்றியவர் என்றும் நமக்கு தகவல் கிடைத்தன. மேலும் இசைப்பிரியாவின் சகோதரர் கணேசன் தமிழகத்தில் இருக்கிற தகவலும் கிடைத்தது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அவரை நாம் சந்தித்தோம்.

நம்மிடம் பேசிய கணேசன், ""பத்திரிகைகளில் வெளியான படத்தில் இருப்பது தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் கிடையாது. அது, என் தங்கை இசைப் பிரியாவின் உடல். அதாவது என் சித்தப்பாவின் இரண்டாவது மகள்தான் இசைப்பிரியா. போரின் இறுதிநாளில் சிங்கள ராணுவத்தினரிடம் சரணடைந்தவளை மிகக் கொடூரமாக கொன்றிருக்கிறார்களே'' என்று கூறி கதறினார். தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை.

கொஞ்சநேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு விட்டுப் பேசிய அவர், ""என் சித்தப்பா தர்மதுரை, சின்னம்மா பார்வதி. இவர்களுக்கு 4 மகள்கள். மூத்த மகள் கனடாவில் இருக்கிறார். மற்ற 3 மகள்களுடன் யாழ்ப்பாணத்தில் இருந்தது சித்தப்பா குடும்பம். இதில் இரண்டாவது பெண்தான் இசைப்பிரியா. இவளது ஒரிஜினல் பெயர் சங்கீதா. இயக்கத்தில் சேர்ந்த பிறகுதான் இசைப்பிரியா என்று மாற்றப்பட்டாள்.

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார் என் சித்தப்பா. அந்த சூழலில், யாழ்ப் பாணத்தைப் பிடிக்க ராணுவம் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் பிடித்துக் கொண்டதையடுத்து பல குடும்பங்கள் கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தன.

அப்படி இடம்பெயர்ந்ததில் 3 பெண்களுடன் என் சின்னம்மா கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தார். 1995-லிருந்து 2008 வரை எந்த பிரச்சினையுமே இல்லை. பள்ளி களில் படிக்கிற காலகட்டத்திலேயே என் தங்கைக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தது. நிறைய எழுதினாள். நாடகங்களில் நடித்தாள். அதனால், அவளை எல்லோருக்கும் தெரியும்.

தற்போது அவளுக்கு 28 வயதாகிறது. மூன்று வருடங்களுக்கு முன்புதான்... புலிகளின் அரசியல் பிரிவில் இணைந்தாள். புலிகளின் ஊடகமான நிதர் சனத்தில் செய்திப் பிரிவில் பணியில் அமர்த்தப்பட்டாள் என் தங்கை. மேலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்தாள். அப்போது "வேலி' உட்பட சில குறும்படங்களிலும் நடித்தாள் இசைப்பிரியா. இதுதான் அவளைப் பற்றிய விபரம்'' என்று கூறியவர் மேலும், ""2008-லிருந்தே சிங்கள ராணுவம் யுத்தத்தை உக்கிரமாக நடத்தியது. தமிழீழத்தின் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமித்துக் கொண்டே வந்த ராணுவம், கிளிநொச்சியை பிடித்துக் கொண்டபோது, கிளிநொச்சியில் இருந்த அத்தனை மக்களும் முல்லைத்தீவுக்கு இடம் பெயர்ந்தனர். போரும் உக்கிரமானது. விமானப்படையும் ராணுவமும் தொடர்ச்சியான எறிகணைகளையும் பீரங்கி தாக்குதல்களையும் நடத்தியபோது... காடுகள், மலைகள் என ஒவ்வொரு பகுதியாக மாறி மாறி ஓடிக் கொண்டேயிருந்தனர் மக்கள்.

அந்த சூழலில், இசைப்பிரியாவும் அவளது அடுத்த தங்கை ஷோபனாவும் ஒரு இடத்திலும் என் சின்னம்மாவும் கடைசி பெண்ணும் ஒரு இடத்திலும் என பிரிந்துவிட்டனர். போர் தீவிரமானது. நிலப்பரப்புகள் சுருங்கியது. ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டார்கள். யார் யார் உயிருடன் இருக்கிறார்கள், இல்லை என்று எதுவும் தெரியாது.



யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. சிங்கள அரசு உருவாக்கிய "பாதுகாப்பு வளைய' பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர்ந்து சரணடைந்து கொண்டிருந்தனர். இறுதி நாளின் போது, ஆயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் சரணடைந்தனர். இவர்களில் என் தங்கைகள் இசைப்பிரியாவும் ஷோபனாவும் இருந்தனர். போர், முழுமையாக முடிவுக்கு வந்ததை அடுத்து... என் தங்கைகள் இருவரும் தடுப்பு முகாமில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து நிம்மதியடைந்தோம்.

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, ஒருமுறை இசைப் பிரியாவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தடுப்பு முகாமில் நடக்கும் அவலங்களைச் சொன்னாள். ராணுவத் தினரின் கொடூர நட வடிக்கைகளையும் விவரித்தாள். அதற்கு பிறகு தொடர்பு இல்லை. ஒருநாள் "இளைஞர்களையும் இளம்பெண்களையும் போராளிகளையும் தனித்தனியாக பிரித்து வேனில் ஏற்றி தடுப்பு முகாம்களிலிருந்து வெளியே கடத்திட்டுப் போகிறது ராணுவம். எங்கே கொண்டு போகிறதென்று விளங்கலை. இதில் உன் தங்கைகளும் உண்டு' என்று ஒரு தகவல் கிடைக்க, பதறிப் போனோம். துடிதுடித்தோம். தங்கைகள் எங்கே இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் களுக்கு என்னாச்சோ என்கிற கவலையிலேயே நாட்களை கடத்திக் கொண்டிருந்தோம். ஐந்து மாதமாக எந்த தகவலுமே அவர்களைப் பற்றி கிடைக்கவில்லை. இந்த சூழலில்தான், "பிரபாகரனின் மகள் துவாரகா படுகொலை செய்யப்பட்டார்' என்று வெளியான புகைப்படத்தில் இருந்த இசைப் பிரியாவின் உடலைப் பார்த்து துடிதுடித்துப் போனோம். என் தங்கை மாதிரி, இன்னும் எத்தனை இளம்பெண் களை படுகொலை செய்திருக்கிறார் களோ? இசைப்பிரியாவோடு இருந்த மற்றொரு தங்கை ஷோபனாவுக்கு (26 வயது) என்ன நேர்ந்துள்ளது என்றும் புரியவில்லை. நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது!'' என்று கதறினார்.

சிங்கள ராணுவத்தினரின் கொடூரங்களும் வக்கிரங்களும் இசைப்பிரியாவின் படங்கள் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசியபோது, ""தமி ழினத்தின் அடுத்த தலை முறையே இருக்கக்கூடாது என்பதில் சிங்கள அரச பயங்கரவாதம் உறுதியாக இருக்கிறது. அதனால்தான், தடுப்பு முகாம்களில் இருந்த இளம்பெண்களையும், இளைஞர்களையும் கடத்திச் சென்றது ராணுவம். அந்த வகையில், 20 ஆயிரம் பேர் கடத்தப்பட்டனர் என்று மனித உரிமை அமைப்புகள் சொல் கின்றன. இப்படி கடத்தப் பட்டவர்கள் இலங்கை முழுவதும் உள்ள பல்வேறு ராணுவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, தமிழ் இளம்பெண்கள் ராணுவத்தின் கூட்டு கற்பழிப்புக்கு உட்படுத்தப்பட்டு பல சித்ரவதைகளுக்கு பின்பு கொல்லப்பட்டனர். அதேபோல, இளைஞர்களையும் சித்ரவதை செய்து நிர்வாணப்படுத்தி கொடூரமாக சுட்டுக்கொன்றனர். தமிழ் இளைஞர்கள் அப்படி கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள்தான் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது, இசைப்பிரியாவிற்கு நேர்ந்துள்ள இந்த கொடூரம்!'' என்கின்றனர்.

மேலும் அவர்களிடம் பேசியபோது, ""பிரபாகரனின் மகள் துவாரகாவைப் போல ஓரளவுக்கு முகம் ஒற்றுமையுள்ள இசைப்பிரியாவின் படத்தை ரிலீஸ் செய்து, தமிழர்களிடம் ஒரு உளவியல் சிக்கலை ஏற்படுத்த ராணுவம் முயற்சிப்பதாகத்தான் தெரிகிறது. ஏனெனில் ராணுவத் தரப்பிலிருந்துதான் இந்தப்படம்... பல இணைய தளங்களுக்கும் போயிருக்கிறது. ரத்தவெறி பிடித்த சிங்கள ராணு வத்தின் வக்கிரங்களைத்தான் இது காட்டுகிறது. இன்னும் எத்தனை எத்தனை தமிழ் பெண்களின் சடலங்களை காட்டப்போகிறதோ ராணுவம்?'' என்று ஆதங்கப்பட்டனர்.

நன்றி நக்கீரன்

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP