Sunday, April 4, 2010

தமிழீழம் நமது வீரர்களின் கனவு....



அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார்.
அறத்தோடுத்தான் மறவர்களை உருவாக்கினார். எந்த நிலையிலும் ஒழுக்க நிலைக்கு எதிராக எமது வீரர்கள் நின்றது கிடையாது. எப்போதும் தமது வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கத்தை அவர்கள் தகர்த்தெறிந்ததில்லை. எண்ணம், செயல் அனைத்தும் முழுக்க முழுக்க தமது மக்களின் மீட்புக்காக மட்டும் செயல்பட்டது. தமது மண்ணின் விடுதலையே அவர்களின் உயிர் மூச்சாய் இருந்தது. காயங்களை துச்சமென மதித்து, களத்திலே காற்றாய் சுழன்று வீசினார்கள். புரவிகளின் கால்களைவிட, எமது புலிகளின் கால்கள் அதிவேகத்தில் பறந்தது.

உலக அரங்கிலே எமது தமிழ் தேசிய ராணுவத்தைப் போன்று வீரத்திலும், விவேகத்திலும் ஒன்று சேர நின்றவர்கள் ஒருவரும் கிடையாது. எந்த ஒரு ராணுவமானாலும், எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த நாட்டில் பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது இயல்பான நிகழ்வாக கருதப்பட்டது. அணு அளவு, அணுவின் துகள் அளவுகூட எமது வீரர்கள், எமது தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு எதிராக நடந்தது கிடையாது. சிங்கள மக்களே அவர்களின் மன சிம்மாசனங்களில் எமது வீரர்களை அமர வைத்து அழகு பார்க்கும் அளவிற்கு அவர்களின் அறவாழ்வு செழித்தோங்கி நின்றது. யாரோடும் சமரசம் இல்லாத ஒழுக்கத்திற்கு சொந்தக்காரர்கள் எமது தமிழ்தேசிய ராணுவ வீரர்கள். இதை எமது தேசிய தலைவர், தமது வாழ்க்கையின் மூலம், தமது நடவடிக்கையின் மூலம், தமது சொல்லின் மூலம், தமது செயலின் மூலம் நிகழ்த்திக் காட்டினார். அவரின் குனிதலும், நிமிர்தலும்கூட ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே இருந்த காரணத்தினால் விடுதலைப்புலிகள் என்கின்ற எமது தமிழ்தேசிய ராணுவம், ஒழுக்கத்திற்கு மாறாக எப்போதுமே நடந்தது கிடையாது என்பதற்கு சான்றுகள் தமிழீழ மண்ணிலே மட்டுமல்ல, சிங்கள தீவிலும் இரைந்து கிடக்கிறது.

இவர்களைப்போல் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் கொண்ட வீரர்களை யாம் கண்டதில்லை என சிங்கள இளைஞர்கள் சிரித்த முகத்தோடு எமது தமிழ் தேசிய ராணுவத்தை வர்ணனை செய்கிறார்கள். போர் குணம் மிக்கவர்களாய் இருந்தாலும்கூட, போராளிகளாய் இருந்தாலும்கூட, அச்சமற்று களமாடும் ஆற்றல் கொண்டவர்களாய் இருந்தாலும்கூட, அநீதிக்கு துணைப்போக எமது தமிழ் தேசிய ராணுவம் எப்போதும் முயன்றது கிடையாது. அது வீரத்திற்கு வித்திட்ட, உலகத்திற்கு தமிழ் தேசியத்திற்கு அடையாளம் தந்த எமது தேசிய தலைவரின் கொடை. இப்படி களமாடிய மாவீரர்களின் வரிசையிலே பால்ராஜ், தீபன் போன்ற வீரப்புலிகளின் உன்னதங்களை போற்றிப்புகழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் போர்குணம் நிறைந்த மண்ணிலே பூத்தவன்தான் மாவீரன் தீபன்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அறிவியல் மாணவனாக சிறந்துயர்ந்த தீபன், தமது இனமக்களின் விடுதலை என்பது இதைவிடச் சிறந்ததென கருதி, வரலாற்றின் பக்கங்களில் வாசித்தறியப்படும் பெயராக தமது பெயரை பதிவு செய்வதின் அவசியத்தை உணர்ந்ததால், இயக்கத்தில் இணைந்தார். தீபனை இயக்கத்திற்கு அறிமுகப்படுத்திய மாவீரன் மேஜர் கேடில்ஸ் 14.2.1987 அன்று கைத்தடியிலே இடம்பெற்ற வெடிவிபத்தில் கள பலியானார். அவர் கண்டெடுத்த அருமை முத்துதான் தீபன் எனும் இயக்கப் போராளி. பகிரத குமார் 1984ல் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டதின் மூலம் தீபன் என பெயர்மாறிப் போனார். 1987ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 29ஆம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை மீறல்களால் ஏற்பட்ட பல்வேறு போர், பெரும் எழுச்சி வடிவமாகி, இந்திய ராணுவத்திற்கெதிரான போராக உருமாறியபோது, இந்திய அமைதிப்படை என்ற தமிழின அழிப்பு படைக்கு எதிரான சமரில் தீபன் கிளிநொச்சியில் ராணுவ பொருப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் ராணுவ பொருப்பாளராகவும் எமது தேசிய தலைவரால் நியமிக்கப்பட்டார்கள். இந்திய அமைதிப்படை அமைதிக்குப் பதிலாக ஆக்கிரமிப்புப்போரை அதிகரித்த போது, தமிழீழத்தில் முல்லைத்தீவும், கிளிநொச்சியும்தான் பெரும் எதிர்ப்பை சந்தித்தன.

1988ஆம் ஆண்டில் வன்னிப்பகுதியின் ராணுவ பொருப்பாளராக ஆற்றல் வாய்ந்த, அசைக்க முடியாத, மண்ணின் மீது மதிப்பும், அன்பும் கொண்ட மாபெரும் போராளி பால்ராஜூக்கு துணையாக தீபன் நியமிக்கப்பட்டபோது, இவர்கள் வழி நடத்திய சமர்களின் ஆற்றல், வரலாற்றுப் பதிவுகளாய் மாறும் என இவர்களே நம்பி இருக்க மாட்டார்கள். பல்வேறு சிறப்பு வாய்ந்த வெற்றிகளை இந்த இணையர்கள் இயக்கத்தின் முடிகளில் சூட்டி மகிழ்ந்தார்கள். அதற்கான இழப்புகளை குறித்து அவர்கள் எந்த நிலையிலும் தம்மை குறைத்துக் கொண்டது கிடையாது. அவர்களின் எண்ணங்களெல்லாம் எமது தேசம் ஒன்றுதான். எமது தேசிய தலைவரின் கட்டளையே அவர்களின் இதயங்களில் ஒலிக்கும் இனிய வார்த்தை. எமது தேசிய தலைவரின் சொற்களே அவர்களை வழி நடத்தும் ஒளி விளக்கு.

இந்திய அமைதிப்படை 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழத்தை விட்டு தோற்று வெளியேறியபோது, ஜூன் மாதத்தில் மீண்டுமாய் சிங்கள-பௌத்த பேரினவாதிகளுக்கும், தமிழ் தேசியத்திற்கும் இடையேயான சமர் தொடங்கியது. மாங்குளம், கொக்காவில் முகாம் தகர்ப்பு ஆகியவை, பிரிகேடியர் பால்ராஜ் சமர்களத்தில் கண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளாகும். 1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆணையிரவு முகாம் மீதான எதிர்தாக்குதல் சமர், உலகில் உள்ள எந்த ராணுவமும் நிகழ்த்தாத மாபெரும் சிறப்புமிக்க, பெருமைமிக்க வீரத்தை, விவேகத்தை, ஆற்றலை, கண்ணியத்தை, துல்லியமான பகுப்பாய்வு திட்டத்தை வகுத்தளித்த தேசிய தலைவரின் எண்ணங்கள், ஆணையிரவு வெற்றியாக தமிழீழ வரலாற்றில் இடம்பிடித்தது. 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்ல்ஸ் அந்தோணி சிறப்புப்படையின் தளபதியாக மாவீரன் பால்ராஜ் நியமிக்கப்படுகிறார். அதே காலக்கட்டத்தில் தீபன், வன்னிப்பகுதிக்கு தளபதியாகிறார்.

இந்த இருவரின் இணைப்பு, இதயபூமி என்றழைக்கப்பட்ட மண்கின்டி மலைமீதான சமர், வரலாற்றில் இதுவரை எவராலும் அழிக்கமுடியாத பெரும் வெற்றியை தேடித் தந்தது. அதோடு தீபனின் வீரத்தை விளக்கிச்சொல்ல யாழ்தேவி மற்றும் தவளைப்பாய்ச்சல் சமர்கள் எதிராளிக்கூட வியந்து பாராட்டும் விளைச்சலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெற்றுத் தந்தது. 93 செப்டம்பரில் நடைபெற்ற இச்சமரில் பால்ராஜூக்கு ஏற்பட்ட காயத்தால், படை களத்திலிருந்து வெளியேறிய பால்ராஜின் வெற்றிடத்தை தீபன் நிரப்பி, சிங்கள பேரினவாத ராணுவத்தை விரட்டியடித்து, மாபெரும் முறியடிப்பு சமரை நிகழ்த்திக் காட்டினார். ராணுவ வரலாற்றில் மண் குவியலுக்கு இடையே நின்று சமர் புரியும் புதிய யுக்தியை நிகழ்த்தி, சிங்கள ராணுவத்தை விரட்டி அடித்து, அவர்களின் உளவியலை உடைத்துப் போட்டதோடு, ராணுவ கட்டுப்கோப்பை சிதறடித்தப் பெருமை தீபனுக்கே உண்டு. இதன் மூலம் இயக்கத்திற்கு புதிய புதிய ராணுவ கருவிகளை சிங்கள ராணுவம் வாரி வழங்கிவிட்டு ஓடி ஒளிந்துவிட்டது.

பூநகரி முகாமை தீபனும், தீபன் தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும், பானு தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும் இணைந்து நடத்திய பெரும் சமர், அவர்களை விரட்டி அடித்ததோடு, அப்போதும் அவர்கள் வாரி வழங்கிய கருவிகளும், குறிப்பாக விசைப்படகுகளும் இயக்கத்திற்கு கடற்புலிகள் உருவாக காரணமாக அமைந்தது. 1993ல் நடைபெற்ற இச்சமர், இதுவரை சமன் செய்யப்படாத அளவிற்கு பெரும் பெருமைக்குரியதாக இன்றுவரை கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1994ஆம் ஆண்டு இலங்கையின் அன்றைய அதிபர் சதிலீலாவதி சந்திரிகா பொறுப்பில் இருந்தபோது, நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்து போனதால், 95ல் மீண்டுமாய் ஒருசமர் நடைபெற்ற போது, தமது ஆற்றல் வாய்ந்த பங்களிப்பை அழுத்தமாய் பதிவு செய்த, அளப்பரியா ஆற்றல் வாய்ந்தவன் தீபன் எனும் போராளி.

யாழ்ப்பானம் இயக்கத்தின் கரங்களிலிருந்து நழுவியப்போது, வன்னியை தமது தளமாக அமைக்க, தலைமை முடிவெடுத்தது. அந்த காலக்கட்டத்தில் தலைமைக்கு பெரும் இடையூறாக இருந்தது, முல்லைத்தீவு ராணுவ முகாம். அதை அகற்றுவதின் மூலமே வன்னிப்பகுதியில் தலைமையகம் சிறப்பாக செயல்படும் என்பதை அறிந்த எமது தலைமை, தீபனை அழைத்து, முல்லைத்தீவு ராணுவ முகாமை அகற்றுவதற்கான திட்டத்தை அளிக்கச் சொன்னபோது, மிகச் சிறப்பான ஒரு திட்டத்தை தீபன் வகுத்தளித்து, எமது தேசிய தலைவரின் பெரும் பாராட்டுதலை பெற்றார். அந்த திட்டத்தின்படி தாக்குதல் நடக்கவும் தேசிய தலைவர் கட்டளையிட்டபோது, தீபனின் திறமை மிக சிறப்பாக வெளிப்பட்டது. ஜூலை 18, 1996 தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்த ஒரு பெரும் தாக்குதல் அது.

முல்லைத்தீவு முகாம் தகர்க்கப்பட்டு, சிங்கள ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, பெரும் கருவிக் குவியலை எமது இயக்கத்தின் கரங்களிலே ஒப்புவித்து, ஓடி ஒளிந்தது சிங்கள ராணுவம். இந்த படையெடுப்புதான் எமது தேசிய ராணுவத்தை கரந்தடி தாக்குதலிலிருந்து தடம்மாற்றி, மரபுவழி சமருக்கு இட்டுச் சென்றது என்று குறிப்பிடலாம். அதேபோன்றே 1997ல் சிங்கள ராணுவம் ஜெயசிக்குரூ என்கின்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, புளியங்குளத்தை காக்கும் பொறுப்பு புலிப்படையின் நம்பிக்கை நாயகன் தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும், நெடுங்கேனியையும் எளிதாக கைப்பற்றிய சிங்கள ராணுவம், புளியங்குளத்தை கைப்பற்றமுடியாமல் திணறியது. சிங்கள ராணுவத்தை திணறடித்த ஆற்றல் வாய்ந்த களவீரராக களமாடினார் தீபன்.

இன்றைய தினம் துரோகத்தின் வடிவமாய் திகழும் கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன், பலநேரங்களில் ஜெயசிக்குரூ ராணுவ நடவடிக்கை காலங்களில், தாம் வன்னிப்பகுதியின் கட்டளை தளபதியாக நின்று களமாடியதாக கதைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கருணாவின் களப்பணிக்கு கரம் இணைத்த ஆற்றல் வாய்ந்த அறவீரன் தீபன் என்பதை கருணா, திட்டமிட்டு மறைத்து வருகிறார். அதேபோன்றே 1998ல் சத்ஜெய எனும் ராணுவ நடவடிக்கையை சதிராடிய புலிப்படைக்கு தலைமை தாங்கியவர் தீபன் என்பதை நாம், மறுமுறை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் கைப்பற்றியபோது, தீபனின் பங்களிப்பு அதில் மிகுந்து காணப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

18 மாதங்கள் போராடி மீட்ட ஆணையிரவை வெறும் மூன்று வாரங்களில் கைப்பற்றி, தமிழ் வீரத்தை, விடுதலைப்புலிகளின் போர் நுணுக்கத்தை, உலகறிய செய்ய காரணமான தீபனை நாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம். இப்படி உலகே வியக்கும் வண்ணம் களப்பணியாற்றிய தீபன், பிரிகேடியர் பால்ராஜோடு இணைந்து ஆற்றிய அளவிட முடியாத தாக்குதலும், ஆணையிரவு களத்தில் தாம் காற்றைவிட மிக வேகமாக களமாடிய வீரமும் இன்றுவரை வியப்புக்குரியதாக நம்மை உற்றுப்பார்க்க வைக்கிறது. 24 ஏப்ரல் 2000 ஆணையிரவை மீண்டும் கைப்பற்றி விடலாம் என்ற கனவோடு சிங்கள பேரினவாத அரசு அக்கினிக்கீலா என்ற நடவடிக்கையை மேற்கொண்டபோது, அந்த நடவடிக்கையை சிதறடித்து, இலங்கை ராணுவத்தின் 55 மற்றும் 53 படை அணியை விரட்டி அடித்த பெரும் சமரின் கட்டளை தளபதியாக தீபன் களத்தில் இருந்தார் என்பதே நம்மை மேலும் உறுதியானர்வர்களாக மாற்ற வைக்கிறது.

இப்படி பல்வேறு களங்களை நாம் கண்டு கொண்டே இருக்கலாம். தீபன் அளவிட முடியாத வீரத்தின் விளைநிலம். தாயக மண்ணை நெஞ்சார நேசித்த மாவீரன். சமர் களங்களின் நாயகன் பால்ராஜூக்கு தோளோடு தோள் நின்ற உறவு. பால்ராஜ் என்னும் ஆற்றல் வாய்ந்த பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட தீபன்அம்மான், நம்முடைய மனங்களிலிருந்து நீங்காத பேராற்றல் பெற்றவன். இன்று ஆற்றல் வாய்ந்த இந்த வீரமறவர்கள் நம்மிடையே இல்லை. காற்றாகி தமிழீழத்திலே அவர்கள் தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயக மண் அடிமை விலங்கை உடைத்து, புதிய பரிமாணம் அடைந்து புத்தொளி வீசுவதை காண, அந்த வீரப்புலிகள் விழிகளைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதற்காக களமாடினார்களோ, அவர்களின் வாழ்வு எந்த திசையை நோக்கி பயணித்ததோ, அந்த திசையை நோக்கி நாம் வணங்குகிறோம். அவர்களுக்கு வீர வணக்கம் செய்கிறோம்.

அவர்களின் எண்ணங்களை ஈடேறச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அவர்களின் வீரத்தை குறித்து புகழ் பேசிக் கொண்டிருப்பது மட்டுமே நமது கடமை அல்ல. அவர்கள் எதை செய்ய முனைந்தார்களோ அதை அடைய நாம் ஆற்ற வேண்டிய பெரும்பணி தான் நம் முன்னே குவிந்து கிடக்கிறது. இதுதான் நமது காலத்தின் கடமை. இந்த வரலாற்றுப் பணியை நாம் உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குள் புதைந்திருக்கிறது. நாம் புத்தெழுச்சி மிக்க தமிழீழத்தைப் படைத்து, அதை அவர்களின் வீர வாழ்வுக்கு அர்ப்பணிக்கும்போதுதான், அந்த வீர மறவர்களின் எண்ணங்களும், ஏக்கங்களும் நிறைவு காணும். அதை செய்ய வேண்டிய நாளுக்காக நாம் காத்திருக்க வேண்டாம். இன்றே, இப்போதே செய்வோம். ஈகப் போராளிகள் பால்ராஜ், தீபன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வீரவணக்கம். தமிழீழம் நமது வீரர்களின் கனவு.


சிவதீபனுக்கோர் சபதம் கேள் – வித்யாசாகர்
வன்னித் தீவின் தளபதியே
நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே
ஆணையிரவில் ஆணையிட்டு -
புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா???
எல்லி நகைத்தவரிடம்
சொல்லி அடித்த வீரமே
இருபத்தைந்து ஆண்டில்
புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே – கேட்கிறதா???

சிங்களனாயிரம் சங்கருத்து
முல்லைத் தீவுபிடித்து
புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு
பீரங்கி பரிசளித்த சிவதீபமே – கேட்கிறதா???

ஈழ கனவு சுமந்து
போராட்ட நெருப்பு குழைத்து
வீரமறவர் குருதிகளந்த மண் அணை கட்டி
கிளிநொச்சியை காத்த மாவீரா – கேட்கிறதா???

அர்ப்பணிப்பு, வீரம், உறுதிக்கு வலு கூட்ட
வடப்போர் முனையில் நின்று
பரிசளிப்பு விழா நடத்தி – வீரர்களின் நெஞ்சுக்கு
பேச்சுரம் பாய்ச்சிய கட்டளை தளபதியே – கேட்கிறதா???

அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபனே;

இதயம் முழுதும் ரத்தமின்றி
பெற்ற உற்ற உறவுகளின்றி
ஒற்றை மரமாகவேனும் நிற்போம்,

நினைவில் எமை மறந்தும் ஒழிப்போம் -
உனை மறவோம் கேள்;

ஈழமுள்ளவரை நீயிருப்பாய்
உன் நினைவற்று போகும் முன்
ஈழம் படைப்போம்!

வெள்ளையப் படைக்கு சிக்குண்டு மாய்ந்த
இந்திய மரணங்களை மறந்து
ஈழத்தில் – அடிமை சங்கிலி பூட்ட புகுந்த
அமைதிப் படையென்ன -

ஆயிரம் படை வரட்டும்;
எப்படை வரினும் எம் படை வெல்லும் தினம்
உனக்கே உனக்கே உரித்த-தெம் சபதம் கேள்!!!

------------------------------------------------------------------------------------

யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.

குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.”

தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.

- நன்றி தமிழ்வின்

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP