Saturday, March 6, 2010

மக்கள் ஆணை பெற்ற பிரதிநிதிகளே நாடு கடந்த அரசிற்கான யாப்பை எழுதுவார்கள் : வி.உருத்திரகுமாரன்

மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளே நாடு கடந்த அரசிற்கான யாப்பினை எழுதுவார்கள் என்றும், அவர்களுக்கே இதனை எழுதுவதற்கான மக்கள் ஆணை இருக்குமென்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசின் சர்வதேச இணைப்பாளர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எழுதப்பட்ட யாப்பை மேலிருந்து திணிப்பதை விட இதுவே பல நாடுகளும் ஏற்றுக் கொண்ட வழமை எனவும், யாப்பை எழுதுவதற்கு சட்ட வல்லுனர்கள் தமது சட்ட நிபுணத்துவத்தை வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசின் கனடாச் செயற்குழுவினர் தமிழ் ஸ்ரார் வானொலியூடாக நடத்திய நிகழ்ச்சிக்கு நேற்று இரவு (05.03.2010) வழங்கிய பேட்டியிலேயே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசின் முதலாவது செயலமர்வினை எதிர்வரும் மே மாதம் 17 மற்றும் 19ம் திகதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், தமிழ் மக்களின் உரிமைப் போரினை நசுக்கி விட்டதாக சென்ற ஆண்டு மே மாதம் 17 மற்றும் 19ம் திகதிகளில் கொக்கரித்த சிங்களப் பேரினவாதத்திற்கு தமிழரின் உரிமைப் போர் முடிவடையவில்லை என்பதை உணர்த்தும் குறியீடாகவே இந்தத் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

இதுவரை 5 நாடுகளுக்கான செயற்குழுக்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதி நாடுகளுக்கான செயற்குழுக்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த நாடு கடந்த அரசு வெளிநாடுகளில் செயற்படுவதற்கு சட்டரீதியான எந்தச் சிக்கலும் இருக்காது எனத் தெரிவித்த உருத்திரகுமாரன், ஒன்று கூடும் உரிமை ஐநாவின் மனித உரிமை சாசனத்திலேயே உள்ளடக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் அரசியல் ரீதியான அங்கீகாரம் என்பது காலவோட்டத்தில் நாடு கடந்த அரசின் செயற்பாடுகள் மூலமும் தென்னாசியாவின் பூகோள இராஜதந்திர அரசியல் போக்கிலும் தங்கியிருப்பதாகவும் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசு குறித்து சர்வதேச இராஜதந்திரிகளும் தமது கருத்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதுடன், இது குறித்து கூடிய அக்கறை எடுப்பதையும் நல்ல அறிகுறியாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட உருத்திரகுமாரன், சிங்கள தேசமும் இந்த நாடு கடந்த அரசு குறித்து அச்சமடைந்துள்ளதை அவர்களிடம் இருந்து வரும் அறிக்கைகள் தெளிவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசின் வெற்றி என்பது தமிழர்களின் ஒத்துழைப்பான முயற்சியில் தங்கிருக்கிறது என்பதை வலியுறுத்திய அவர், சிறிய பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார்.

அத்துடன் நாடு கடந்த அரசானது ஒவ்வொரு நாடுகளிலும் இயங்கி வரும் அந்தந்த நாடுகளின் தாயகம் சார்ந்த அமைப்புக்களைப் பலவீனப்படுத்தாது எனவும், அனைவரும் ஓரணியில் பயணிக்க வேண்டும் என்றும் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP